மகாசமாதி. சமஸ்கிருத மஹா, “பெரிய,” சமாதி. இறுதியான தியானம் அல்லது உணர்வுபூர்வமான இறைத் தொடர்பு கொள்ளும் சமயத்தில், பூரணத்துவம் அடைந்துள்ள குரு, பிரபஞ்ச ஓம்-ல் தன்னை இரண்டறக் கலந்து, ஸ்தூல உடலைத் துறக்கிறார். தனது தேக இல்லத்தை விட்டு நீங்குவதற்காக, இறைவன் தனக்கு நிர்ணயித்துள்ள நேரத்தை ஒரு குரு வழக்கமாக முன்கூட்டியே அறிந்துள்ளார். பார்க்க சமாதி.
மகாவதார பாபாஜி. 1861-ல் லாஹிரி மகாசயருக்கு கிரியாயோக தீட்சை அளித்த மரணமற்ற மகா அவதாரம். இதன் மூலமாக முக்திக்கான புராதன உத்தியை உலகிற்கு மீட்டுக்கொடுத்தார். இமயமலைச் சாரலில் என்றென்றும் இளமையுடன் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தபடி, உலகிற்கு மாறாத அருளாசியை, வழங்கிய வண்ணம் உள்ளார். தீர்க்கதரிசிகளுக்கு, அவர்களுக்கான விசேஷமான தெய்வக் கட்டளைகளை நிறைவேற்ற உதவுவது அவருடைய இறைப்பணியாக இருந்து வருகிறது. அவருடைய ஆன்மீக மகத்துவத்தைக் குறிக்கும் வகையில் பல பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மகா அவதாரமாகிய அவர், எளிதான பாபாஜீ என்ற நாமத்தை பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ளார். சமஸ்கிருதத்திலிருந்து பாபா, “தந்தை” எனவும் பிற்சேர்க்கை ஜீ மரியாதையைக் குறிப்பிடுவதாகவும் பொருள்படும். அவருடைய வாழ்க்கை மற்றும் ஆன்மீகப் பணி பற்றிய இன்னும் அதிக தகவல் ஒரு யோகியின் சுயசரிதத்தில். அவதாரம்.
மனிதன். மனிதன் இந்த வார்த்தை சமஸ்கிருத மனஸ், மனம் — பகுத்தறிவு சிந்தனைக்கான தனித்துவமான மனிதத் திறன் — போன்ற அதே மூலத்திலிருந்து பெறப்பட்டது. யோக விஞ்ஞானம், மனித உணர்வுநிலையை அடிப்படையில் பால்வேறுபாடற்ற ஆன்மா (ஆத்மன்) என்ற கோணத்திலிருந்து கையாள்கிறது. ஆங்கிலத்தில், இந்த உளவியல் மற்றும் ஆன்மீக உண்மைகளை, அதிகப்படியான இலக்கியத் தடுமாற்றம் இல்லாமல் வெளிப்படுத்தும் வேறு எந்த சொற்களும் இல்லாததால், மனிதன் மற்றும் அதன் தொடர்புடைய சொற்களின் பயன்பாடு, இந்த வெளியீட்டில் — மனித இனத்தின் பாதியை மட்டுமே குறிப்பிடுகின்ற, மனிதன் என்ற வார்த்தையின் குறுகிய பிரத்யேக அர்த்தத்தில் அல்லாமல், அதன் பரந்த மூல அர்த்தத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளது
மந்திர யோகம். ஆன்மீக ரீதியாகப் பயன்தரக்கூடிய அதிர்வலை ஆற்றலைப் பெற்றுள்ள மூல-சொல் ஒலிகளை பக்திபூர்வமாக, ஒருமுகப்பட்டு திரும்பத் திரும்பக் கூறுவதால் அடையப்படும் இறைத் தொடர்பு. பார்க்க யோகம்.
ஆச்சாரியார். “ஒர் ஆச்சாரியாருடைய தனிச்சிறப்பான தகுதிகள் பூதவுடல் ரீதியாக அல்லாது, ஆன்மீகரீதியானவை….விரும்பிய மாத்திரத்தே சுவாசமற்ற நிலை (சவிகல்ப சமாதி) க்குள் புகக்கூடிய வல்லமை மூலமாகவும், மற்றும் மாற்ற இயலாத பரவச நிலை (நிர்விகல்ப சமாதி)யை அடைந்திருப்பதின் மூலமாகவும் மட்டுமே ஒருவர் ஆச்சாரியார் என்ற நிரூபணம் கிட்டும்,” என பரமஹம்ஸ யோகானந்தர் சுட்டிக்காட்டியுள்ளார். பார்க்க சமாதி..
மாயை. படைப்பின் கட்டமைப்பிலேயே உள்ளார்ந்து அமைந்துள்ள ஏமாறச் செய்யும் மாய ஆற்றல். இதன் மூலம் ஒன்று பலவாகத் தோற்றமளிக்கும். மாயையானது சார்புத்தன்மை, எதிர்மாறு, மாறுபட்ட தன்மை, இருமைத்தன்மை, எதிரெதிர் நிலைகள் ஆகிய தத்துவமாகும். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் குறிப்பிடும் “சாத்தான்” (ஹீப்ரு மொழியில் அதன் பொருள், பகைவன்”); மேலும் “கொலைபாதகன்” மற்றும் “பொய்யன்,” ஏனென்றால் “அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை” என கிறிஸ்து, சித்திரம் போல வருணித்த “பிசாசு” (யோவான் 8 : 44, பைபிள்). பரமஹம்ஸ யோகானந்தர் எழுதியுள்ளார்: “மாயா என்னும் சமஸ்கிருதச் சொல்லின் பொருள் ‘அளவெடுப்பவர்’; படைப்பில் உள்ள இந்த மாயசக்தி மூலம் அளவிட முடியாதவற்றிலும், பிரிக்க முடியாதவற்றிலும், அளவுகளும் பிரிவுகளும் வெளிப்படையாக அமைந்துள்ளன. மாயை, தானே இயற்கையாகும் — கண்களுக்குத் தோற்றமளிக்கின்ற வெளிஉலகங்கள், தெய்வீகமான நிரந்தரத் தன்மைக்கு மாறுபாடான வகையில் என்றுமே நிலையில்லாமல் மாறுதல் அடைந்து கொண்டே இருப்பவையாகும். “இறைவனின் திட்டத்திலும், திருவிளையாடலிலும் (லீலை), மாயை அல்லது சாத்தானின் ஒரே வேலை என்னவெனில் மனிதனை பரம்பொருளிலிருந்து லோகாயதத்திற்கும், உண்மையிலிருந்து பொய்ம்மைக்கும் திசைதிருப்புவதுதான்.
தியானம். இறைவனை உணர்ந்தறியும் நோக்கத்துடன் கவனத்தை உள்முகப்படுத்தும் ஒருமுகப்பாடு. உண்மையான தியானம் என்பது, உள்ளுணர்வுப் புரிதலின் வாயிலாக இறைவனை உணர்வுபூர்வமாக உணர்ந்தறிவதாகும். பக்தன் புலன்களிலிருந்து தனது கவனத்தைத் துண்டித்து, வெளி உலகின் புலன் நுகர்வுகளினால் முற்றிலும் குழப்பமுறாமல் இருக்கும் அந்த நிலையான ஒருமுகப்பாட்டை ஒருவர் எய்திய பின்னர் மட்டுமே அடையப்படும் நிலை. தியானம், பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் ஏழாவது படி ஆகும். இதன் எட்டாவது நிலை சமாதி, அதாவது, இறைத் தொடர்பு, இறைவனுடனான ஒன்றியத் தன்மை. பார்க்க பதஞ்சலி.
முகுளம். மூளையின் அடிப்பகுதியிலுள்ள (தண்டுவடத்தின் மேல்பகுதி) இந்த மையம்தான், உயிர்ச் சக்தி (பிராணா) தேகத்தினுள் நுழைகின்ற முக்கிய மையம்; இது மூளை-முதுகுத்தண்டின் ஆறாவது மையத்தின் இருக்கை; இதன் பணி, உள்ளுக்குள் பாயும் பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து வழிகாட்டுவதாகும். மூளையின் மிக உயர்ந்த பகுதியில் உள்ள ஏழாவது மையத்தில் (சகஸ்ராரம்) உயிர்ச் சக்தி சேமித்து வைக்கப்படுகின்றது. இந்த சேமிப்புக் களஞ்சியத்திலிருந்து அது உடல் முழுவதும் வினியோகிக்கப்படுகின்றது. முகுளத்தில் உள்ள நுட்பமான மையமானது உயிர்ச் சக்தியின் நுழைவு, சேமிப்பு மற்றும் வினியோகத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய ஸ்விட்சு ஆகும்.
பரமஹம்ஸர். ஓர் ஆன்மீகக் குரு என்பதைக் குறிக்கும் ஆன்மீகப் பட்டப்பெயர். தகுதி பெற்றுள்ள ஒரு சீடருக்கு ஓர் உண்மையான குருவினால் மட்டுமே இது வழங்கப்படும். பரம-ஹம்ஸ என்பது “ஒப்பற்ற அன்னம்” எனப் பொருள்படும். இந்து சாத்திரங்களில் ஹம்ஸ அல்லது அன்னம், ஆன்மீக விவேகத்தை அடையாளமாகக் குறிக்கின்றது. சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர், தனது அன்பிற்குரிய சீடர் யோகானந்தருக்கு 1935-ல் இந்தப் பட்டத்தை சூட்டினார்.
பரமகுரு. “முந்தைய குரு” எனப் பொருள்படும்; ஒரு குருவின் குரு ஆவார். யோகத் தன்மைகளுக்கும் / ஸெல்ஃப்-ரியலைசேஷனை சேர்ந்தவர்களுக்கும் (பரமஹம்ஸ யோகானந்தரின் சீடர்கள்) பரமகுரு என்பது சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வரைக் குறிக்கின்றது. பரமஹம்ஸருக்கு, அது லாஹிரி மகாசயரைக் குறிக்கின்றது. மகாவதார பாபாஜி, பரமஹம்ஸருடைய பரம்-பரமகுரு ஆவார்.
பதஞ்சலி. யோக மார்க்கத்தை எட்டு அங்கங்களாகப் பிரித்து அவற்றின் தத்துவங்களை விளக்கியுள்ள யோக சூத்திரம் என்ற நூலை எழுதியுள்ள புராதன முனிவர், புகழ்பெற்ற யோக விற்பன்னர். எட்டு அங்கங்களாவன: 1. ஒழுக்க நடத்தை (யமம்), 2. சமய அனுஷ்டானங்கள் (நியமம்), 3. தியான அமர்வுநிலை (ஆசனம்), 4. உயிர்ச் சக்தி கட்டுப்பாடு (பிராணாயாமம்), 5. மனத்தை உள்முகப்படுத்துதல் (பிரத்யாஹாரம்), 6. ஒருமுகப்படுத்துதல் (தாரணை), 7. தியானம், 8. இறைவனுடனான ஐக்கியம் (சமாதி).
பிரக்ருதி. பிரபஞ்ச இயற்கை; பொதுவாக, புறஉருவப்படுத்தவும் செய்து, பிரபஞ்சத்தின் மும்மை வெளிப்பாடாகவும் (காரண, சூட்சும மற்றும் ஸ்தூல) மனிதனின் பிண்ட வடிவமாகவும் ஆகின்ற பரம்பொருளிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அறிவார்ந்த, படைக்கும் அதிர்வு சக்தி. தனிப்பட்ட வகையில் குறித்துக்காட்டுபவை: மகா-பிரக்ருதி என்பது இறைவனின் மூலாதாரமான வேறுபடுத்தப்படாத படைப்பாற்றல் கொண்ட அறிவுத்திறன், படைப்புத்திறனுள்ள இயற்கை அன்னை அல்லது பரிசுத்த ஆவி. அது தனக்கே உரிய சுயத்தின் பிரபஞ்ச அதிர்வு மூலமாக அனைத்து படைப்பையும் உருவெளிப் படுத்துகிறது. பர-பிரக்ருதி (பரிசுத்தமான இயற்கை) மற்றும் அபர-பிரக்ருதி (அசுத்தமான இயற்கை) ஆகியவை பரிசுத்த ஆவி மற்றும் சாத்தான் எனும் கிறிஸ்தவ கலைச்சொற்களோடு தொடர்பு படுத்துகின்றன — முறையே, படைப்பில் உள்ளார்ந்துள்ள இறைவனின் அதிர்வுறும் இருப்பை வெளிப்படுத்துகின்ற படைப்பு சக்தி மற்றும் இறைவனின் சர்வவியாபகத்தன்மையை மறைக்கின்ற பிரபஞ்ச மாயையின் இருண்ட சக்தி.
பிராணன். இந்துமத சாத்திர ஆய்வு நூல்களில் பிராணன் எனத் தொகுத்துக் கூறப்படுகின்ற, ஜீவனை நிர்மாணிக்கின்ற, அணு சக்தியையும் விட நுண்ணிய அறிவாற்றல் பொறிகள். இவற்றை பரமஹம்ஸ யோகானந்தர் “உயிர்மின்மங்கள்” என மொழி பெயர்த்துள்ளார். சாராம்சத்தில், இறைவனின் உறைவிக்கப்பட்ட எண்ணங்கள்; சூட்சும உலகிலுள்ள மூலப்பொருள் மற்றும் ஸ்தூல பிரபஞ்சத்தின் உயிர்தத்துவம். ஸ்தூல உலகில் இரண்டு வகையான பிராணன் உள்ளது. பிரபஞ்சத்தில் எங்கும் வியாபித்து, அனைத்துப் பொருட்களையும் கட்டமைத்து, தாங்கிக் கொண்டிருக்கின்ற பிரபஞ்ச அதிர்வலை சக்தி; 2. ஒவ்வொரு மனித தேகத்தையும் ஐந்து உயிரோட்டங்கள் அல்லது செயல்கள் மூலமாக ஊடுருவி, தாங்கி இருக்கின்ற குறிப்பிட்ட பிராணன் அல்லது சக்தி. ஜந்து உயிரோட்டங்களானவை: பிராணா உயிரோட்டம்; திடப்படுத்தும் பணியை ஆற்றுகிறது; வியானா உயிரோட்டம், இரத்த சுற்றோட்டம்; சமானா உயிரோட்டம், தன்மயமாதல்; உதானா உயிரோட்டம், வளர்சிதை மாற்றம்; மற்றும் அபானா உயிரோட்டம், கழிவுவெளியேற்றம்.
பிராணாயாமம். பிராணனை (தேகத்தில் ஜீவனை செயல்படுத்தியும் தாங்கிக் கொண்டும் உள்ள படைப்பு அதிர்வலை அல்லது சக்தி) உணர்வுபூர்வமாகக் கட்டுப்படுத்துவது. பிராணாயாமத்தின் யோக விஞ்ஞானம், மனிதனை தேக உணர்வு நிலையுடன் பிணைக்கும் மனத்தை ஜீவ செயல்பாடுகளிலிருந்தும், புலன் நுகர்வுகளிலிருந்தும் உணர்வுபூர்வமாக துண்டிக்கின்ற நேரடியான வழி. இவ்வாறு பிராணாயாமம் மனிதனுடைய உணர்வுநிலையை இறைவனுடன் தொடர்பு கொள்வதற்கு விடுவிக்கின்றது. ஆன்மாவையும் மெய்ப்பொருளையும் ஒன்றிணைக்கும் சகல விஞ்ஞான உத்திகளும் யோகம் என வகைப்படுத்தப் படலாம். அத்துடன் பிராணாயாமம், தெய்வீக ஐக்கியத்தைப் பெறுவதற்கான மகத்தான யோகமுறை ஆகும்.