ராஜயோகம். இறை ஐக்கியத்திற்கான “ராஜ” அல்லது மிக உயர்ந்த மார்க்கம். இது, விஞ்ஞானபூர்வமான தியானம்தான் இறை அனுபூதிக்கான இறுதியான உபாயம் எனப் போதிக்கிறது, அத்துடன் பிற எல்லா யோக முறைகளிலிருந்தும் மிக உயர்ந்த இன்றியமையாத கூறுகளை உள்ளடக்கியுள்ளது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ராஜயோகமானது, கிரியா யோக தியான அடித்தளத்தின் அடிப்படையில் உடல், மனம் மற்றும் ஆன்ம விரிவாக்கத்தை முழுநிறைவடையச் செய்ய வழிவகுக்கும் வாழ்க்கை முறையை விவரிக்கிறது. பாரக்க யோகம். யோகம்.
ராஜரிஷி ஜனகானந்தர் (ஜேம்ஸ் ஜே.லின்). பரமஹம்ஸ யோகானந்தருடைய மேன்மையான சீடர் மற்றும் அவருக்கு அடுத்து, 1955, பிப்ரவரி 20-அன்று தான் மறையும் வரை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் முதல் தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் பொறுப்பு வகித்தவர். திரு.லின், பரமஹம்ஸ யோகானந்தரிடமிருந்து முதலில் 1932-ல் கிரியா யோக தீட்சையைப் பெற்றார்; குருதேவர் 1951-ல் அவருக்கு ராஜரிஷி ஜனகானந்தர் என்ற சன்னியாசப் பெயரை வழங்கும் வரை, அவருடைய ஆன்மீக முன்னேற்றமானது, குருதேவர் அவரை அன்புடன் “ஸெயின்ட் லின்” என்று குறிப்பிடும் அளவுக்கு துரிதமாக இருந்தது.
மறுபிறவி. மானுடர் பரிணாம விதியினால் கட்டாயப்படுத்தப்பட்டு, படிப்படியாக உயர்ந்த பிறவிகளில்—தவறான செயல்களாலும், ஆசைகளாலும், தாமதிக்கப்பட்டும், ஆன்மீகப் பெருமுயற்சியினால் வளர்ச்சி அடைந்தும் — ஆத்ம-ஞானமும், இறை ஐக்கியமும் அடையப்படும் வரை, மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றனர் என்ற கோட்பாடு. இங்ஙனம் அழியும் மனித உணர்வு நிலையின் வரம்புகள் மற்றும் குறைபாடுகளின் எல்லையைத் தாண்டி, ஆன்மா, வலுக்கட்டாயமான மறுபிறவியிலிருந்து என்றென்றைக்குமாக விடுதலைப் பெறுகின்றது. “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன். அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை (வெளிப்படுத்தின விசேஷம் 3 : 12, பைபிள்).
ரிஷிகள். தீர்க்கதரிசிகள், தெய்வீக ஞானத்தை வெளிப்படுத்தும் மேன்மையானவர்கள்; குறிப்பாக, உள்ளுணர்வுபூர்வமாக வேதங்கள் வெளிப்படுத்தப்பட்ட உள்ளொளி பெற்ற புராதன இந்திய ஞானிகள்.
சாதனா. ஆன்மீக ஒழுக்க மார்க்கம். குரு, தனது சீடர்களுக்கு வழங்கும் குறிப்பிட்ட போதனைகள் மற்றும் தியானப் பயிற்சிகள். இவற்றை விசுவாசத்துடன் பின்பற்றுவதால் இறுதியாக அவர்கள் இறைவனை உணர்ந்தறிகிறார்கள்.
சமாதி. பதஞ்சலி முனிவர் வரையறுத்துள்ளவாறு, அஷ்டாங்க யோகத்தின் மிக உயர்ந்த நிலை. தியானம் செய்பவரும், தியானத்தின் செயல்முறையும் (உள்முகப்படுவதன் மூலம் புலன்களிலிருந்து மனம் பின்னிழுக்கப்படுதல்), தியானத்தின் குறிக்கோளும் (இறைவன்) ஒன்றாக ஆகும்பொழுது சமாதிநிலை பெறப்படுகின்றது. “இறைவனுடன் தொடர்பு கொள்ளும் ஆரம்ப நிலைகளில்,(சவிகல்ப சமாதி) ஒரு பக்தனுடைய உணர்வுநிலை, பிரபஞ்சப் பரம்பொருளில் இரண்டறக் கலக்கிறது: அவனது. உயிர்ச் சக்தி உடலிலிருந்து பின்னிழுக்கப்படுவதால், அவன் உடல் “இறந்தது” போல் அல்லது அசையாமலும் விறைப்பானதாகவும் தோற்றமளிக்கிறது. உயிர்த்துடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தன் உடலின் நிலையை அந்த யோகி முழுவதும் உணர்ந்தே இருப்பான். ஆயினும் அவன் இன்னும் உயர்ந்த ஆன்மீக நிலைகளுக்கு முன்னேறும் பொழுது (நிர்விகல்ப சமாதி), அவன் சாதாரண விழிப்பு உணர்வுநிலையில், மிகுந்த சிரமமான உலகக் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது கூட உடல் உறுதிப்பாடு இன்றி கடவுளுடன் தொடர்பு கொள்கிறான் என பரமஹம்ஸ யோகானந்தர் விளக்கியுள்ளார். இரு நிலைகளுமே பரம்பொருளின் என்றும் புதிய பேரானந்தத்துடன் ஒன்றிணைந்துள்ள குணாதிசயத்தைக் கொண்டுள்ளன; ஆனால் மிகவும் உயர்வாக முன்னேறியுள்ள மகான்களால் மட்டுமே நிர்விகல்ப சமாதி அனுபவிக்கப்படுகிறது.
சனாதன தர்மம். சொல்லின் நேரடிப் பொருள் “நிரந்தரமான மதம்.” வேத போதனைகளின் முழுமைக்கும் அளிக்கப்பட்ட பெயர். இது, சிந்து நதிக்கரைகளில் வாழ்ந்த மக்களை கிரேக்கர்கள், இந்துக்கள் அல்லது ஹிந்துக்கள் எனப் பெயர் குறிப்பிட்ட பிறகு ஹிந்துயிஸம் என அழைக்கப்படலாயிற்று, பார்க்க தர்மம்.
சாத்தான். சாத்தான். ஹீப்ரு மொழியில் நேரடிப் பொருள், “பகைவன்.” எல்லைக்குட்பட்ட தன்மையைப் பற்றிய மற்றும் இறைவனிடமிருந்து பிரிந்துள்ள தன்மையைப் பற்றிய ஆன்மீகமற்ற உணர்வநிலையுடன் எல்லாவற்றையும், எல்லோரையும் ஏமாற்றி வைத்திருக்கும் உணர்வுபூர்வமான மற்றும் சுதந்திரமான உலகளாவிய சக்தியே சாத்தான். இதை நிறைவேற்றுவதற்கு சாத்தான், மாயையையும் (பிரபஞ்ச மாயை) அவித்யையையும் (தனிமனித மாயை, அஞ்ஞானம்) ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறான். பார்க்கமாயை. மாயை.
ஸத்-சித்-ஆனந்தம். இறைவனைக் குறிப்பிடும் சமஸ்கிருதச் சொல். இது பரம் பொருளின் அடிப்படை இயல்பாகிய சாசுவத பேரிருப்பு அல்லது சத்தியம் (ஸத்), எல்லையற்ற உணர்வுநிலை (சித்), மற்றும் என்றும் புதிய ஆனந்தத்தை (ஆனந்தம்) வெளிப்படுத்துகிறது.
ஸத்-தத்-ஓம். ஸத், சத்தியம், தனிமுதல், பேரானந்தம்; தத், உலகளாவிய அறிவாற்றல் திறம் அல்லது உணர்வுநிலை; ஓம், பிரபஞ்ச அறிவார்ந்த படைப்பு அதிர்வலை, இறைவனைக் குறிக்கும் வார்த்தை-அடையாளம், பார்க்க ஓம் மற்றும் மும்மை.
ஆத்மன். சாதாரணமான நான் எனக் குறிப்பிடப்படும் மனித தனித்தன்மை அல்லது அகந்தையிலிருந்து வேறுபடுத்தப்பட்டதாக உள்ள ஆன்மா அல்லது ஜீவனைக் குறிப்பிடப்பயன்படுகிறது. என்றும்-உள்ள, எல்லாம்-அறியும், என்றும்-புதிய ஆனந்தம் ஆகிய அடிப்படைத் தன்மைகளைக் கொண்ட மெய்ப்பொருள் தனிப்படுத்தப்பட்டதுதான் ஆன்மா ஆகும். ஆன்மாவினுடைய இயல்பாகிய இந்தத் தெய்வீகக் குணங்களைப் பற்றிய அனுபவம் தியானத்தின் மூலமாக அடையப்படுகிறது.
ஆன்ம-அனுபூதி. ஆன்ம-அனுபூதியை பரமஹம்ஸ யோகானந்தர் பின்வருமாறு வரையறுத்துள்ளார்: “ஆன்ம-அனுபூதி என்பது— உடலிலும், மனத்திலும், ஆன்மாவிலும் — இறைவனின் சர்வவியாபகத் தன்மையுடன் நாம் ஒன்றாகி இருக்கிறோம் என்பதையும்; அது நம்மிடம் வருவதற்காக நாம் பிரார்த்திக்க வேண்டியதில்லை என்பதையும்; நாம் அதனருகிலேயே எப்பொழுதும் இருக்கிறோம் என்பது மட்டுமன்றி, இறைவனின் சர்வ வியாபகமே நம்முடைய சர்வ வியாபகம் என்பதையும்; நாம் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் அதே அளவு அவனுடைய ஒரு பகுதியாகவே விளங்குகிறோம் என்பதையும் அறிதலாகும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய அறிதலை மேம்படுத்திக் கொள்ளுவதாகும்.
ஸெல்ஃப்-ரியலைசேஷன். பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட சொஸைடியான ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ஐ (எஸ் ஆர் எஃப்) குறிப்பிடுவதற்கான ஒரு சுருக்கமான வழியாகும்; இயல்பான பேச்சுக்களில் பெரும்பாலும் அவரால் பயன்படுத்தப்பட்டது; உதாரணம், “ஸெல்ஃப்-ரியலைசேஷன் போதனைகள்”; லாஸ் ஏஞ்ஜலீஸ்-ல் உள்ள “ஸெல்ஃப்- ரியலைசேஷன் தலைமையகம்”; இத்யாதி.
ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். ஆன்மீகத் தத்துவங்களையும், கிரியா யோக தியான உத்திகளையும் உலகமெங்கும் பரப்புவதற்காகவும் எல்லா சமயங்களுக்கும் அடிப்படையாக உள்ள ஒரே மெய்ப்பொருளைப் பற்றிய பெரும் புரிதலை அனைத்து இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சார்ந்த மக்களிடையே வளர்ப்பதற்கும் பரமஹம்ஸ யோகானந்தரால் 1920-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (1917-ல் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா எனவும்) நிறுவப்பட்ட சர்வதேச சமயசார்பற்ற சொஸைடி. அவரது “ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் இலட்சியங்களிலும் குறிக்கோள்களிலும்” பரமஹம்ஸ யோகானந்தரது சொஸைடிக்கான இறைப்பணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் என்ற பெயர் குறிப்பிடும் பொருளை பரமஹம்ஸ யோகானந்தர் விளக்கியுள்ளார். “ஆன்ம-அனுபூதியின் மூலமாக இறைவனுடன் தோழமை, மற்றும் உண்மையைத் தேடும் அனைத்து ஆன்மாக்களுடனும் நட்புறவு.”
சங்கரர், சுவாமி. சில சமயங்களில் ஆதி (முதல்) சங்கராச்சாரியர் (சங்கர + ஆச்சாரியர், “ஆசிரியர்”) எனக் குறிப்பிடப்படுகிறார்; இந்தியாவின் மிக்க புகழ்வாய்ந்த தத்துவஞானி, அவரது காலத்தை அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை; அனேக அறிஞர்கள் அவருக்கு எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தை குறிப்பிடுகின்றனர். இறைவன் ஓர் எதிர்மறையான கற்பனைக் கருத்து அல்ல, ஆனால் நிச்சயமான, நிரந்தரமான, எங்கும் நிறைந்துள்ள என்றும்-புதிய பேரானந்தம் என அவர் விளக்கினார். சங்கரர் புராதன சுவாமி பரம்பரையை புனர்நிர்மாணம் செய்தார். மேலும் நான்கு “மகத்தான மடங்களை (ஆன்மீகக் கல்விக்கான சன்னியாச மையங்கள்) நிறுவினார். இவற்றின் மடாதிபதிகளின் வரிசையில் வரும் குருமார்கள் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் என்ற பட்டத்தை ஏற்கின்றனர். ஜகத்குரு என்பதன் பொருள் “உலக ஆசிரியர்” ஆகும்.
சித்தர். சொல்லின் நேர்ப்பொருள், “வெற்றி பெற்ற ஒருவர்.” ஆன்ம-அனுபூதி அடைந்த ஒருவர்.
ஆன்மா. தனிப்படுத்தப்பட்ட பரம்பொருள். ஆன்மா என்பது, மனிதன் மற்றும் உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளின் உண்மையான மற்றும் அழிவற்ற தன்மை ஆகும். அது காரண, சூட்சும மற்றும் ஸ்தூல உடல்கள் எனும் ஆடையால் தாற்காலிகமாக மட்டுமே உறையிடப்பட்டுள்ளது. ஆன்மாவின் இயல்புத் தன்மை பரம்பொருள்: என்றும்-வாழும், என்றும்-உணர்வுடன் இருக்கும், என்றும்-புதிய ஆனந்தமாகும்.
ஆன்மீகக் கண். ஆன்மீகக் கண். புருவங்களுக்கு இடையே கிறிஸ்து (கூடஸ்த) மையத்தில் (ஆக்ஞா சக்கரம்) உள்ள உள்ளுணர்வு மற்றும் எங்கும் நிறைந்த அறியும் சக்தி படைத்த ஒற்றைக் கண். ஆழ்ந்து தியானிக்கும் பக்தன் ஆன்மீகக் கண்ணை, தங்கமய ஒளியாலான வட்டத்தினால் சூழப்பட்ட பல்வண்ணமய நீல ஒளிக் கோளத்தின் மையத்தில் உள்ள ஐந்து முனை கொண்ட வெண்ணிற நட்சத்திரமாகக் காண்கிறான். மிகச் சிறிய பிரபஞ்சமாக, இந்த வடிவங்களும் நிறங்களும் முறையே சிருஷ்டியின் அதிர்வலைப் பிரதேசம் (பிரபஞ்ச இயற்கை, பரிசுத்த ஆவி); புத்திரன் அல்லது சிருஷ்டியிலுள்ள இறைவனின் அறிவுத்திறம்,
(கிறிஸ்து உணர்வுநிலை);மற்றும் அனைத்து சிருஷ்டிக்கும் அப்பாலுள்ள அதிர்வலையற்ற பரம்பொருள் (இறைவனாகிய பரமபிதா) ஆகியவற்றை உருவகமாகக் குறிக்கின்றன. ஆன்மீகக் கண்ணானது, இறுதியான இறை உணர்வுநிலைகளுக்குள் புகுவதற்கான நுழைவாயில் ஆகும். இயேசுவும் கூட ஆன்மீகக் கண்ணைப் பற்றி கூறியிருக்கிறார்: “உன் கண் ஒன்றாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். . . . ஆகையால், உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கை யாயிரு” (லூக்கா 11 :34 – 35, பைபிள்).
ஸ்ரீ யுக்தேஸ்வர், சுவாமி. சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி (1855 – 1936), இந்தியாவின் ஞான அவதாரம்; பரமஹம்ஸ யோகானந்தரின் குருவும், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் கிரியாபான் அங்கத்தினர்களின் பரமகுருவும் ஆவார். ஸ்ரீ யுக்தேஸ்வர், லாஹிரி மகாசயரின் சீடராவார். லாஹிரி மகாசயருடைய குருவான மகா அவதாரமாகிய பாபாஜியின் கட்டளைக்கிணங்க அவர் ஹோலி சயின்ஸ் என்ற நூலை, எழுதினார். இந்நூல் இந்து மற்றும் கிறிஸ்துவ சாத்திரங்களின்’ அடிப்படையான ஒற்றுமையை விளக்கும் ஆய்வுநூலாக உள்ளது. மேலும் அவர், பரமஹம்ஸ யோகானந்தருக்கு, கிரியா யோகத்தைப் பரப்புவதான, அவருடைய ஆன்மீக உலகப் பணிக்கு பயிற்சி அளித்தார். பரமஹம்ஸர்,ஒரு யோகியின் சுயசரிதத்தில் ஸ்ரீ யுக்தேஸ்வருடைய வாழ்க்கையை அன்புடன் விவரித்துள்ளார்.
உயர் உணர்வுநிலை மனம். நேரடியாக உண்மையை அறிந்துணரும் ஆன்மாவின் அனைத்தையும்-அறியும் சக்தி; உள்ளுணர்வு.
உயர் உணர்வுநிலை உயர் உணர்வுநிலை. ஆன்மாவின் பரிசுத்தமான, உள்ளுணர்வுபூர்வமான, அனைத்தையும்-அறியும், என்றும்-ஆனந்தமயமான உணர்வுநிலையாகும். சில சமயங்களில் தியானத்தில் அனுபவிக்கப்படும் அனைத்து வகையான சமாதி நிலைகளை குறிப்பிடுவதற்கு இச்சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் குறிப்பாக, ஒருவர், ‘நான்’ என்னும் அகந்தை உணர்வைக் கடந்து தன்னையே இறைவனின் பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ள ஆன்மா என்று உணர்கின்ற சமாதியின் முதலாவது நிலையைக் குறிப்பிடுகிறது. அதன் பின்னர், அனுபூதியின் மிக உயர்ந்த நிலைகளான கூடஸ்த சைதன்யம் (கிறிஸ்து உணர்வுநிலை) மற்றும் பிரபஞ்ச உணர்வுநிலை ஆகியவை தொடர்கின்றன.
சுவாமி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் மாற்றி அமைக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த சன்னியாசப் பரம்பரையில் ஓர் அங்கத்தினர். ஒரு சுவாமி பிரமச்சரியத்திற்கான மற்றும் உலகத் தளைகளையும் பேராவல்களையும் துறப்பதற்கான சம்பிரதாய விரதத்தை மேற்கொள்கிறார்; அவர் தியானிப்பதற்கும், மற்ற ஆன்மீகப் பயிற்சிகளுக்கும், மனித குலத்திற்கு சேவை செய்வதற்கும் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார். வணங்கத்தக்க சுவாமி பரம்பரையில் பத்து வகைப்பட்ட பட்டப் பெயர்கள் உள்ளன; அவை கிரி பூரி, பாரதி, தீர்த்த, சரஸ்வதி மற்றும் இதர பெயர்கள். சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வரும் பரமஹம்ஸ யோகானந்தரும் கிரி (மலை) பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சுவாமி என்னும் சமஸ்கிருதச் சொல் “ஆன்மாவுடன் (ஸ்வா) ஒன்றாகி இருப்பவர்” எனப் பொருள்படும்.