“அமெரிக்கா! நிச்சயமாக இந்த மக்கள் அமெரிக்கர்கள் தான்! என் உள்மனத் தோற்றத்தில் மேலை நாட்டு முகங்களின் ஒரு பரந்த காட்சி தென்பட்டபொழுது இந்த எண்ணம்தான் தோன்றியது.
ராஞ்சி பாடசாலையின் சரக்கு அறையில் தூசி படிந்த சில பெட்டிகளின் பின்னால் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தேன். சிறுவர்களின் நடுவில், வேலை மிகுந்த அந்த வருடங்களில் தனிமையான ஓர் இடம் காண்பதுகூட மிகக் கடினம்.!
அக்காட்சி தொடர்ந்தது. பெருந்திரளான மக்கள் என்னை உற்று நோக்கியவாறு, நடிகரைப் போன்று மனமென்னும் மேடையில் தோன்றிச் சென்றவாறு இருந்தனர்.
சரக்கு அறையின் கதவு திறந்தது. வழக்கப்படியே இளஞ்சிறுவர்களில் ஒருவன் நான் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டான்.
“விமல், இங்கே வா,” நான் மகிழ்ச்சியுடன் கூறினேன். “உனக்கு ஒரு செய்தி சொல்லப் போகிறேன்; இறைவன் என்னை அமெரிக்காவிற்கு அழைக்கிறார்!”
யோகானந்தர் தனது உலகளாவிய பணியின் பொருட்டு மேற்கு நாடுகளுக்குச் சென்றதை நினைவுகூரும் விதமாக 1950களில் அதே இடத்தில் ஒரு சிறிய தியான மந்திர் கட்டப்பட்டது. இந்த மந்திரில் 1960 களில் ஒரு மாற்றமும் 1980 களில் மற்றுமொன்றும் செய்யப்பட்டது.
யோகானந்தரின் 100வது அவதார தினத்தில் அவருக்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக, இந்த புனித இடத்தில் ஒரு சிறப்பு ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று ஸ்ரீ தயா மாதாஜி விரும்பினார்.
1993 இல், யோகானந்தரின் அவதார தினத்தன்று, முன்னாள் YSS தர்மாச்சார்யா ஸ்வாமி பவானந்த கிரி ஸ்மிருதி மந்திரின் அடிக்கல் நாட்டினார். இந்த மகத்தான திட்டத்திற்காக ராஜஸ்தானில் இருந்து அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் குழு அழைக்கப்பட்டது; பளிங்குக் கற்களால் குவிமாடம் மற்றும் தூண்களை செதுக்குவது அவர்களின் வேலையாக இருந்தது. பீடம் மற்றும் தாமரை மலர்களை உருவாக்கும் பணி நிபுணத்துவம் பெற்ற மற்றுமொரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மார்ச் 22, 1995 அன்று, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) நிறுவப்பட்டதன் 78 வது ஆண்டு நிகழ்ச்சியில், ராஞ்சி, யோகதா சத்சங்க கிளை மடத்தில் வெள்ளை பளிங்குக் கற்களாலான அழகிய ஸ்மிருதி மந்திர் அர்ப்பணிக்கப்பட்டது. அனைவரின் தனிப்பட்ட தியானங்களுக்கான ஸ்மிருதி மந்திரை குருதேவரின் நேரடி சீடர்களில் ஒருவரான ஸ்வாமி ஆனந்தமோய் கிரி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியை 1,200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் கண்டு களித்தனர். இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஸ்மிருதி மந்திர் சமர்பண் சங்கம் என்ற ஒரு வார கால நிகழ்ச்சி நடைபெற்றது.
1995 ஆம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்டதிலிருந்து, ஸ்மிருதி மந்திர் அதன் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் கட்டடக்கலை அழகு ஆகிய இரண்டிற்கும் பல ஆண்டுகளாக ராஞ்சி, யோகதா சத்சங்க கிளை மடத்திற்கு வருகை தரும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த மந்திர் நாள் முழுவதும் திறந்திருக்கும், மேலும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களால் தனிப்பட்ட தியானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.