ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துக்களில் இருந்து சில பகுதிகள்
உண்மையான வெற்றி
ஆற்றல்மிக்க இச்சாசக்தியைப் பயன்படுத்துதல்
முடியாதது என்று எதுவுமில்லை, நீங்கள் அவ்வறு எண்ணினாலன்றி.
ஒரு நிலையற்ற இருப்பாக நீங்கள் வரையறைக்குட்பட்டவர்கள், ஆனால் இறைவனின் குழந்தையாக நீங்கள் வரம்பற்றவர்கள்….உங்கள் கவனத்தை இறைவன் மீது குவியுங்கள், மற்றும் எந்தத் திசையிலும் பயன்படுத்த நீங்கள் விரும்பும் சக்தி அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள்.
உங்கள் அகத்தேயுள்ள இச்சாசக்தியே இறைவனது பிரதிபிம்பத்தின் கருவி. இச்சாசக்தியில் இருப்பது அவனுடைய வரம்பற்ற சக்தி, இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் கட்டுப்படுத்தும் சக்தி ஆகும். நீங்கள் அவனுடைய பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் ஆசைப்படும் எதையும் கொண்டுவரும் அந்தச் சக்தி உங்களுடையதே.
தோல்வியை ஆக்கப்பூர்வமாக கையாளுதல்
தோல்விக்காலமே வெற்றியின் விதைகளை விதைக்கும் மிகச்சிறந்த நேரம். சூழ்நிலைகள் எனும் சம்மட்டி உங்களைக் காயப்படுத்தக் கூடும், ஆனால் உங்கள் தலையை நிமிர்த்தி வைத்திருங்கள். நீங்கள் எத்தனை முறை தோல்வியடைந்தாலும் சரி, எப்போதும் மற்றுமொரு முறை முயற்சி செய்யுங்கள். உங்களால் இனிமேலும் போராட முடியாது என்று நீங்கள் எண்ணும் போதோ அல்லது உங்களால் முடிந்த அளவிற்கு நீங்கள் செய்து விட்டீர்கள் என்று நீங்கள் எண்ணும் போதோ போராடுங்கள், அல்லது உங்களுடைய முயற்சிகள் வெற்றியால் முடிசூட்டப்படும் வரை போராடுங்கள்.
வெற்றியின் உளவியலைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். சிலர், “தோல்வியைப் பற்றிப் பேசவே பேசாதீர்கள்,” என்று ஆலோசனை கூறுவர். ஆனால் அது மட்டுமே உதவாது. முதலில், உங்களுடைய தோல்வியையும் அதன் காரணங்களையும் ஆய்வு செய்யுங்கள், அனுபவத்திலிருந்து பயனடையுங்கள், மற்றும் அதன்பின் அதைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் நிராகரித்து விடுங்கள். அவர் பலமுறை தோல்வியடைந்தாலும் கூட, தொடர்ந்து கடுமுயற்சி செய்து கொண்டிருப்பவர், அகத்தே தோல்வியடையாமல் இருப்பவர் உண்மையில் ஒரு வெற்றிகரமான நபர் ஆவார்.
வாழ்க்கை இருண்டதாக இருக்கக்கூடும், இடர்ப்பாடுகள் வரக்கூடும், வாய்ப்புகள் பயன்படுத்தப்படாமல் கைநழுவக்கூடும், ஆனால் ஒருபோதும் உங்களுக்குள், “எனக்கு எல்லாம் முடிந்து விட்டது, இறைவன் என்னைக் கைவிட்டு விட்டான்,” என்று கூறாதீர்கள். யாரால் அந்த வகையான நபருக்கு எதையேனும் செய்ய முடியும்? உங்கள் குடும்பம் உங்களைக் கைவிடலாம்; நற்பேறுகள் உங்களை விட்டுச் செல்வதாகத் தோன்றலாம்; மனிதனின் மற்றும் இயற்கையின் எல்லா ஆற்றல்களும் உங்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கலாம்; ஆனால் உங்கள் அகத்தேயுள்ள தெய்வீக முனைப்பால் உங்களுடைய கடந்தகாலத் தவறான செயல்களால் உருவாக்கப்பட்ட ஊழ்வினையின் ஒவ்வொரு படையெடுப்பையும் உங்களால் முறியடித்து விண்ணுலகத்தினுள் வெற்றி வாகை சூடியவராக முன்னேற முடியும்.
நீங்கள் எத்தனை முறை தோல்வியடைந்தாலும் சரி, தொடர்ந்து முயற்சி செய்த வண்ணம் இருங்கள். என்ன நடந்தாலும் சரி, “பூமி தகர்க்கப்படலாம், ஆனால் நான் என்னால் முடிந்த மிகச்சிறந்ததை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்,” என்று நீங்கள் மாறாதபடி தீர்மானித்திருந்தால், நீங்கள் ஆற்றல்மிக்க இச்சாசக்தியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள், மற்றும் நீங்கள் வெற்றியடைவீர்கள். அந்த ஆற்றல்மிக்க இச்சாசக்தியே ஒரு மனிதனைச் செல்வந்தனாகவும் மற்றொரு மனிதனை வலிமையானவனாகவும் வேறொரு மனிதனை ஒரு மகானாகவும் ஆக்குகிறது.
ஒருமுகப்பாடு—வெற்றிக்கு ஒரு திறவுகோல்
வாழ்வில் பல தோல்விகளின் முக்கியக் காரணம் ஒருமுகப்பாட்டுக் குறைபாடு ஆகும். கவனம் ஒரு தேடும் சுற்றொளியைப் போன்றது; அதன் ஒளிக்கற்றை ஒரு விரிந்த பகுதியின் மீது பரவும் போது, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது குவிக்கும் அதன் சக்தி பலவீனமடைகிறது, ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பொருளின் மீது குவிக்கப்பட்டால், அது சக்திவாய்ந்ததாக ஆகிறது. பெரிய மனிதர்கள் ஒருமுகப்பாட்டு மனிதர்கள் ஆவர். அவர்கள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தின் மீது தமது முழு மனத்தையும் வைக்கின்றனர்.
ஒருவர் ஒருமுகப்பாட்டு அறிவியல் வழிமுறையை (யோகதா சத்சங்கப் பாடங்களில் கற்பிக்கப்பட்ட வழிமுறை) அறிந்திருக்க வேண்டும்; அதன்மூலம் அவர் தன் கவனத்தைத் திசைதிருப்பும் பொருட்களிலிருந்து விலக்கி ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தின் மீது குவிக்கலாம். ஒருமுகப்பாட்டுச் சக்தியின் மூலம், மனிதனால் தான் விரும்புவதை நிறைவேற்றும் மனத்தின் சொல்லொணாச் சக்தியைப் பயன்படுத்த முடியும், மற்றும் அவனால் தோல்வி நுழையக் கூடிய எல்லா வாயில்களையும் காவல் காக்க முடியும்.
நாம் நமது அருகாமையில் உள்ள பிரச்சனையை அல்லது கடமையை ஒருமுகப்பட்ட சக்தியுடன் அணுகி, அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இது நம் வாழ்வின் தத்துவமாக இருக்க வேண்டும்.
பெரும்பாலானோர் எல்லாவற்றையும் அரை-மனதுடன் செய்கின்றனர். அவர்கள் தமது கவனத்தின் சுமார் பத்தில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால்தான் அவர்களிடம் வெற்றிக்கான சக்தி இருப்பதில்லை….எல்லாவற்றையும் கவனச் சக்தியுடன் செய்யுங்கள். அந்தச் சக்தியின் முழு ஆற்றலும் தியானத்தின் வாயிலாக அடையப்பட முடியும். நீங்கள் இறைவனின் அந்தக் குவிக்கும் சக்தியைப் பயன்படுத்தும் போது, அதை உங்களால் எதன்மீதும் வைத்து ஒரு வெற்றியைப் பெற முடியும்.
படைப்பாற்றல்
பன்முக வெற்றியை உருவாக்குதல்
மகா ஆசான்கள் நீங்கள் அலட்சியமாக இருக்கும்படி ஒருபோதும் ஆலோசனை கூற மாட்டார்கள்; நீங்கள் சமநிலையாக இருக்கும் படி அவர்கள் கற்பிப்பார்கள். உங்கள் உடலுக்கு உணவளிக்கவும் உடை அணிவிக்கவும், ஐயமின்றி, நீங்கள் வேலை செய்தாக வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு கடமை மற்றொன்றை முரண்படுத்த அனுமதித்தால், அது உண்மையான கடமை இல்லை. ஆயிரக்கணக்கான வணிகர்கள் தாம் நிறைய இதய நோயையும் கூட உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறக்கும் அளவிற்கு செல்வவளத்தைச் சேகரிப்பதில் அத்துணை மும்முரமாக இருக்கின்றனரே! வளத்திற்கான கடமை உடல்நலத்திற்கான கடமையை மறக்கச் செய்தால், அது கடமை அல்ல. ஒரு வேர்க்கடலை அளவிற்கு மூளை இருக்கும் பட்சத்தில், ஓர் அற்புதமான உடலை வளர்க்கச் சிறப்பான கவனத்தை வழங்குவதில் மட்டும் ஒரு பயனும் இல்லை. மனமும் மேம்படுத்தப்பட வேண்டும். ஒருவர் ஓர் இணக்கமான வழியில் வளர்ச்சியடைய வேண்டும். மேலும் உங்களிடம் மிகச்சிறந்த உடல்நலமும் செல்வவளமும் அறிவுத்திறனும் இருந்து, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையெனில், பின் நீங்கள் இன்னும் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. உங்களால், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மற்றும் என் மகிழ்ச்சியை ஒருவராலும் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது,” என்று உண்மையாகவே கூற முடிந்தால், நீங்கள் ஒரு மன்னன்—நீங்கள் உங்கள் அகத்தே இறைவனின் பிரதிபிம்பத்தைக் கண்டுவிட்டீர்கள்.
வெற்றியின் மற்றொரு தகுதி, நாங்கள் எங்களுக்கு மட்டுமே இணக்கமான மற்றும் பயனுள்ள முடிவுகளைக் கொண்டு வருவதில்லை, ஆனால் அந்தப் பலன்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதாகும்.
வாழ்க்கை முக்கியமாக சேவையாக இருக்க வேண்டும். அந்த இலட்சியமின்றி, இறைவன் உங்களுக்கு அளித்துள்ள அறிவுத்திறன் அதன் இலக்கை நோக்கிச் சென்றடைவதில்லை. சேவையின் போது, நீங்கள் சிறிய சுயத்தை மறக்கிறீர்கள், நீங்கள் பரம்பொருளின் பெரும் சுயத்தை உணருகிறீர்கள். சூரியனின் உயிரூட்டமிக்க கதிர்கள் எல்லாவற்றிற்கும் ஊட்டமளிப்பதைப் போல, நீங்களும் ஏழைகளின் மற்றும் கைவிடப்பட்டோரின் இதயங்களில் நம்பிக்கை எனும் கதிர்களைப் பரவச் செய்ய வேண்டும், மனம் நொந்த இதயங்களில் துணிவைத் தூண்டிவிட வேண்டும், மற்றும் தாம் தோல்வியாளர்கள் என்று எண்ணுவோரின் இதயங்களில் ஒரு புதிய வலிமையை ஒளியேற்ற வேண்டும். வாழ்க்கை ஒரு ஆனந்தமான கடமைப் போர்க்களம் மற்றும் அதேநேரம் அது ஒரு கடந்து போகும் கனவு என்று நீங்கள் உணர்ந்தறியும் போது, மற்றும் மற்றவர்களுக்கு இரக்கத்தையும் அமைதியையும் வழங்குவதன் மூலம் அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் ஆனந்தத்தால் நீங்கள் நிறைந்திருக்கும் போது, இறைவனின் கண்களுக்கு உங்களுடைய வாழ்க்கை ஒரு வெற்றிகரமானது ஆகும்.
மிகுதியும் வளமும்
தமக்கு மட்டுமே வளத்தை நாடுவோர் முடிவில் ஏழையாக ஆவது, அல்லது மன இசைவின்மையால் துன்புறுவது நிச்சயம்; ஆனால் முழு உலகையும் தன் வீடாகக் கருதுவோர், மற்றும் குழு அல்லது உலக வளத்திற்காக மெய்யாகவே அக்கறை கொண்டு உழைப்போர்…சட்டப்படியாகத் தமக்கே உரிய தனிநபர் சார்ந்த வளத்தைக் காண்கின்றனர். இது ஒரு நிச்சயமான மற்றும் இரகசியமான விதிமுறை ஆகும்.
ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு உதவ நல்லது எதையாவது, அது ஒரு அற்பமான அளவாக இருந்தாலும் கூட, செய்யுங்கள். நீங்கள் இறைவனை நேசிக்க விரும்பினால், நீங்கள் மக்களை நேசிக்க வேண்டும். அவர்கள் அவனுடைய குழந்தைகள். நீங்கள் பொருள்ரீதியாக தேவைப்படுவோருக்கு வழங்குவதன் மூலம்; மற்றும் மனரீதியாக துன்புறுவோருக்கு வசதியையும், அச்சமுள்ளோருக்கு தைரியத்தையும், பலவீனமானவர்களுக்கு தெய்வீக நட்பையும் தார்மீக ஆதரவையும் வழங்குவதன் மூலம் உங்களால் உதவிகரமாக இருக்க முடியும். நீங்கள் மற்றவர்களுக்கு இறைவனில் ஆர்வம் வரச் செய்யும் போது, மற்றும் அவர்களில் இறைவனுக்கான மிகப்பெரிய அன்பை, அவனில் ஆழ்ந்த நம்பிக்கையைப் பேணி வளர்க்கும் போது, நீங்கள் நன்மையின் விதைகளை விதைக்கவும் செய்கிறீர்கள்.
நீங்கள் இவ்வுலகை விட்டுச் செல்லும் போது, பொருள்சார்ந்த செல்வங்கள் பின்னால் விட்டுச் செல்லப்படும்; ஆனால் நீங்கள் செய்திருக்கும் ஒவ்வொரு நல்லதும் உங்களுடன் செல்லும். கஞ்சத்தனத்தில் வாழும் செல்வந்தர்கள், மற்றும் மற்றவர்களுக்கு ஒருபோதும் உதவி செய்யாத சுயநல மக்கள், அடுத்த பிறவியில் செல்வ வளத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் கொடுத்துப் பகிருவோர், அவர்களிடம் இருப்பது அதிகமோ அல்லது குறைவோ, வளத்தை ஈர்ப்பார்கள். அதுவே இறைவனின் விதிமுறை.
தெய்வீகப் பெருவளத்தை ஒரு மிகுதியான புதுப்பிக்கும் மழையாக எண்ணிக் கொள்ளுங்கள்; உங்கள் கைகளில் இருக்கும் பாத்திரத்திற்கேற்ப அதைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு தகரக் குவளையை ஏந்தினால், நீங்கள் அந்த அளவே பெறுவீர்கள். நீங்கள் ஒரு கிண்ணத்தை ஏந்தினால், அது நிரப்பப்படும். எவ்வகையான பாத்திரத்தை நீங்கள் ஏந்திக் கொண்டிருக்கிறீர்கள்? ஒருவேளை உங்கள் பாத்திரம் குறைபாடுள்ளதாக இருக்கலாம்; அப்படியானால், அது அச்சம், வெறுப்பு, ஐயம், பொறாமை ஆகியவற்றை முழு அளவில் வீசி எறிவதன் மூலம் பழுதுபார்க்கப்பட வேண்டும், அதன்பின் அமைதி, அமரிக்கை, பக்தி, மற்றும் அன்பு எனும் தூய்மையாக்கும் நீரால் கழுவிச் சுத்தம் செய்யப்பட வேண்டும். தெய்வீகப் பெருவளம் சேவை, பெருந்தன்மை ஆகியவற்றின் விதிமுறையைப் பின்பற்றுகிறது. கொடுத்துப் பின் பெறுங்கள். உங்களிடம் உள்ள மிகச் சிறந்ததை உலகிற்குக் கொடுங்கள் மற்றும் மிகச் சிறந்தது உங்களிடம் திரும்பிவரும்.
வெற்றிக்கான சங்கல்பங்கள்
சங்கல்பக் கோட்பாடும் அறிவுறுத்தல்களும்
நான் விரும்புவதை நான் விரும்பும் நேரத்தில் கொண்டுவர நான் முழுநிறைவான நம்பிக்கையில் சர்வவியாபக நன்மையின் சக்தியில் முன்னேறிச் செல்வேன்.
என்னகத்தே இருப்பது முடிவில்லாப் படைப்புச் சக்தி. நான் சில சாதனைகளைச் செய்யாமல் கல்லறைக்குச் செல்ல மாட்டேன். நான் ஒரு இறை-மனிதன், ஒரு பகுத்தறிவுப் படைப்பு. நான் பரம்பொருளின் சக்தி, என் ஆன்மாவின் ஆற்றல்மிக்கப் பேராதாரம். நான் வெளிப்பாடுகளை வணிக உலகில், சிந்தனை உலகில், ஞான உலகில் உருவாக்குவேன். நானும் என் தெய்வத்தந்தையும் ஒன்றே. என் படைப்புத்திறன்மிக்க தெய்வத்தந்தையைப் போலவே என்னால் நான் ஆசைப்படும் எதையும் படைக்க முடியும்.
தெய்வீகப் பெருவளத்திற்கான சங்கல்பங்கள்
மேலும் படிப்பதற்கு
- ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் வெற்றியின் விதிமுறை
- To Be Victorious in Life by Sri Sri Paramahansa Yogananda
- ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஜர்னி டு ஸெல்ஃப்-ரியலைசேஷன் - "கவன சக்தியை ஒருமுகபடுத்துதல் மூலம் வெற்றி"
- ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம அனுபூதிக்கான பயணம் "வணிகம், இருப்பு மற்றும் உள் அமைதி: வேலை வாரத்திற்கு சமநிலையை மீட்டமைத்தல்"
- ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல் – “தொடக்கமுயற்சிச் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுதல்”
- ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் தெய்வீகக் காதல் – “மனம்: எல்லையற்ற சக்தியின் சேமிப்புக் களஞ்சியம்”