YSS பாடங்கள் தமிழில் வெளியாகியுள்ளது

28 ஜூலை, 2022

யோகதா சத்சங்க பாடங்களின் புதிய பதிப்பு இப்போது தமிழில் கிடைக்கிறது என்பதையும், சேர்க்கை தொடங்கியுள்ளது என்பதையும் அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!

ஜூலை 22, 2022 அன்று, யோகதா சத்சங்க பாடங்களின் புதிய பதிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்வாமி சுத்தானந்த கிரி அவர்களால் சென்னையில் நடந்த ஒரு சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டது, அறிமுக பாடத்தின் முதல் பிரதியை பிரபல நடிகரும் தயாரிப்பாளரும், கொடையாளரும், யோகதா சத்சங்க பக்தருமான பத்ம விபூஷண் ஸ்ரீ ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சுமார் 1,600 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர், மேலும் பலர் நேரடி ஒளிபரப்பு மூலம் இணைந்தனர்.

தீபம் ஏற்றும் மரபுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸ்வாமி பவித்ரானந்த கிரி அவர்கள் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஒய்எஸ் எஸ்), அதன் நிறுவனர் மற்றும் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் ஒய் எஸ் எஸ் பாடங்கள் பற்றிய அறிமுகத்தை வழங்கினார்.

ஒய் எஸ்எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி எழுதிய கடிதத்தை வாசித்து ஸ்வாமி சுத்தானந்தா தனது உரையைத் தொடங்கினார். ஒய் எஸ் எஸ் பாடங்களை த் தமிழில் தொடங்குவதை சாத்தியமாக்க உதவிய தன்னார்வலர்களுக்கு சுவாமி சிதானந்தகிரி அந்தக் கடிதத்தின் மூலம் தனது ஆசீர்வாதங்களையும் பாராட்டுக்களையும் அனுப்பினார். அந்தக் கடிதத்திலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: “குருதேவர் கூறினார், ‘நான் சென்ற பிறகு ,எனது போதனைகள் குருவாக இருக்கும்’, மற்றும் பாடங்களின் தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் அவரது ஆத்ம விடுதலை போதனை இப்போது இந்தியா முழுவதும் உள்ள பல பக்தர்களுக்கு கிடைக்கும் போது இந்த நாளில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த புனிதமான பாடங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஞானத்தின் மூலமும், உங்கள் இதயங்களின் நேர்மையின் மூலமும், தெய்வீகத்துடனான உங்கள் உறவையும் ஒற்றுமையையும் ஆழப்படுத்துவதற்கான அனைத்து கதவுகளும் உங்களுக்குத் திறந்திருக்கின்றன.”

ஸ்வாமி சுத்தானந்த கிரி அவர்கள் தனது உரையில், கிரியா யோகத்தின் முக்கியத்துவத்தையும், ஒய் எஸ் எஸ் பாடங்களில் கொடுக்கப்பட்டுள்ளபடி, அதன் தினசரி பயிற்சியின் மூலம், நாம் எவ்வாறு உயர்ந்த உணர்வு நிலைகளை அடைய முடியும், இறுதியில் இறைவனை எப்படி உணர முடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.

ஸ்வாமி சுத்தானந்தகிரி பின்னர் தமிழ் ஒய் எஸ் எஸ் பாடங்களை வெளியிட்டார், மேலும் ‘ஆன்ம அனுபூதியின் மூலம் மிக உயர்ந்த சாதனைகள்’ என்ற அறிமுக பாடத்தின் முதல் பிரதியை சிறப்பு விருந்தினர் ஸ்ரீ ரஜினிகாந்திடம் வழங்கினார். இந்தப் பாடத்திலிருந்து சில உத்வேகமளிக்கும் பகுதிகளைப் படித்த ஸ்வாமிஜி, பாடங்கள் உள்ளடக்கிய செய்தியை விவரித்தார். ஒய் எஸ் எஸ் பாடங்கள் செயலியின் சமீபத்திய பதிப்பை விளக்கும் ஒரு சிறிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ ரஜினிகாந்த், பல அமைப்புகள் ஒய் எஸ் எஸ் போன்று100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானவையாக இருக்கலாம் என்றாலும், ஒய் எஸ்எஸ் ஸை ஒரு நீண்டு நிலைபெற்ற அமைப்பாக மாற்றியது அதன் போதனைகளில் உண்மையின் இருப்பு என்று குறிப்பிட்டார். அவர் கூறினார், “பகவத் கீதை மற்றும் பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் கூட, தியானத்தின் உத்திகள் விளக்கப்படவில்லை; ஆனால் பரமஹம்ஸ யோகானந்தர் தான் தனது யோகதா சத்சங்கப் பாடங்களில் அவற்றைப் பற்றி விரிவான விளக்கம் அளித்துள்ளார்.” அவர் தனது தொடர்ந்திருக்கும் பணி மிகுதியிலும் கூட, தான் தியானம் செய்வதை தவற விடவில்லை என்பதை பகிர்ந்து கொண்டு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். எல்லா குருமார்களும் நமக்கு உதவக் காத்திருக்கிறார்கள், ஆனால் அவர்களின் உதவியைப் பெறுவதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும், அதைச் செய்வதற்கான வழி இந்த கிரியா யோக போதனைகளில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். ஒய் எஸ் எஸ் பாடங்களைப் படிக்க தங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய ஒய் எஸ் எஸ் பாடங்களை ப் படிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு பார்வையாளர்களை அவர் ஊக்குவித்தார்.

பின்னர், கலந்து கொண்ட பலர் தமிழ் பாடத்தில் சேர்ந்தனர், மேலும் பலர் ஒய்.எஸ்.எஸ் இலக்கியத்தை அந்த இடத்தில் தமிழில் வாங்கினர்.

ஒய் எஸ் எஸ் பாடங்களை தமிழில் பதிவு செய்ய, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்:

ஜூலை 22, 2022 அன்று தமிழ் பாடங்கள் வெளியீட்டு விழாவின் போது ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரியின் செய்தி வாசிக்கப்பட்டது

அன்பர்களே,

நமது அன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஒய் எஸ் எஸ் பாடங்களின் புதிய விரிவாக்கப்பட்ட பதிப்பு தமிழ் மொழியில் முதன்முறையாக கிடைக்கப் பெறும் இந்த முக்கிய தருணத்தில் உங்களுடன் இணைந்து நானும் மகிழ்ச்சியடைகிறேன். அன்பு மிக்க சிந்தனையும் முயற்சியும் இதை சாத்தியமாக்கியுள்ளது, இந்த மொழிபெயர்ப்பையும் விநியோகத்தையும் கொண்டுவர அர்ப்பணிப்புடன் சேவை செய்த அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நான் மறைந்த பிறகு, போதனைகளே குருவாக இருக்கும்” என்று குருதேவர் கூறினார், மேலும் பாடங்களின் தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் அவரது ஆன்ம-அனுபூதிக்கான கற்பித்தல் இப்போது இந்தியா முழுவதும் உள்ள மேலும் பல பக்தர்களுக்குக் கிடைக்கும் இந்த நாளில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த புனித பாடங்களில் வழங்கபட்டுள்ள ஞானத்தின் மூலமும், உங்கள் இதயங்களின் நேர்மையின் மூலமும், இறைவனுடனான உங்கள் உறவையும் தொடர்பையும் ஆழப்படுத்துவதற்கான அனைத்து வழிகளும் உங்களுக்குத் திறந்திருக்கின்றன. இன்று இங்கே இருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எதிர்காலத்தில் நமது மகத்தான குருமார்களின் புனித போதனைகளைப் பெற வரப்போகும் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகளும் அருளாசிகளும் சென்றடையும். இந்த புனித பாதையில் நீங்கள் முன்னேறும்போது இறைவன் மற்றும் நமது குருதேவரின் அன்பும் அருளாசிகளும் எப்போதும் உங்களைச் சூழ்ந்திருக்கட்டும்.

தெய்வீக அன்பிலும் தோழமையிலும்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர