ஜென்மாஷ்டமி செய்தி பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து — 2024

8 ஆகஸ்ட், 2024

என்னைத் தம்முடையதாக எண்ணி, என் மேல் தியானம் செய்து, இடைவிடாத வழிபாட்டின் மூலம் எப்போதும் என்னுடன் ஒத்திசைந்திருப்பவர்களின் குறைபாடுகளை நான் தீர்த்து, அவர்களுடைய நற்பலன்களை நிரந்தரமாக்குகிறேன்.

— காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: த பகவத் கீதா (IX:22)

அன்பர்களே,

அன்பிற்குரிய பகவான் கிருஷ்ணரின் அவதார தினமான ஜென்மாஷ்டமி நன்னாளில் அன்பு நல்வாழ்த்துக்கள்! தெய்வீக அன்பின் இந்த ராஜ அவதரிப்பை பக்தியுடனும் மகிழ்ச்சியான விழா நடைமுறைகளுடனும் கொண்டாடும்போது, அவனது சர்வ ஞான பேரின்ப இருப்பின் உன்மத்தமாக்கும் விழிப்புணர்வால் நம் இதயங்கள் சிலிர்க்கட்டும்.

நமது மதிப்பிற்குரிய குருவான பரமஹம்ஸ யோகானந்தர், ஸ்ரீ கிருஷ்ணருடன் ஆழமான தனிப்பட்ட உறவைக் கொண்டிருந்தார். அவனது வாழ்க்கை மற்றும் ஆன்ம அனுபூதிக்கான காலத்தால் அழியாத வழிகாட்டுதல் பல யுகங்களுக்கான உயிரூட்டமுள்ள சாத்திரங்களாகும். குருதேவரின் காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: த பகவத் கீதா -வில், ஸ்ரீ கிருஷ்ணரை யோகத்தின் உன்னத பரம்பொருளாக — தர்மம் மற்றும் கிரியா யோக சாசுவத விஞ்ஞானத்தின் மீட்பராக — நமது ஆன்மாவின் தெய்வீக நண்பனாக போற்றுவதற்கு அவர் நம்மை வழிநடத்துகிறார். கீதையின் ஆழமான உண்மைகள், பிரபஞ்சத்தைப் பற்றிய முழு அறிவையும் உள்ளடக்கும் அளவுக்கு பரந்தவை ஆயினும், கிருஷ்ணரின் போதனைகள், இறைவனின் நெருக்கமான அருகாமையையும் அன்பான பாதுகாப்பையும் உணர்ந்த கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஒரு தனிப்பட்ட வழிகாட்டியாகும் என்று குருஜி நமக்குக் காட்டுகிறார்.

ஆன்மாவின் தர்மக் கோட்பாடுகள் — நன்மை, கருணை, நீதி, தெய்வீகத்துடன் இணக்கம் — மற்றும் பொருள் ஆசைகள், தியானம் செய்ய விருப்பமின்மை மற்றும் குறுகிய பார்வை உடைய சுயநலம் ஆகியவை கொண்ட அகங்காரத்தின் வழி இடையே முடிவற்ற தேர்வுகளை நம் அன்றாட வாழ்க்கை முன்வைக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் “தெய்வீக பாடல்” நம் இதயத்தில் ஒலிக்கும் போது, அவசர, சுயநல முடிவுகளைத் தூண்டும் இன்றைய வேகமான உலகத்தை விட உயர் உண்மை வாழ்க்கை வாழ முடியும். இறைவன், அவனுடைய மகத்தான அருளாசிகளினால் நம்முடைய ஒவ்வொரு தைரியமான, தன்னலமற்ற முயற்சியை வலுப்படுத்தியவாறே, நம்முடைய அன்றாட உள்ளார்ந்த முயற்சிகளை தாராளமாகவே கணக்கில் கொள்கிறான்.

தெய்வீகத்துடன் இணைந்த, பகுத்தறியும் ஆன்மீக செயல்பாட்டின் முக்தி அளிக்கும் கூட்டு சக்தி மகத்தானது. குருக்ஷேத்ரப் போருக்கு முன்னர், கிருஷ்ணர் தனது சீடரான அர்ஜுனனுக்கு தனது முழுப் படையையோ அல்லது தன்னை மட்டுமே தேரோட்டியாகவோ அளிக்க முன்வந்தார். அர்ஜுனனைப் போலவே, இறைவனையும், ஞானம் பெற்ற குருவை அவனது தூய வழித்தடமாகவும், தேர்ந்தெடுப்பது என்பது வெற்றியைத் தேர்ந்தெடுப்பது ஆகும் என்பதை நீங்கள் உணர்வீர்களாக.

ஜன்மாஷ்டமி மற்றும் ஆண்டு முழுவதும், பகவான் கிருஷ்ணரை போற்றுவதற்கான உண்மையான வழி, ஞானம், பக்தி, சரியான செயல் மற்றும் இறை ஒன்றுதலைத் தரும் தியானம் ஆகியவற்றின் அவரது ராஜ யோகத்தை மகிழ்ச்சியுடன் பின்பற்றுவதாகும். அவ்வாறு செய்யும்போது, நீங்கள் வெற்றிகரமாக உங்கள் உணர்வுநிலையை உயர்த்துவீர்கள், மேலும் இறை அன்பு, இனிமை மற்றும் மகிழ்ச்சியின் இணக்கமான தாக்கத்தை உலகிற்கு பரப்புவீர்கள். இதுவே உங்கள் ஒவ்வொருவருக்குமான எனது பிரார்த்தனை.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜெய் குரு!

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர