யோகதா சத்சங்கச் செய்திகள்

12 மே, 2017

இந்திய அரசாங்கம் ஒரு நினைவுத் தபால் தலையை வெளியிடுவதன் மூலம் ஒய் எஸ் எஸ் ஐ பெருமைப் படுத்துகிறது.

தபால் தலை

ஒரு ஒய் எஸ் எஸ் பக்தருக்கு மார்ச் 7 ஆம் தேதி அவருடைய இதயத்திற்கு நெருக்கமான புனித நினைவுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் 1952 ம் ஆண்டு இதே நாளில் பரமஹம்ஸ யோகானந்தர் இறைவனையும் அவரது பேரன்பிற்குரிய இந்தியாவையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது மகாசமாதி அடைந்திருந்தார். 1977-ல் இந்திய அரசாங்கம் இதே நாளில் ஒரு நினைவுத் தபால் தலையை வெளியிட்டு குருதேவரை பெருமைப்படுத்தி அதன் மூலம் உலகத்தின் ஆன்மீக செல்வத்திற்காக அவரது மாபெரும் பங்களிப்புகளை மரபு முறைப்படி அங்கீகரித்திருந்தது. இந்த வருடம் மார்ச் 7 ஆம் நாள் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்கள் பிரேமாவதாரத்தால் நிறுவப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு மிகவும் ஏற்புடைய புகழஞ்சலியை, யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியாவின் சிறப்பை முன்னிட்டு ஒரு நினைவுத் தபால் தலையை புது தில்லி விக்யான் பவனில் நடந்த ஒரு சிறப்பு விழாவில், வெளியிட்டதின் வாயிலாக, செலுத்தினார். 1800க்கும் மேற்பட்ட ஒய் எஸ் எஸ் பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒய் எஸ் எஸ் லிருந்து பல சன்னியாசிகள், இயக்குநர்கள் குழுவையும் உள்ளடக்கி இந்த சரித்திரப் புகழ்பெற்ற நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதம மந்திரி அவர்கள், அரங்கத்தின் நுழைவு வாயிலில் சுவாமி விஸ்வானந்தா மற்றும் சுவாமி ஸ்மரணானந்தா அவர்களால் மிகவும் உள்ளன்போடு வரவேற்கப்பட்டு அரங்கத்திற்குள் வழிநடத்தச் செல்லப்பட்டார். நிகழ்ச்சியானது, பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியும் அவருடன் ஒய் எஸ் எஸ் இயக்குனர்கள் குழுவினரும் சேர்ந்து குத்துவிளக்கேற்றியதன் மூலம் தொடங்கியது. சுவாமி விஸ்வானந்தா ஒரு மலர் கொத்தை பிரதமருக்கு அளித்து அவரை வரவேற்றார், சுவாமி ஸ்மரணானந்தா ஒரு பொன்னாடையை மதிப்பிற்குரிய தலைமை விருந்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அணிவித்தார்.

சுவாமி ஸ்மரணானந்தா தன் உரையை பகவத் கீதையிலிருந்து ஒரு சுலோகத்தை மேற்கோள் காட்டித் துவங்கினார். அச்சுலோகம் ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தைப் பாதுகாக்கவும் தீமையை அழிக்கவும் அவதாரங்கள் வருகின்றனர் என்று கூறுகிறது. அவ்வாறிருப்பினும் சில அவதாரங்கள் பக்தர்கள் அகத்தே உள்ள மாயையின் அசுரர்களை அழிப்பதற்கு அவர்களுக்கு உதவுவதைத் தன் பணியாகக் கொண்டு பூமிக்கு வருகின்றனர் என்றும் அத்தகைய அவதாரங்களில் ஒன்று தான் நம் குருதேவர் என்று சுவாமிஜி கூறினார். குருதேவரின் பணியானது மாயையில் மயங்கியுள்ள மனித இனத்தை இறைஞானத்திற்கு இட்டுச் செல்வதாகும். பரமஹம்ஸரால் நிறுவப்பட்ட ஆன்மீக நிறுவனத்தின் முக்கியத்துவத்தையும் அதன் அளப்பரிய பங்களிப்பையும் சுவாமிஜி விரிவாக எடுத்துரைத்தார். சுவாமிஜி குருதேவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார், “நான் என் உடலை விட்டு நீங்கியதும் இந்த நிறுவனமே எனது உடலாக இருக்கும்.” குருதேவரது நிறுவனத்தின் மாபெறும் தாக்கத்தை விளக்கிக் கூறுகையில் சுவாமிஜி குறிப்பிட்டார், “யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா குருதேவரது நெடிய நிழல் என்பதால், அது அவரது அன்பு, ஆனந்தம், ஞானம் மற்றும் சேவையைப் பரப்புவதைத் தொடர்கிறது. யோகதா சத்சங்க/செல்ஃப் ரியலைசேஷன் போதனைகள் மூலம் லட்சக்கணக்கானோர் சமயத்தின் உண்மையான பொருளை அறிந்து கொண்டதோடு, மிகவும் பயனுள்ள சமயத்தின் பயிற்சியையும், முக்கியமாக கற்றுக் கொண்டனர். யோகத் தியானம் அனைத்து உண்மையான சாதகர்களின் இல்லக் கதவருகே உள்ளது.”

சுவாமி விஸ்வானந்தர், இந்த முக்கிய நிகழ்வின் போது நமது பேரன்புக்குரிய சங்கமாதா மற்றும் தலைவியுமான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் அருளாசிகளை தெரிவித்ததோடு அவர் அருளியிருந்த செய்தியையும் வாசித்துக் காட்டினார். ஸ்ரீ மாதாஜி அவர்கள் தன் உரையில் இவ்வாறு எழுதியிருந்தார்:

“யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியாவின் நூற்றாண்டு நிறைவை மேன்மைப் படுத்தி நினைவு கூறும் தபால் தலையின் வெளியீடு என்னும் இந்த விசேஷ சந்தர்ப்பத்தில் நான் என் ஆன்மாவின் வாழ்த்துக்களையும் தெய்வீக அன்பையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவின் மூலம் இந்திய அரசு, இந்தியாவின் சிறந்த மகன்களில் ஒருவரான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கும் அவர் நிறுவிய ஒய் எஸ் எஸ்-ஸிற்கும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது என்ற செய்தியினால் நான் மட்டற்ற மகிழ்ச்சியையும் நன்றி உணர்வும் நிரம்பப் பெற்றவள் ஆகிறேன். இந் நிகழ்ச்சியை சாத்தியமாக்குவதில் பங்குபெற்ற அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகுக. பரமஹம்ஸ யோகானந்தர் தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை அமெரிக்காவில் இந்தியாவின் உலகளாவிய ஆன்மீகம் மற்றும் பண்டைய யோகத் தியான விஞ்ஞானத்தைப் பரப்புவதில் கழித்தாலும் தாய்நாட்டிற்கான அவரது அன்பும் அக்கறையும் ஒருபோதும் குறையவில்லை. 1952-ல் இதே தேதியில் அவர் உலகை விட்டு நீங்கும் முன் அவர் கூறிய இறுதி வார்த்தைகள் அவரது அன்புக்குரிய இந்தியாவிற்கு அவரது புகழ் அஞ்சலியாக அமைந்தன.

இந்த நிகழ்ச்சிக்கான சங்கமாதா மற்றும் தலைவியுமான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் முழுச் செய்தியையும் சுவாமி விஸ்வானந்தர் வாசிக்கிறார்:

இந்தியாவின் தொன்றுதொட்ட சரித்திர காலத்தில் இருந்து இன்று வரை, இந்தியாவின் மிக உயர்ந்த வளமும் வலிமையும், அந்நாட்டு ஞானிகள் உணர்ந்தறிந்து மனித இனத்திற்கு விட்டுச்சென்ற சாஸ்வத ஆன்மீக உண்மைகளைப் போற்றி அவற்றைத் தீவிரமாக வெளிப்படுத்துவதில் தான் அடங்கியுள்ளது. யுகம் யுகங்களாக உன்னத ஆன்மாக்கள் – மிக உயரிய தெய்வீக ஞானம் கொண்ட மகாத்மாக்கள், மகான்கள், முனிவர்கள் – அவர்களது இந்தியத் தாய்நாட்டிற்கான பேரன்பினால் அத்தகைய அதிஉன்னத மற்றும் புனித இலக்கிற்கு சேவை புரியும்படி உந்தப்பட்டனர். இந்திய அரசாங்கம் இன்று அத்தகைய ஓர் முன்மாதிரியான உயரிய தெய்வீகப் புருஷரின் வாழ்க்கைப் பணியை மேன்மைப்படுத்த தேர்ந்தெடுத்திருக்கிறது என்ற உண்மை இந்தியாவிற்கு மட்டுமின்றி, இக்கட்டான இக்காலங்களில் இந்தியாவின் ஆன்மீக ஒளியை எதிர்நோக்கியிருக்கும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் அகவெழுச்சிக்கான ஆதாரமாக உள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அடிக்கடி கூறுவார், “உங்களை முதலில் சீர்திருத்திக் கொள்ளுங்கள் பின் நீங்கள் ஆயிரக்கணக் கானவர்களை சீர்திருத்துவீர்கள்.” இந்தியாவின் தெய்வீக மற்றும் உலகளாவிய யோகம் மற்றும் தியானத்தின் விஞ்ஞானம், நமது நடத்தை மற்றும் எண்ண ரீதியானப் படிவங்களில் நீடித்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொணர்வதற்கான மிக பயனுள்ள வழிமுறைகளின் உருவகமாகத் திகழ்கின்றன. பரமஹம்ஸ யோகானந்தரது சொஸைடியின் மைய இலக்கு மற்றும் லட்சியங்களில் ஒன்றானது, அனைத்து தேசங்களுக்கிடையே, இந்தியாவின் உயர் ரிஷிகளால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக போதிக்கப்பட்ட விஞ்ஞானப்பூர்வமான தியான உத்திகளின் ஞானத்தைப் பரப்புவதுதான். இதன்மூலம் ஒவ்வொரு மனிதனும் – தேச, மத அல்லது இனங்களுக்கு அப்பாற்பட்டு – தன்னுள் தெய்வீகத்தை அறிந்து அக அமைதியை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் தன்னுள் அமைதியைப் பெற்றால், உலக அமைதி தானாகவே பின்தொடரும்.

தனது மிக மும்முரமான அலுவல்கள் மத்தியிலும் இந்த விசேஷ நாளின்போது நேரடியாகக் கலந்து கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கியுள்ள மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் அன்பை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஒய் எஸ் எஸ் நூற்றாண்டு நினைவுத் தபால்தலையானது, தானே ஒரு தீவிர யோகப் பயிற்சியாளராக உள்ள திரு. மோடி அவர்களால் வெளியிடப்படுவது எத்தகைய ஒரு பொருத்தம் வாய்ந்ததாக உள்ளது! திரு மோடி அவர்களால் முன்மொழியப்பட்டு, பின்னர் ஏராளமான நாடுகளால் மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய நாடுகளின் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச யோகா நாள், உலகம் முழுவதும் யோக விஞ்ஞானத்தின் உலகளாவியச் செய்தியைப் பரப்புவதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இத்தகையத் திருப்புமுனைத் தொடக்க முயற்சிக்காக திரு மோடி அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.

       பரமஹம்ஸ யோகானந்தர், இந்தியாவின் ஆன்மீகமும் மேலைநாடுகளின் பொருள்சார் திறமையும் கலந்த ஒரு இலட்சிய ரீதியான சமூகம் பிற்காலத்தில் உருவாகும் என்றும் உரைத்தார். அதனால் இந்தியா, மனித உணர்வு நிலையை அதன் மேல்நோக்கிய பரிணாம வளர்ச்சி சுற்றிற்கு உயர்த்திட ஓர் முக்கிய மற்றும் அவசியமான பங்கை ஏற்க வேண்டியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரும் பிற இந்திய உயர்குருமார்களும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த ஒற்றுமையை நல்கும் ஆன்மீக போதனைகளின் பயிற்சியின் வாயிலாக உலக அமைதி, தெய்வீகம் இணக்கம் மற்றும் உலகக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வளம் ஆகியவற்றிலான ஒரு சகாப்தத்திற்கு நாம் முன்னோக்கி செல்லவேண்டும் என்பதே என் ஆர்வமிக்க பிரார்த்தனையாகும்.

பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி அவையினருக்கு உரை நிகழ்த்த எழுந்தபோது கைத்தட்டல் வானைப் பிளந்தது. அவரது உரையில் பிரதமர் 7ஆம் தேதியின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி, அறுபத்தைந்து வருடங்களுக்கு முன் ஓர் உன்னத ஆன்மா இதே நாளில் அழியும் தேகத்தின் வரையறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பல யுகங்களுக்கு வணக்கத்திற்குரிய ஒரு பொருளாக மாறியது என்று கூறினார்.

திரு மோடி அவையினரின் கவனத்தை ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் சக்தி மற்றும் புகழிற்கு ஈர்த்து, அந்நூல் அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளதால் 95% அதை தத்தம் தாய் மொழிகளில் படிக்க இயலும் என்று கூறினார். அந்நூலைப் படித்த அனைவரும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறார்கள், இது ஆலயத்தில் பக்தர்கள், தாம் பெரும் பிரசாதத்தை முழுவதுமாக தானே உண்ணாமல் மற்றவர்களுடன் அதை பகிர்ந்து கொள்வதில் உவகை அடைவது போல் உள்ளது என்று அவர் கூறினார். இது ஏனென்றால் யோகானந்தரின் வாழ்க்கையும் செய்தியும், ஆலயத்தில் பெறப்படும் பிரசாதத்தை போல் அத்துணை புனிதமானதாகவும் தெய்வீக மானதாகவும் உள்ளன என்று பிரதமர் கூறினார்.

தன் தாய் நாட்டிற்கான குருதேவருடைய ஆழ்ந்த அன்பு, பக்தி, மற்றும் சேவைக்கு புகழ் அஞ்சலி செலுத்திய பிரதமர் குருதேவருடைய கவிதை ‘என் இந்தியா’ விலிருந்து மேற்கோள்கள் காட்டினார். குருதேவருடைய கவிதை சமாதி மற்றும் அவரது பல நூல்களைப் பற்றிய தன் விளக்கத்தை பகிர்ந்து கொண்ட பிரதமர் யோக தத்துவத்திலுள்ள நுண்ணிய வேறுபாடுகளைப் பற்றி மிகத் தெளிவுடன் பேசினார். யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியாவால் ஆற்றப்படுகின்ற மாபெரும் சேவையை பாராட்டிய பிரதமர், யோகானந்தருடைய சுயநலமற்ற உணர்வு மற்றும் பற்றற்ற சேவையினால் இந்த நிறுவனம் வெற்றிகரமாக ஒரு நூற்றாண்டைக் கழித்தது மட்டுமின்றி அதன் நிறுவனருடைய உயிர்த்துடிப்புடைய இருப்பினால் மேலும் மேலும் சுறுசுறுப்புடன் முன்னேறுவதைத் தொடர்கிறது என்று கூறினார். ஒரு குடும்பம் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்ற உவமையைப் பயன்படுத்தி ஒய் எஸ் எஸ்-உம் எவ்வாறு, மைய இலக்கிலிருந்து, “நீர்த்தலையோ அல்லது திசைமாற்றத்தையோ” அனுமதிக்காது வெற்றிகரமாக குருதேவரது போதனைகளின் புனிதத்தன்மையை பராமரித்து வருகிறது என்று பிரதமர் விளக்கினார்.

உயர் மகான் கபீர் அருளிய கவிதையிலிருந்து சில வரிகளை மேற்கோள்காட்டி பிரதம மந்திரி, பரமஹம்ஸ யோகானந்தருக்கான தனி மரியாதையையும் பாராட்டுதலையும் வெளிப்படுத்தினார். யோகிகள் அழிவற்றவர்கள், அவர்கள் ஒருபோதும் மறைவதில்லை மாறாக நம்முடன் என்றும் உள்ளனர் என்று அவர் கூறினார். அத்தகைய ஒருவரை பற்றி அறிந்து அனுபவித்தது தன்னுடைய நற்பேறு என்று பிரதமர் தன் உரையை முடித்தார். பிரதமர் உரையை முடித்த பின் குருதேவர் தொடங்கப்பட்ட பாரம்பரியத்திற்கும், அனைத்து மகான்களுக்கும் மற்றும் அனைத்து உண்மையான சாதகர்களுக்கும் தன் பணிவான வணக்கத்தைத் தெரிவித்தார்.

இதயத்தின் ஆழத்திலிருந்து நேரடியாக வெளிப்பட்ட அந்த உரைக்கு அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பிரதமரைப் பாராட்டினர்.  என் இந்தியா என்ற குருதேவரது கவிதையின் இந்தி மொழி பெயர்ப்பின் சட்டம் போட்ட பிரதி பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அதே கவிதையிலிருந்து சில வரிகளை தன் உரையில் மேற்கோள் காட்டி பேசியது எத்தனை உண்மையான தெய்வீக நிகழ்வுப் பொருத்தம்!

பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி நினைவுத் தபால் தலையை வெளியிட்டு தபால்தலை ஆல்பத்தை அனைவருக்கும் தெரியுமாறு காட்டுகிறார். ஒய் எஸ் எஸ் வாரிய உறுப்பினர்கள் ( இடமிருந்து வலமாக) சன்னியாசிகள் சிரத்தானந்தா, சுத்தானந்தா, ஸ்மரணானந்தா, விஸ்வானந்தா, நித்தியானந்தா மற்றும் ஸ்ரீ கமல் நயின் பக்ஷி ஆகியோரும் காணப்படுகின்றனர்.

இந்த நிகழ்வு பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடக அமைப்புகள் ஆகியவற்றால் பரவலாக ஒளிபரப்பப்பட்டது. நினைவு தபால் தலையின் முதல் நாள் அட்டை நன்கொடை அடிப்படையில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இது உண்மையில் ஒய் எஸ் எஸ் நூற்றாண்டு நிறைவிற்கு மிகப்பொருத்தமான நிகழ்வாக அமைந்தது, மற்றும் இது, நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரது நினைவிலும் நீங்கா இடம் பெறும். இரவும் பகலும் அயர்வு பாராது மிகுந்த பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் இந்நிகழ்ச்சியை ஒரு மிகப்பெரிய வெற்றியாக மாற்ற உழைத்த அனைத்து சேவகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இதைப் பகிர