அகத்துள் ஒரு மௌன ஆலயத்தை உருவாக்க நம்மை ஊக்குவித்து, நம் அன்பிற்குரிய குருதேவர் கூறினார்:
உங்கள் மனத்தின் வாயில்களுக்குப் பின்னால் உள்ள மெளனத்தில் எத்தகைய மகிழ்ச்சி காத்திருக்கிறது என்பதை எந்த மனித நாவாலும் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் தியானம் செய்து அந்தச் சூழலை உருவாக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்பவர்கள் ஓர் அற்புதமான உள் அமைதியை உணர்கிறார்கள்.
— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
ஆன்மீகப் புதுப்பித்தலைத் நாடுகின்ற மற்றும் தமது இறை விழிப்புநிலையை ஆழப்படுத்துவதற்காக அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து விலகிச் செல்லவும் — ஒரு சில நாட்களுக்கு மட்டுமே என்றாலும் கூட — விரும்புகின்ற ஒய் எஸ் எஸ் பாட மாணவர்கள், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் எப்படி-வாழ-வேண்டும்—ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். பரமஹம்ஸ யோகானந்தரின் வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நிகழ்ச்சிகள் “பரம்பொருளினால் செறிவூட்டப்படுதல் என்ற பிரத்யேக நோக்கத்திற்காக [நீங்கள்] அணுகக்கூடிய மெளனம் எனும் ஒரு டைனமோவை அளிக்கின்றன.”
நேர்மையான சாதகர்கள் அன்றாட வாழ்க்கையின் இடைவிடாத செயல்பாட்டிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கிக் கொள்ளவும், அதை அக மெளனத்தின் மீது ஒருமுகப்படுத்தவும், அதன் மூலம் இறைவனின் அமைதி மற்றும் பேரின்பத்தின் அமிர்தத்தை பருகவும் ஒரு அற்புதமான வாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் ஓய்வெடுக்கவும், உத்வேகத்தையும் ஆன்மீக புதுப்பித்தலைப் பெறவும் ஏகாந்தவாசம் நிகழ்வுகளுக்கு வரலாம். அல்லது ஆழ்ந்த சிந்தனை, புரிதல் மற்றும் உள் வழிகாட்டுதலின் மூலம் மட்டுமே தீர்க்கப்படக்கூடிய கேள்விகளுக்கான பதில்கள் அல்லது சிக்கல்களுக்கான தீர்வுகளை காண வரலாம்.
ஏகாந்தவாசத்தின் போது, உங்கள் பங்கு ஓய்வெடுப்பதும், இறைவனின் எங்கும் நிறைந்த அருளாசிகளை ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் இசைவித்து இருப்பதும் ஆகும். வெளியே புதிய காற்றை சுவாசித்து, உடற்பயிற்சி செய்து, ஓய்வெடுப்பதன் மூலம் உடல் ரீதியாக ஓய்வெடுங்கள். அன்றாட வாழ்க்கையின் கவலைகள் மற்றும் சுமைகளை கைவிடுவதன் மூலம் மனரீதியாக ஓய்வெடுங்கள். உங்கள் வெளிப்புற செயல்பாடுகளை விட்டு விடுங்கள்; இறைவனுடன் இசைவித்திருங்கள், அவனே உங்கள் மனதில் உன்னத சிந்தனையாகவும், உங்கள் இதயத்தின் கொழுந்துவிட்டு எரியும் விருப்பமாகவும் இருக்கட்டும். அகத்துள் அவனது இருப்பைப் பற்றிய உங்கள் வளர்ந்து வரும் உணர்வுநிலை ஏனையவற்றை பார்த்துக் கொள்ளும். இறைவனைப் பற்றிய ஆழ்ந்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதற்காக இடைவிடாத செயல்பாடுகளிலிருந்து ஓய்வெடுக்கும் அனுபவம், உங்கள் ஆற்றலைப் புதுப்பித்து, நீடித்த அமைதியையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு அருள அவனுக்கு வழி விடும்.
ஏகாந்த வாச செயல்பாடுகள்:
- YSS சன்னியாசிகளால் நடத்தப்படும் YSS சக்தியூட்டும் உடற் பயிற்சிகள், கூட்டு தியானங்கள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகியவை ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் அடங்கும்.
- பங்கேற்பாளர்கள் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா புத்தகங்கள் மற்றும் பதிவுகளை தனிப்பட்ட முறையில் கேட்பதற்கும் படிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பக்தர்கள் புத்துணர்ச்சியூட்டும் காற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் மற்றும் உடலை தளர்த்திக் கொள்ள உடற்பயிற்சி செய்யலாம்.
- அழகான ஏகாந்தவாச அமைப்புகளில் ஓய்வெடுக்கவும் இறைவனின் இருப்பை உணரவும் போதுமான ஓய்வு நேரம் உள்ளது.
- காலை மாலை கூட்டு தியானங்களைத் தவிர பக்தர்கள் தனிப்பட்ட முறையில் தியானம் செய்யலாம்.
- ஏகாந்தவாசிகள் விரும்பினால், அவர்கள் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசி ஒருவரிடம் கலந்தாலோசிப்பதற்கு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யலாம், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை புரிந்து கொள்வதற்கும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கும் அவர் மகிழ்ச்சியுடன் வழி காட்டுவார்
அடிப்படை ஏகாந்தவாச வழிகாட்டுதல்கள்:
பலனளிக்கும் ஏகாந்தவாசத்துக்கான பொறுப்பு உங்களிடமே உள்ளது. நீங்கள் உங்கள் மெய்யார்வத்தைப் புதுப்பிக்க வந்திருந்தாலும் அல்லது சிக்கலான கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உங்களுக்குள் தீர்வுகளைத் தேடுவதற்காக என்றாலும், உங்கள் முயற்சியின் வெற்றி இறுதியில், உயிர் வாழ்தல், ஞானம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கும் தெய்வப் பரம்பொருள் ஆகிய இறைவனுடனான உங்கள் தனிப்பட்ட உறவைப் பொறுத்தது. அவருடைய இருப்பைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வளர்த்துக்கொள்ளும் அந்த அளவிலேயே, வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கான உத்வேகத்தையும் உத்தரவாதத்தையும் வழிகாட்டுதலையும் பெறுவீர்கள்.
பின்வரும் குறிப்புக்ளை கவனமாக செயல்படுத்துவது அந்த விழிப்புணர்வை வளர்ப்பதற்கு உங்களுக்கு பெரிதும் உதவும்:
- ஏகாந்தவாச நிகழ்ச்சி முழுவதிலும் (முடிந்த வரை) பங்கேற்க வேண்டும் மற்றும் அங்கே தங்கியிருக்கும் நேரத்தில் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
- உங்கள் அகச் சூழலை அமைத்துக் கொள்ளவும், இறைவனுடனும் குருமார்களுடனும் உங்கள் இணக்கத்தை ஆழப்படுத்தவும் ஏகாந்தவாசத்தின் போது மௌனத்தைக் கடைப்பிடியுங்கள்.
- கூட்டு செயல்பாடுகளில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள், ஏனெனில் அவை உங்களை ஒத்த எண்ணம் கொண்ட பிற ஆன்மாக்களின் சகவாசத்திற்குள் கொண்டு வருகின்றன, இதன் மூலம் உங்கள் நல்ல முயற்சிகள் மற்றும் உயர்ந்த இலட்சியங்களை வலுப்படுத்துகின்றன.
- இறைவனின் இருப்பை பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு அனுபவத்திலும் இறைவன் உங்கள் பக்கத்தில் இருக்கிறார் என்பதை உணரக் கற்றுக்கொள்ளுங்கள்.
- நீங்கள் ஏகாந்தவாசத்தில் இருக்கும்போது செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற உலகாயத இலக்கியங்களை, அப்படி ஏதேனும் கொண்டு வந்திருந்தால், அவற்றைப் படிப்பதைத் தவிர்க்கவும்,
- நீங்கள் தனிமையான ஏகாந்தவாச சூழலில் இருந்தால், உங்கள் ஓய்வு நேரத்தில் அமைதியாக இருப்பதற்கும் இறைவனை நினைப்பதற்கும் எளிதாக இருக்கும் என்பதால் ஏகாந்தவாச வளாகத்திற்குள்ளேயே இருங்கள்.
- மொபைல் (கைபேசி) போன்களை கொண்டு வந்திருந்தால் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவசர காலங்களில் தவிர தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது பெறவோ கூடாது.
- இறுதியாக, ஆனால் அதி முக்கியமாக, உங்கள் ஏகாந்தவாசத்தின் போது ஆழ்ந்து தியானம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். தியானம் என்பது இறைவனுடனான உங்கள் உறவின் அடித்தளமாகும்.