“தன்னை வென்றவனாக இருப்பதென்பது—உங்களது எல்லைக்குட்படுத்தப்பட்டுள்ள உணர்வு நிலையை வென்று உங்களுடைய ஆன்மீக ஆற்றல்களை வரையறை இன்றி விரிவாக்குவது–உண்மையிலேயே வெற்றியாளானாக இருப்பதாகும். நீங்கள் அனைத்து வரையறைகளையும் கடந்து எவ்வளவு தொலைவு செல்ல விழைகின்றீர்களோ, உங்களால் அவ்வளவு தொலைவு சென்று, ஓர் ஒப்புயர்வற்ற வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.”
– பரமஹம்ஸ யோகானந்தர்
புதிய தொடக்கங்களின் இந்தப் பருவத்தில் உணரப்பட்ட ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கான உந்துதல் நம் மனத்திட்பத்தையும், நம் ஆன்மாவின் எல்லையற்ற ஆற்றல் மீதான நமது நம்பிக்கையையும் புதுப்பிக்கிறது. “என்னால் முடியும்” என்ற உணர்வை எழுப்ப — நமது மனிதக் குறைபாடுகள் மீது கவனம் செலுத்தாமல், அதே சமயம் அவனது தெய்வீகக் குணங்களை வெளிப்படுத்தும் திறன் கொண்ட அவனது இருப்பின் ஒரு தனித்துவமான வெளிப்பாடாக இறைவன் நம்மைப் பார்ப்பதைப் போல நாமும் நம்மைப் பார்ப்பதில் கவனம் செலுத்தியவாறு–நமது எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு நேரமிது. அந்தக் கண்ணோட்டத்தை மேம்படுவதற்கான நமது முயற்சிகளில் வைத்துக் கொண்டு, நமக்குள் இருக்கும் ஆன்மீக வெற்றியாளரை நாம் வெளிக் கொணர்கிறோம். நம் வாழ்க்கைப் பொறுப்பை நாம் ஏற்க இறைவன் நமக்கு சுதந்திர விருப்பத்தை வழங்கியுள்ளான். அந்தத் தெய்வீகப் பரிசை சரியாகப் பயன்படுத்த இப்போதிருந்து தீர்மானியுங்கள், பின் உங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். குருதேவர் நம்மிடம் கூறினார்: “நீங்கள் செயல்கள் மூலம் மட்டுமே அல்லாது, உங்களுடைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆசைகளின் மூலமும் எவ்வளவு தூய்மை, அன்பு, அழகு மற்றும் ஆன்மீக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவீர்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பது உங்களுடைய சக்திக்கு உட்பட்டே உள்ளது.” மக்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் நாம் மறுமொழியளிக்கும் விதத்தில், எவ்வாறு திட்டமிட்டு வரிசைப்படுத்தி நேரத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதில், மற்றும் வாழ்க்கையைப் பற்றிய நமது கண்ணோட்டத்தைப் பாதிக்கும் எண்ணங்களின் மற்றும் மனப்பான்மைகளின் நுட்பமான தளத்தில், நாம் என்ன படிவங்களை உருவாக்கியிருக்கிறோம் என்ற விழிப்புணர்வு நமக்கு வரும் போது, சிறப்பாகச் செய்வதற்கு, அவனுடைய அன்பையும் ஆனந்தத்தையும் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு, நமக்கு இறைவன் அருளிய சுதந்திரத்தை உறுதியுடன் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய, அன்றாட விஷயங்களில் கூட நாம் இடைவிடாது நமது சிந்தனையையும் நடத்தையையும் ஓர் ஆக்கப்பூர்வமான திசையில் வழிநடத்துகிறோம் என்றால் — பழக்கவழக்கங்கள், புலன் தூண்டுதல்கள் அல்லது உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினைகள் ஆகியவற்றை ஆதிக்கம் செலுத்தவிடாமல் –- பின்னர் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் மாற்றங்களைச் செய்து, இறைவனின் எப்போதும் இருக்கும் அருளாசிகளுக்கான நமது ஏற்புத்தன்மையை நம்மால் விரிவுபடுத்திக் கொள்ளமுடியும்.
நமது சொந்த முக்திக்கான ஒரு செயலூக்கமான பங்கை நாம் ஆற்ற வேண்டும் என இறைவன் கருதுகிறான், ஆனால் நமது ஆன்மாவின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அகங்கார- மற்றும் பழக்க-தடைகளை அகற்ற உதவுவதற்கு அவனை விட அதிக ஆர்வம் கொண்டவர்கள் வேறு எவரும் இல்லை. ஆழ்ந்த தியானத்தின் மற்றும் அவனுடன் நமது வாழ்வை இசைவித்திருக்க மேற்கொள்ளும் தினசரி முயற்சிகளின் மூலம் ஊட்டமளிக்கப்படும் இறைவனுடனான நம் அக உறவு தான் அவனுடைய நிலைமாற்றும் சக்தியை நாம் பெற நம் உணர்வுநிலையை முழுமையாகத் திறக்கிறது. அவன் மீதான உங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்துவதன் மூலம், உங்கள் விசுவாசத்தையும் அகச் சமநிலையையும் சோதிக்கும் சூழ்நிலைகளில் கூட, நீங்கள் முன்னேற அவன் அளித்துக் கொண்டிருக்கும் வாய்ப்பை நீங்கள் உணர்வீர்கள். ஓர் உன்னதச் சிற்பி ஒரு பளிங்குப் பாறையிலிருந்து சிற்பத்திற்குத் தேவையற்றதை அகற்றும் போது ஒரு அழகிய சிற்பம் வெளிப்படுவது போல், இறைவனின் சர்வ வல்லமையுள்ள சித்தத்துடன் நீங்கள் உங்களுடைய இச்சாசக்தியை இசைவித்து உங்களுடைய வாழ்க்கையை வடிவமைக்கும் அந்த தெய்வீகச் சிற்பியுடன் ஒத்துழைக்கும் போது அந்த மாயை எனும் திரையிலிருந்து உங்களுடைய தூய ஆன்மா வெளிப்படும்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இறைவனின் ஆசிகளும் அன்பும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்,
ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா
பதிப்புரிமை © 2014 செல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.