நினைவேந்தல்: ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா
(ஜனவரி 31, 1914 – நவம்பர் 30, 2010) அன்பு, பணிவு, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சேவை கொண்ட ஒரு வாழ்க்கை
நவம்பர் 30, 2010-ல் நமது பேரன்புக்குரிய தலைவியும் சங்கமாதா வுமான ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா அவர்கள் அமைதியாக இறைவனிடம் தனது சாசுவத இல்ல ஆனந்தத்திற்காக இந்த உலகை விட்டுச் சென்றார். நமது குருதேவரால், அவரது பணியைத் தலைமை தாங்கி நடத்துவதற்கும், அவரது போதனைகளில் ஈர்க்கப்பட்டவர்களுக்கு ஓர் ஆன்மீக அன்னையாகச் சேவை புரிவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா அவர்கள், 55 வருடங்களுக்கு மேலாக, பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய நிறுவனத்திற்கு ஆன்மீகத் தலைவி என்ற முறையில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சன்னியாசிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு, ஒரே மாதிரியாக, மனவெழுச்சி, விவேகம், கருணை ஆகியவற்றிற்கான வழிகாட்டும் சக்தியாக இருந்து வந்துள்ளார். அவரது அன்பு, புரிதல் மற்றும் அவரது ஆன்மீக உதாரணத்தின் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் எவர்களது வாழ்க்கைகளை எல்லாம் அவர் தாக்கமுறச் செய்தாரோ அவர்கள் அனைவராலும் ஸ்ரீ தயா மாதா இல்லாத குறை ஆழ்ந்து உணரப்படும். இருப்பினும் அவர் அடிக்கடி கூறுவார், “தெய்வீக அன்பு இந்தப் பிறவியின் எல்லைகளுக்கு அப்பாலும் செல்கிறது.” மேலும் அவர் என்றும் நம் மனங்கள் மற்றும் இதயங்களில், குருதேவரின் லட்சியங்களைப் பரிபூரணமாக வாழ்ந்த ஒருவர் என்ற முறையிலும் அத்துடன் அனைத்து இறைவனின் குழந்தைகளுக்கும் அக்கறை செலுத்தியவர் என்பதாலும், என்றும் நீங்கா இடம் பெறுவார்.
ஓர் வியக்கத்தக்க வாழ்க்கை
ஸ்ரீ தயா மாதா வியக்கத்தக்க வாழ்க்கையை நடத்தினார — அவரது எண்ணங்கள் இறைவனுக்கான அன்பினால் நிரம்பப் பெற்றும், அவரது செயல்கள் அவனுக்கு சேவை செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டவாறும் கிட்டத்தட்ட அவரது வாழ்வின் 80 ஆண்டுகளை தனது குருவின் ஆசிரமங்களில் ஒரு சன்னியாசச் சீடராக அவர் கழித்தார். அனைவருக்கும் ஓர் அரிய வலிமையையும் அன்பையும் பரவச் செய்த அதே சமயம் பரமஹம்ஸ யோகானந்தரது ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணியினை மேற்பார்வையிடும் பரந்த பொறுப்புகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அவர் உண்மையிலே — அவரது பெயர் குறிப்பிடுவதுபோல் — அவரது பாதையில் எதிர்ப்பட்ட அனைவருக்கும் நிபந்தனையற்ற அன்பையும் கனிவையும் வழங்கிக் கொண்டும், அவரது ஆன்மீக உதவியை நாடிய எண்ணற்ற ஆன்மாக்களுக்காக தினசரி பிரார்த்தித்துக் கொண்டும் ‘ ஒரு கருணை தாய்’ ஆகத் திகழ்ந்தார்.
உண்மையான பணிவிற்கு ஓர் அசாதாரணமான எடுத்துக்காட்டான தயா மாதாஜி, எப்பொழுதும் தன் உணர்வு நிலையில் இறைவனை அதி உன்னத இடத்தில் வைத்திருந்தார். அவர் ஒரு தடவை கூறினார்: “நான் எனக்கு அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்கிறேன்: இறைவன் மற்றும் குருதேவரின் முன் நான் என்னவாக உள்ளேனோ, அதுதான் நான், அதற்கு குறைவாகவும் இல்லை, அதிகமாகவும் இல்லை. நான் குறைகளற்ற பூரணமானவள் என்றோ அல்லது உயர் திறன்கள் அல்லது வல்லமைகள் படைத்தவள் என்றோ உரிமை கோருவதில்லை. இப்பிறவியில் என் முயற்சியானது ஒன்றே ஒன்றை பரிபூரணமாக்குவது, அது என் இறைவனுக்கான என் அன்பு.” அந்த இலக்கிற்கான அவரது விசுவாசத்தால் அவர், அநேக ஆன்மாக்களுக்கு இறைவனது அன்பு பாய்வதற்கான ஒரு செல்வழியாக இருந்தார்.
அவரது வாழ்க்கை, இறைவனுக்கும் மனித இனத்திற்கும் தன் குருதேவரின் போதனைகள் வாயிலாக சேவை புரிவதற்கு முழுவதுமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். அவரது கடுமையான பொறுப்புகளின் மத்தியில் கூட அவரது ஆன்மீக நியமத்தில் நிலையாக இருந்து கொண்டு ஆனந்தத்தையும் மனநிறைவையும் அடைந்த வண்ணம் எவ்வாறு ஒரு சமச்சீர் வாழ்க்கை வாழ்வது என்பதற்கான ஒரு தலையாய எடுத்துக்காட்டாக விளங்கினார். அவர் ஒருமுறை கூறினார், “என்னால் இக்கடமைகள் அனைத்தையும், நமது ஆன்மீக நியமங்களையும் மீறிச் செய்ய முடிகிறது என்றல்லாமல், அவற்றைச் செய்யும் காரணத்தால்தான் தொடர்ந்து செய்ய முடிகிறது என்பதே சரி. அதிலிருந்துதான் எனது அகத்தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதல் வருகின்றன– காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் தியானம் அத்துடன் பரமஹம்ஸர் எங்களுக்குப் போதித்ததுபோல் தியானங்களுக்கிடையில் இடைவிடாமல் என் மனதை ஒருமுகப்படுத்துதல்.”
சீடர்களாலான ஓர் ஒப்பற்ற குடும்பம்
அதிக மன நிறைவளிக்கும் ஏதோ ஒன்றிற்கான ஏக்கம்
அவரது பிள்ளைப் பருவத்திலிருந்தே தயா மாதாவிடம் இறைவனை அறிவதற்கான ஓர் ஆழ்ந்த ஏக்கம் இருந்தது. எட்டாவது வயதில் பள்ளிக்கூடத்தில் முதன்முதலாக இந்தியாவைப் பற்றி அறிய வந்தபோது, அவர் ஒரு இனம்புரியாத அக விழிப்புணர்வை உணர்ந்தார். அத்துடன் அவரது வாழ்வின் மனநிறைவிற்கான விடை இந்தியாவிடம் உள்ளது என்ற நம்பிக்கையையும் உணர்ந்தார். அவர் வீட்டிற்குத் திரும்பியதும் அன்னையிடம் தான் ஒருபோதும் மணக்கப் போவதில்லை என்றும் மற்றும் தான் இந்தியாவிற்கு போகப்போவதாகவும் கூறினார்.
தனது தேவாலய அனுபவங்களில் ஏதோ ஒன்று குறைகிறது என்று எண்ண ஆரம்பித்து, இன்னும் அதிக மன நிறைவளிக்கும் ஏதோ ஒன்றிற்காக ஏங்கினார். அவருக்கு 15 வயது ஆன போது பகவத் கீதையின் ஒரு பிரதி அவரிடம் கொடுக்கப்பட்டது. கீதை அவர் மேல் மிக ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது, ஏனெனில் அதன் மூலம் இறைவனை அணுகவும் அறியவும் முடியும் என்றும் அவனது குழந்தைகள் தெய்வீகமானவர்கள், அவர்கள் தம் சுய-முயற்சியின் வாயிலாக அவர்களது ஆன்மீக பிறப்புரிமையான இறைவனுடன் ஒன்றுபட்ட தன்மையை உணரமுடியும் என்றும் அறிந்தார். அப்பொழுதுதான் தயா மாதா அவர்கள் தனது வாழ்க்கையை இறைவனை நாடுவதில் அர்ப்பணிக்கப் போவதாக தீர்மானித்தார்.
பரமஹம்ஸருடன் ஸ்ரீ தயா மாதாவின் முதல் சந்திப்பு
1931ல், 17-வது வயதில் தயா மாதா தன் அன்னையுடனும், சகோதரியுடனும் சால்ட் லேக் சிடியிலுள்ள ஹோட்டல் நியூ ஹவுஸில் ஒரு பொது மக்களுக்கான சொற்பொழிவில் கலந்து கொண்டார். சொற்பொழிவாளர் பரமஹம்ஸ யோகானந்தர்; அவர் அமெரிக்க நாடு முழுவதும் பயணம் செய்து கொண்டு கூட்டம் நிரம்பி வழிந்த அமெரிக்காவின் பெருமை மிகுந்த அரங்கங்களில் யோக விஞ்ஞானத்தைப் பற்றி சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டும் வகுப்புகள் எடுத்துக் கொண்டும் இருந்தார். சால்ட் லேக் சிடியில் வாழும் கூச்சம் நிறைந்த இளம்பெண்ணிற்கு குருவைத் தனியாக சந்திக்கும் வாய்ப்பு சாத்தியமற்றது என்று தோன்றியது எனினும், தயா மாதா ஒரு தீவிர ரத்தக் கோளாறு வியாதியினால் நீண்ட காலமாக துன்புற்று கொண்டிருந்தார். அவரது வீங்கிய முகத்தை சுற்றி இருந்த துணிக்கட்டுகள் பரமஹம்ஸரது கவனத்தைக் கவர்ந்தன.
அவர் யோகானந்தருடனான சந்திப்பில் விவரிக்கிறார்: “எனது முழு இருப்பும், என் ஆன்மாவினுள் பொழிந்து கொண்டு என் இதயம் மற்றும் மனதை மூழ்கடித்துக் கொண்டிருந்த ஞானம் மற்றும் தெய்வீக அன்பில் லயித்திருந்தது.” ஒரு சிறந்த யோகியின் சீடராகப் போவதற்கு அவர் தீர்மானம் செய்துவிட்டார்.
[காணொலி: ஸ்ரீ தயா மாதா பரமஹம்ஸருடனான தன் முதல் சந்திப்பை விவரிக்கிறார் – ஆங்கிலத்தில்]
ஸ்ரீ தயா மாதா எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் சன்னியாசப் பரம்பரையில் இணைகிறார்
ஸ்ரீ தயா மாதா, பரமஹம்ஸர் தன்னிடம் இறைவன் அவரைக் (தயா மாதாவை) குணப்படுத்த முடியும் என்பதை அவர் நம்புகிறாரா என்று கேட்டதாக நினைவு கூறுகிறார். தயா மாதா ஆமாம் என்று கூறியபோது பரமஹம்ஸர் அவரை புருவங்களுக்கிடையே தொட்டு அவரிடம் கூறினார், “இந்த நாளிலிருந்து நீ குணமடையத் தொடங்குகிறாய். ஒரு வாரத்திற்குள் இந்த துணிக் கட்டுகளுக்கு அவசியமிராது. உன்னுடைய வடுக்கள் மறைந்து விடும்.” அவர் தீர்க்கதரிசனமாக கூறியது அப்படியே நடந்தது. அதன் பின் விரைவில் தன் அன்னையின் ஆதரவுடன் தயா மாதா லாஸ் ஏஞ்சலீஸுக்கு குடிபெயர்ந்து நவம்பர் 19, 1931-ல் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாச பரம்பரையில் இணைந்தார். ஆர்வமும் ஏற்கும் திறனுமுள்ள ஒரு இதயத்துடன் ஸ்ரீதயா மாதா குருதேவருடைய வழிகாட்டுதலை உட்கிரகித்துக் கொண்டார். பரமஹம்ஸர், தன் பணியில் ஸ்ரீ தயா மாதா இறுதியாக ஆற்றப் போகிற முக்கிய பங்கின் சாத்தியத்தை அவரிடம் கண்டார். ஸ்ரீ தயா மாதாவின் புதிய இல்லமான எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் ஸின் சர்வதேச தலைமையகம் மற்றும் மவுண்ட் வாஷிங்டன் உச்சியிலுள்ள ஆசிரம மையத்தில் நடைபெற்ற முதல் கிறிஸ்துமஸ் விழாவில், எங்கு தயா மாதா அமர்வார் என்றறிந்த பரமஹம்ஸர் அந்த நீள்-இருக்கையில் ஒரு சிறிய கண்ணாடி முட்டையை வைத்திருந்தார். ஸ்ரீ தயா மாதா தன் குருவிடம் எதற்காக அவர் அந்த முட்டையை வைத்து இருந்தார் என்று கேட்டதற்கு பரமஹம்ஸர் கூறினார்: “நீ தான் எனது கூட்டு முட்டை. நீ என்னிடம் வந்த போது, அனேக உண்மையான மற்ற பக்தர்கள் இந்தப் பாதைக்கு ஈர்க்கப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும்.”
குரு தேவருக்கு சேவை புரிதல்
ஸ்ரீ தயா மாதா ஆசிரமத்தில் சேர்ந்த அடுத்த வருடத்தில் பரமஹம்ஸர் அவருக்கு இந்தியாவின் புராதன சன்னியாசப் பரம்பரையினால் அனுசரிக்கப்படும் இறுதி சன்னியாசச் சங்கல்பங்களை (பிரம்மச்சரியம், உடைமைகளிடம் பற்றின்மை, இறைவனிடமும் குருவிடமும் கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசம்) உபதேசித்தார். அவர் இவ்வாறு ஸெல்ஃப்-ரியலைசேஷன்/யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் முதல் சன்னியாசினிகளில் (பெண் துறவிகள்) ஒருவராக மாறி தன் இதயம் மற்றும் ஆன்மாவை, இறைவன் மற்றும் குருவிடம் முழுமையான அர்ப்பணிப்பு, தினசரி தியானம் மற்றும் மற்றவர்களுக்கு தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் வாழ்நாள் முழுவதுமான பயிற்சிக்கு உறுதி எடுத்துக்கொண்டார்.
ஆரம்பத்திலிருந்தே பரமஹம்ஸ யோகானந்தர் தயா மாதாவை ஒரு விசேஷமான பணிக்கு தேர்ந்தெடுத்திருந்தார் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. பின்னாளில் பரமஹம்ஸர் தயா மாதாவிடம் இந்தியாவில் யுக்தேஸ்வரருடைய ஆசிரமத்தில் அவருடைய பயிற்சி கால வருடங்களில் சுவாமி யுக்தேஸ்வர் அவருக்கு அளித்த அதே தீவிர ஆன்மீக ஒழுங்குமுறையைத்தான் அவர் தயா மாதாவிற்கு அளித்ததாகக் கூறினார்.
இருபது வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீ தயா மாதா அவர்கள் பரமஹம்ஸருடன் கிட்டத்தட்ட எப்பொழுதும் கூடவே இருந்த நெருங்கிய சீடர்கள் அடங்கிய குழுவின் ஓர் அங்கமாக இருந்தார். அவர் பரமஹம்ஸரது அந்தரங்கக் காரியதரிசியாக சேவை செய்ததோடு பரமஹம்ஸரின் உரைகள், சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகளை சுருக்கெழுத்தில் பதிவு செய்யவும் காரணமாயிருந்தார். அவர் யோகத் தியான உத்திகள் மற்றும் ஆன்மீக வாழும் கலை பற்றிய விரிவான அறிவுறுத்தல்களைப் பாடங்களாகத் தொகுப்பதற்கு உதவி புரிந்தார்; அப்பாடங்கள் இன்றுவரை யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் பின் மாணவர்களுக்கு அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
“இப்பொழுது என் பணி முடிந்து விட்டது, உன் பணி தொடர்கிறது”
வருடங்கள் செல்லச் செல்ல, பரமஹம்ஸர் அவருக்கு மேலும் மேலும் அதிகமான பொறுப்புகளை அளித்தார்; அத்துடன் பரமஹம்ஸரது இறுதிக்காலத்தில் அவர் தன் சன்னியாசச் சீடர்களிடம் வெளிப்படையாகவே ஸ்ரீ தயா மாதா ஆற்றவிருக்கும் உலகளாவிய பங்கைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். குருதேவரது வாழ்வின் பிற்பகுதியில் தயா மாதாவின் கடமைகள் அதிகமாக அதிகமாக, அவர் அதிகரித்துக் கொண்டிருக்கும் தலைமை வகிக்கும் பொறுப்பு சார்ந்த தன் நிலைமை ஒரு மாபெரும் சோதனையாக இருப்பதைக் கண்டார். நீண்ட மற்றும் ஆழ்ந்த தியானத்தின் மூலம் என்றும் இறைவனுக்கு மிக நெருங்கிய ஒரு பணிவான பக்தராகத்தான் இருக்க அவர் விரும்பினார். அவர் குருதேவரிடம், தலைமை வகிக்கும் பொறுப்பிற்கு பதிலாக குருதேவர் தேந்தெடுக்கும் எந்த சீடர் கீழும் தன்னை சேவை செய்ய அனுமதிக்குமாறு மன்றாடினார். ஆனால் பரமஹம்ஸர் பிடிவாதமாக இருந்தார். அனைத்திற்கும் மேலாக இறைவன் மற்றும் குருதேவரின் சித்தத்தை நிறைவேற்ற விரும்பி தயா மாதா அகமுகமாக தன்னிடம் கேட்கப்பட்டதை நிறைவேற்ற சரணடைந்தார். ” இப்பொழுது என் பணி முடிந்து விட்டது,” குருதேவர் அவரிடம் கூறினார். “உன் பணி தொடர்கிறது.”
1955-ல், பரமஹம்ஸ யோகானந்தரது மறைவின் மூன்று ஆண்டுகளுக்குப் பின், மறைந்த ராஜரிஷி ஜனகானந்தாவிற்கு அடுத்து யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப்) -ன் தலைவியாகப் பொறுப்பேற்றார். ஓர் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் தலைமையேற்கும் முதல் பெண்மணிகளில் ஒருவராகவும், இந்திய சனாதன தர்மத்தின் (சாசுவத மதம்) ஓர் உண்மையான எடுத்துக்காட்டாக பரவலாக மதிக்கப்படும் முதல் மேலைநாட்டுப் பெண்மணிகளில் ஒருவராகவும், குருதேவரின் விருப்பப்படி, அது அமைந்திருந்தது. ஸ்ரீ யோகானந்தரது ஆன்மீக வாரிசு என்ற முறையில், ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் உறுப்பினர்களின் ஆன்மீக வழிகாட்டுதலை மேற்பார்வையிடுதல்; எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் -ன் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜெர்மனியில் உள்ள ஆசிரமங்களில் தங்கியிருக்கும் சன்னியாசச் சீடர்களுக்கு பயிற்சி அளித்தல்; நிறுவனத்தின் பல உலகளாவிய ஆன்மீக மற்றும் மனித நேயச் சேவைகளை நிர்வகித்தல் போன்ற பொறுப்புகளை நிறைவேற்றினார். அவர் இந்தியாவில், நிறுவனத்தின் செயல்பாடுகளை வழிநடத்தவும் மற்றும் அவற்றிற்கு சேவை புரியும் ஐந்து விரிவான இந்தியப் பயணங்களை மேற்கொண்டார்.
ஸ்ரீ தயா மாதாவின் தலைமை
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப், ஸ்ரீ தயா மாதாவின் தலைமையின் கீழ் உலகம் முழுவதும் வளர்ந்து விரிவடைந்துள்ளது. இன்று, 600க்கும் மேற்பட்ட ஆலயங்கள், தியான மையங்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏகாந்தவாச இல்லங்கள், 12க்கும் மேற்பட்ட சிரத்தை மிகுந்த சன்னியாசிகள் மற்றும் சன்னியாசினிகளின் சன்னியாசச் சமூகங்கள், பரமஹம்ஸர் மற்றும் அவரது சன்னியாசச் சீடர்களின் நூல்கள், சொற்பொழிவுத் தொடர்கள் மற்றும் யோகானந்தரின் போதனைகள் பற்றி உலகமெங்கும் உள்ள நகரங்களில் நடக்கும் வகுப்புகள் ஆகியவற்றின் வெளியீடுகளை கண்காணிக்கும் ஒரு பிரசுரப் பிரிவு, பல நாடுகளில் எஸ் ஆர் எஃப் இன் அழகிய ஏகாந்த இல்லங்கள், குணமாக்குதலுக்கும் உலக அமைதிக்குமான உலகளாவிய பிரார்த்தனை வட்டம், அத்துடன் மற்ற ஆன்மீக சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அவரது கிட்டத்தட்ட 8௦ வருட கால அர்ப்பணிப்பு மிகுந்த சேவையில், அவர் ஒருபோதும் முக்கியத்துவத்தையோ அல்லது பதவியையோ நாடியதில்லை. அவரது ஒருமுனைப்பட்ட இலக்கானது தன் குருதேவரது போதனைகளின் புனிதம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல், தன்னுள்ளே ஓர் உண்மைச் சீடரது பண்புகளைப் பூரணமாக்குதல் மற்றும் ஆன்மீக வலிமை மற்றும் புரிதலைத் தேடி வந்துள்ள அனைவருக்கும் உதவி புரிதல் போன்றவை தான். அவரது இந்த இலக்குகளுக்கான ஒருமுனைப்பட்ட விசுவாசத்தின் மூலம் அவர் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற உண்மையான சாதகர்களை ஆசீர்வதித்தும் மனவெழுச்சி அடையவும் செய்துள்ளார்.
இறுதி வருடங்கள் மற்றும் அன்பின் மரபுரிமைச் செல்வம்
அவர் உலகளாவிய ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் குடும்பத்தினருக்கு, வழிகாட்டுதல் , அகத்தூண்டுதல் மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு ஆகியவற்றிலான ஒரு இடைவிடாத பொழிவை, யோகதா சத்சங்க/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பத்திரிகை, கட்டுரைகள், பருவகால மற்றும் இரட்டை மாத ஆன்மீக வழிகாட்டுதல் கடிதங்கள், பேரளவிலான தனிப்பட்ட பக்தர்களுடனான தனிப்பட்ட கடிதப் போக்குவரத்து ஆகியவை மூலம் அள்ளி வழங்கினார். அவரது இறுதி வருடங்களில் பெரும்பாலான நேரம் அவரது உதவியையும் அருளையும் நாடியவர்களுக்காக தியானத்திலும் பிரார்த்தனையிலும் கழிந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தினசரி தியானம் மூலம் இறைவன் மற்றும் அவனது அனைத்து குழந்தைகளுக்குமான அன்பின் ஓர் ஆழ்ந்த உணர்வை அவர் அனைவர் மனத்திலும் பதியச் செய்வது அவரது விருப்பம் மற்றும் இலக்காக தொடர்ந்திருந்தது. அவர் கூறினார்:
“தூய்மையாகவும் நிபந்தனையற்றும் நேசிப்பதற்கான வல்லமை தியானத்தில் இருந்து, இறைவனுடனான அன்பில் இருப்பதிலிருந்து, மற்றும் அவனுடன் உங்களுடைய இதய மொழியில் மௌனமாக பேசிக்கொண்டிருப்பதிலிருந்து வருகிறது. நான் இறைவனிடம் பேசாத ஒரு கணம்கூட என் வாழ்வில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவன் என்னிடம் பேசுகிறாரா அல்லது இல்லையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஒருவேளை நான் இவ்வாறு சிந்திப்பது கூட விசித்திரமாக இருக்கலாம். ஆனால் இறைவனுடன் அக முகமாக பேசுவதிலிருந்து எத்துணை ஆனந்தம் வருகிறது என்பதை மட்டுமே நான் அறிவேன், பிறகு தெய்வீக அன்பு அல்லது பேரானந்தம் அல்லது ஞானம், என் உணர்வுநிலை மூலம் பொழிகின்ற உணர்வின் ஒரு பெரும் சிலிர்ப்பைத் திடீரென உணர்கிறேன். பிறகு தெரிகிறது: ‘ஆஹா, தெய்வீக அன்னையே, நான் இந்தப் பிறவியில் நாடும் எதையும் நீதான் அளிக்கிறாய்.’ இறைவன்தான் ஒரே மெய்மை. அவன் மட்டுமே வாழ்வு.”
இறைவனுக்கான நிபந்தனையற்ற பக்திமிக்க ஒரு வாழ்வை உண்மையாக வாழ்ந்தவர்களது மனவெழுச்சியூட்டும் தாக்கம் இந்த உலகில் அவர்களது ஆயுட்காலத்தையும் தாண்டி வெகு தூரம் செல்கிறது. இப்பொழுதுகூட ஸ்ரீ தயா மாதாவின் அருளாசிகள் நம்மை நோக்கிப் பாய்ந்து நமது ஆன்மீக தேடலில் நம்மை வழிநடத்தி ஊக்குவிப்பதை நம்மால் உணர்வது சாத்தியமே. அவரது தெய்வீக அன்பும் கருணையும் நம்முடன் என்றும் இருக்கும் என்றறிந்த வண்ணம் அவருக்கு நமது இதயங்களின் அன்பையும் நன்றியையும் அனுப்புவதில் எங்களுடன் இணைய வேண்டுகிறோம்.