வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீகத் தோழமை: இளம் சாதகர் சங்கம் செப்டம்பர் 2025

22 நவம்பர், 2025

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) அமைப்பு, அதன் முதல் இளம் சாதகர் சங்கம் நிகழ்வை 2025, செப்டம்பர் 10 முதல் 14 வரை YSS ராஞ்சி ஆசிரமத்தில் ஏற்பாடு செய்திருந்தது. 23 முதல் 35 வயது வரையிலான 200க்கும் மேற்பட்ட இளம் சாதகர்கள், ஐந்து நாட்கள் தியானம், பயிலரங்குகள், சேவை மற்றும் ஆன்மீகத் தோழமைக்காக ஒன்றுகூடி, இறைவன் மற்றும் குருவுடன் தங்கள் ஒத்திசைவை ஆழப்படுத்திக் கொண்டனர்.

சங்கம் மிகவும் நிறைவான மற்றும் வளம் சேர்க்கும் நிகழ்வாக இருந்தது. இறைவன் மற்றும் குருமார்களின் அற்புத இருப்பில் இருக்கும் அருட்பேறு எங்களுக்குக் கிடைத்தது…. குருதேவரின் தெய்வீகக் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பது எங்களை ஒன்றிணைத்து, ஓர் உடனடி மற்றும் நிரந்தரப் பிணைப்பை நோக்கி ஈர்த்தது.

— எஸ். எம்., மேற்கு வங்கம்

இளம் சாதகர்கள் YSS ராஞ்சி ஆசிரமத்தில் ஒன்று கூடினர் — குருஜியின் அன்பில் ஒரு தெய்வீகக் குடும்பமாக.

மனநிலையை அமைத்தல்

இளம் சாதகர்கள் ஆசிரமத்திற்கு வந்த பிறகு, நேரடி அறிமுக அமர்வு மற்றும் சத்சங்கத்துடன் சங்கம் தொடங்கியது, அவர்களைத் திறந்த இதயத்துடன் தங்கள் மனதை ஒருமுகப்படுத்த ஊக்குவித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் நினைவுகளும் அதிர்வுகளும் நிறைந்த ராஞ்சி ஆசிரமத்தை வலம் வரும் வழிநடத்தப்பட்ட உலாவானது, பயபக்தி மற்றும் சகோதரத்துவ உணர்வை உருவாக்கி, இளம் சாதகர்களை குருஜியின் தெய்வீகக் குடும்பத்திற்குள் உடனடியாக ஈர்த்தது.

ராஞ்சியில் நடந்த இளம் சாதகர் சங்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது — என் வாழ்வில் மிகவும் பேறுபெற்ற அனுபவங்களில் அது ஒன்று. மற்ற சங்கங்களில் நாம் குருஜியின் போதனைகளைக் கடைப்பிடிக்க உத்வேகம் பெறுவோம், ஆனால் இம்முறை நாங்கள் அவற்றை உண்மையாகவே வாழ்ந்தோம். குருஜியின் இருப்பை நான் மிகவும் உணர்ந்தேன், மற்றும் முடிவில், அனைவருக்குள்ளும் ஏதோ ஓர் ஆழமான மாற்றம் ஏற்பட்டிருந்தது...

— ஏ.ஏ., உத்தரபிரதேசம்

தொடக்க சத்சங்கம், சாதகர்களை கவனச் சிதறல்களை ஒதுக்கி வைத்து விட்டு, திறந்த மனதுடன் சங்கத்தில் பிரவேசிக்க அழைத்தது.
சத்சங்கம் தொடங்கிய உடன், பக்தி உணர்வு அரங்கம் முழுவதும் நிறைந்தது.

ஒரு சமநிலையான தினசரி நடைமுறை

கவனமாகத் தயாரிக்கப்பட்ட சமநிலையான நிகழ்ச்சித் திட்டமே சங்கத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தது. சங்கம் அக அமைதியையும் புறச் செயல்பாட்டையும் இணைக்கும் ஒரு லயத்துடன் இயங்கியது. ஒவ்வொரு நாளும் சக்தியூட்டல், தியானம், கற்றல், ஆன்மீகத் தோழமை மற்றும் புத்துணர்வு ஆகியவற்றின் சிந்தனைபூர்வமான சமநிலையை வழங்கியது. இரவு 10 மணியிலிருந்து காலை 8 மணி வரை அனுசரிக்கப்பட்ட மௌனம் அனைவரையும் மீண்டும் ஒருமுறை உள்முகப்படுத்தியது.

அந்த நிகழ்ச்சி ஆன்மீக ஆழத்தை, நடைமுறை ஞானம் மற்றும் மகிழ்ச்சியான தோழமையுடன் இணைத்து அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அமர்வும், தியானமும், கலந்துரையாடலும் உள் தெளிவையும் அமைதியையும் நோக்கிய ஒரு படியாக அமைந்திருந்தன. அது மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், மனதை மேம்படுத்துவதாகவும் இருந்தது...

— டி. ஆர்., உத்தரபிரதேசம்

சாதகர்கள் ஒவ்வொரு நாளையும் உடலையும் மனதையும் தியானிப்பதற்குத் தயார்படுத்தும் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கினர்.
கூட்டுத் தியானங்கள் அக அமைதியின் ஓர் ஒத்திசைவான லயத்தை உருவாக்கின.
மௌனத்திலும் அசைவற்ற நிலையிலும், இளம் சாதகர்கள் தங்களை இறைவனுடனும் குருவுடனும் ஒத்திசைத்துக் கொண்டனர்.
சிறிய வாசிப்புக் குழுக்கள், YSS பாடங்கள் மற்றும் அவற்றின் அன்றாடப் பயன்பாடு குறித்துச் சிந்திப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தன.
ஒன்றுபட்ட மௌனத்தில், இளம் சாதகர்கள் வாசிப்பிற்குப் பிறகு, குருஜியின் வார்த்தைகளை ஆழமாக உள்வாங்கிக்கொண்டு சிந்தித்தனர்.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒத்த மனப்பான்மையுள்ள சாதகர்கள் ஒரே தெய்வீக நோக்கத்துடன் ஒன்றுகூடினர். அந்தத் தோழமை நெஞ்சை நெகிழவைப்பதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது. நீண்ட காலம் எடுத்திருக்கக்கூடிய பிணைப்புகளை, மாலைநேர விளையாட்டுகள், எங்களை விரைவாக நண்பர்களாக்கின. குழுக்கள் மற்றும் குழுத் தலைவர்கள் எனும் கருத்து குறிப்பாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது, ஏனெனில் இந்த புனிதப் பாதையில் ஒருவருக்கொருவர் செவிமடுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் அது எங்களுக்கு வாய்ப்பளித்தது.

— எஸ். ஆர்., ஆந்திரப் பிரதேசம்

மாலை நேர பொழுதுபோக்கு, அன்பு மற்றும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியது.
சிலர் விளையாடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் யோகப் பயிற்சியின் மூலம், உடலையும் மனதையும் இணக்கப்படுத்தி, உள்முகப்பட்டனர்.

எப்படி-வாழ-வேண்டும் பயிலரங்குகள்

கலந்துரையாடும் பயிலரங்குகள் நவீன வாழ்க்கையின் உண்மையான சவால்களைப் பற்றி விவாதித்து, குருஜி-யின் ஞானத்தை இளம் சாதகர்கள் நடைமுறை வழிகளில் பயன்படுத்த வழிகாட்டின. வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுத்தல் மற்றும் சமநிலை வாழ்க்கை வாழ்தல் போன்ற தலைப்பிலான பயிலரங்கு அமர்வுகள், இறைவனிடம் மனது ஊன்றியிருக்கும் அதே வேளையில், வாழ்க்கையின் முன்னுரிமைகள், சவால்கள் மற்றும் திருப்புமுனைகளை எதிர்கொள்ளத் தெளிவையும் தன்னம்பிக்கையையும் வழங்கின.

சங்கம் உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. பயிலரங்கானது, வயதுப் பிரிவினரையும், கையாளப்பட்ட தலைப்புகளையும் சிந்தனையுடன் கருத்தில் கொண்டதாலும், ஆழமான உவமைகள் மற்றும் நடைமுறை குறிப்புகள் வாயிலாக கற்றுவிக்கப்பட்ட உத்திகளாலும், முழு அனுபவத்தையும் மிகவும் ஈடுபாடு மிக்கதாகவும், தொடர்புடையதாகவும் மாற்றின.

— எஸ். எம்., மகாராஷ்டிரா

பயிலரங்குகள் குருஜியின் ஞானத்தைப் பயன்படுத்துவதில் கலந்துரையாடலையும் சக அன்பர்களிடமிருந்து கற்றுக் கொள்வதையும் ஊக்குவித்தன.

சிறு குழுக்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், குருஜியின் போதனைகளை நடைமுறை வழிகளில் செயல்படுத்துவதற்கும் வாய்ப்பளித்தது.

YSS சன்னியாசி ஒருவர் நடத்திய 'எப்படி-வாழ-வேண்டும்' பயிலரங்கு, சமநிலையுடன் வாழ்வது குறித்த தெளிவை வழங்கியது.
செயல்முறைப் பயிற்சிகளும் பணித்தாள்களும் பங்கேற்பாளர்கள் தங்கள் தேர்வுகளையும் சமநிலை வாழ்வையும் பற்றிச் சிந்திக்க உதவின.

பயிற்சியை ஆழப்படுத்துதல்

சங்கம், சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், ஹாங்-ஸா மற்றும் ஓம் உத்திகள் குறித்த சிறப்பு மறு ஆய்வு வகுப்புகள் மூலம் ஆன்மீகப் பயிற்சிகளின் அடிப்படைகளை மறு ஆய்வு செய்ய வாய்ப்பளித்தது. கிரியா யோக உத்தி குறித்த ஒரு மறு ஆய்வு வகுப்பும் கிரியாபான்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், கிரியாபான்கள் அல்லாதோருக்காக ஒரு சிறப்பு சத்சங்கமும் நடத்தப்பட்டது. இந்த அமர்வுகள், இளம் சாதகர்களுக்கு தங்கள் பயிற்சியைச் செம்மைப்படுத்தவும், கவனத்தை வலுப்படுத்தவும், தியான அனுபவத்தை ஆழப்படுத்தவும் உதவின. கூடுதலாக, YSS சன்னியாசிகளுடன் தனிப்பட்ட ஆலோசனை, பயிற்சிப் பாதையில் தனிப்பட்ட வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும், மன உறுதியையும் அளித்தது.

ஒவ்வொரு அமர்வையும் நான் உண்மையாகவே துய்த்து மகிழ்ந்தேன். ஸ்வாமிஜிகளையும் பிரம்மச்சாரிகளையும் நேரில் சந்தித்ததுதான் மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது. அவர்கள் அத்தகைய அன்புடனும், கருணையுடனும் செவிமடுத்து, வேறு எங்கும் காண முடியாத ஞான முத்துக்களை வழங்கினார்கள். அவர்கள் முன்னிலையில் இருந்ததே என்னை இறைவன் மீதான அன்பால் நிரப்பியது…

— பி. கே., மகாராஷ்டிரா

வழி நடத்தப்பட்ட மறு ஆய்வு அமர்வுகள், சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்வதை செம்மைப்படுத்திக் கொள்ள சாதகர்களுக்கு உதவின.
YSS சன்னியாசிகளுடன் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட ஆலோசனைகள் தனிப்பட்ட ஊக்கத்தையும் தெளிவையும் அளித்தன.

உத்தி மறு ஆய்வு வகுப்புகள் தினசரிப் பயிற்சியில் மனப்பூர்வமான ஈடுபாட்டையும் நிலைத்தன்மையையும் ஊக்கப்படுத்தின.

தோழமை மற்றும் சேவை

குருஜியின் பெயரால் ஒருவருக்கொருவர் சேவை செய்வதிலும், ஆசிரமத்திற்குப் பணியாற்றுவதிலும் ஒன்றாகச் செயல்படும் மகிழ்ச்சியை இளம் ஆன்மீக சாதகர்கள் உணர்ந்ததால், அந்தச் சங்கம் தோழமைக்கும் சேவைக்கும் சமநிலை முக்கியத்துவம் அளித்தது. சக சாதகர்களை வரவேற்பது மற்றும் தங்குமிடங்களை நிர்வகிப்பது முதல், சமையலறையில் உதவுவது, புத்தகத் துறைக்கு உதவுவது மற்றும் ஆசிரம வளாகத்தைப் பராமரிப்பது வரை, சேவை என்பது நன்றியுணர்வின் இயல்பான வெளிப்பாடாக மாறியது. சாதாரண மாலை நேரக் கூட்டங்கள் ஆன்ம நட்புக்களை வளர்த்தன. YSS-ல் தன்னார்வலர்களாகச் சேவை செய்வதற்கும், சன்னியாசி வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்கும் இளைஞர்களுக்கு சிறப்பு அமர்வுகள் வழிகாட்டின. சேவா மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்குத் தங்களை ஆழமாக அர்ப்பணித்துக் கொள்ள விரும்பியவர்களுக்காக, முழுநேர சேவை மற்றும் சன்னியாசி வாழ்க்கையில் சேர்வதற்கான வாய்ப்புகள் பகிரப்பட்டன.

இந்த சங்கத்தில் இணைந்தது நான் பெற்ற அருட்பேறாக உணர்கிறேன். ஆசிரமத்தில் தங்கியது, மௌனமாய் உணவருந்தியது, மற்றும் ஆன்மீக நண்பர்களுடன் இணைந்தது ஆகியவை உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக இருந்தது. மௌனத்திலோ, சத்சங்கத்திலோ, அல்லது சேவையிலோ, ஒவ்வொரு கணமும் எனக்குள் ஆழ்ந்த எதையோ தொட்டது. இந்த சங்கம் என்பது வெறும் ஓர் ஒன்றுகூடல் மட்டுமல்ல; அது எனக்குள் உள்ள அத்தியாவசியமான, நிரந்தரமான ஒன்றிற்குத் திரும்புவதாய் இருந்தது.

— ஏ.டி., ஜார்க்கண்ட்

சங்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குரு சேவை செய்வதற்கான வாய்ப்பையும் இளம் சாதகர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆசிரம வளாகத்தில் செய்யப்பட்ட சேவை, நன்றியுணர்வின் மகிழ்ச்சியான வெளிப்பாடாக மாறியது.

பங்கேற்பாளர்கள் ஒன்றாகச் சேவை செய்து, எளிய சேவை பணிகளில் மனநிறைவு கண்டனர்.
YSS தன்னார்வல சேவை வாய்ப்புகள் குறித்த ஓர் அமர்வு, மேலும் ஆழமாகச் சேவை செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டியது.

பத்ராட்டு ஏரிக்கு சுற்றுலா

சங்கத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று பத்ராட்டு ஏரிக்குச் சென்ற பயணமாகும். வழியில் ஒன்றாகப் பக்திப் பாடல்களைப் பாடியது ஒரு பக்திமயமான சூழலை உருவாக்கியது. அதேசமயம் ஏரியில், இளம் சாதகர்கள் இயற்கைச் சூழலில் நடைப் பயிற்சி, படகு சவாரி, மற்றும் ஆன்மாவைத் தூண்டும் குழு கீர்த்தனம் மற்றும் தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

இந்த சங்கத்தில் பங்கெடுத்ததை நான் பெரும் அருட்பேறாக உணர்கிறேன். ஆசிரமத்தையோ அல்லது சக பக்தர்களின் சகவாசத்தையோ விட்டுப் பிரிய எனக்கு மனம் வரவில்லை. ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. குருஜிக்கும், ஸ்வாமிஜிகளுக்கும், அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த வணக்கங்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

— எஸ். எஸ்., கர்நாடகா

பங்கேற்பாளர்கள் ஏரிக்கரையில் இயற்கைச் சூழலில் நடைப்பயணத்தை துய்த்து மகிழ்ந்தனர்.
குருஜியின் உணர்வோடு சாதகர்கள் அந்தப் பயணத்தை அனுபவித்ததால், ​​படகுகளில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன.
பத்ராட்டு ஏரியின் அசைவற்ற நீர் சங்கத்தின் அமைதியை அப்படியே பிரதிபலித்தது.
ஆன்மாவைத் தொடும் ஒரு கீர்த்தனம் ஏரிக்கரையில் இதயங்களை பரவசப்படுத்தியது. ஒன்றாகப் பக்திப் பாடல்களைப் பாடியபோது, ​​சாதகர்கள் இயற்கை மற்றும் குருஜியுடன் ஒரு அமைதியான ஒருமையை உணர்ந்தனர்.
உணவை இறைவனுக்குப் படைக்கும்போது அது புனிதமாகிறது என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில், உணவருந்துவதற்கு முன்பு ஆசிகள் கோரப்பட்டன.
சேவா குழுவினர் அக்கறையுடனும் பக்தியுடனும் உணவு பரிமாறினர்.

தோழமை உணர்வில் மறக்க முடியாத ஒரு மாலை

சங்க நிறைவின் முந்தைய மாலையில், முக்கிய அம்சமாக ஒரு சிறப்பு கீர்த்தனம் தியானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளம் சாதகர்கள் தியான மந்திரிலிருந்து வெளியே வந்தபோது, ஆசிரம வளாகம் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஒளிர்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘ஓப்பன் ஹவுஸ்’, ஒளிர்ந்த ஆசிரமத்தின் தெய்வீக சூழலில் சன்னியாசிகளுடன் கழிக்கவும் கலந்துரையாடவும் இளம் சாதகர்களுக்கு வாய்ப்பளித்தது.

இந்த அனுபவம் நிகரற்றது. கீர்த்தனை அமர்வுகளே எனக்கு மிகச் சிறப்பானவையாக அமைந்தன. அவை எனக்கு இறைவனிடமும் குருமார்களிடமும் புத்துணர்ச்சியூட்டும் பக்தியை உண்டாக்கின. காலத்தை நிறுத்தி, இதுபோன்ற சங்கங்களில் என்றென்றும் கலந்துகொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன்.

— எஸ். எஸ்., உத்தரபிரதேசம்

YSS சன்னியாசிகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு சிறப்பு கீர்த்தனை, அந்த மாலையை அமைதியாலும் தெய்வீக அரவணைப்பாலும் நிறைத்தது.
கீர்த்தனம் இளம் சாதகர்களை அன்பு மற்றும் பக்தியின் ஒருமித்த குரலில் ஒன்றிணைத்தது.

நிறைந்த நன்றியுணர்வுடன், இந்த நிகழ்வைச் சாத்தியமாக்கிய கரங்களுக்கு — சன்னியாசிகள், தன்னார்வலர்கள், ஆசிரம ஊழியர்கள், ஏன் ஆசிரம வளாகத்தில் உள்ள மரங்களுக்கும் கூட — நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது! ...இந்தச் சங்கம் ஆனந்தமயமானதாகவும், அமைதியானதாகவும், ஆன்மாவை புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது.

— ஜே. ஜே., ஹரியானா

சங்கத்தின் திறந்த இல்ல நிகழ்வின் போது, ஒளியும் ஆனந்தமும் பொங்கிய ஓர் இரவாக ஆசிரமம் பக்திப் பரவசத்தால் பிரகாசித்தது.

ஒளியால் அலங்கரிக்கப்பட்ட ஸ்மிருதி மந்திர், பக்திக்கும் சகோதரத்துவத்திற்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது.
குருஜியின் சாசுவத இருப்பின் அடையாளமாக, தீபங்களின் ஒளியில் புனிதமான லிச்சி வேதி ஜொலித்தது.

ஓபன் ஹவுஸ் நிகழ்வு இளம் சாதகர்கள் ஸ்வாமிஜிகளுடன் தீபங்களின் ஒளிவீசும் பிரகாசத்தின் நடுவே இயல்பாக உரையாட வழிவகுத்தது. தனிப்பட்ட தருணங்கள் வழிகாட்டுதல் மற்றும் தோழமைப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தின.

நிறைவு நாள் சிந்தனைகள் — பழக்கத்தின் ஆற்றல்

நிறைவு நாளில், இளம் சாதகர்கள் தங்களது கற்றல், தீர்மானங்கள், நன்றியுணர்வு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டனர். சங்கம், ‘பழக்கத்தின் ஆற்றல்’ குறித்த நிறைவு சத்சங்கத்துடன் நிறைவுற்றது.

ஒட்டுமொத்த கருப்பொருளும் தலைப்புகளும் என்னுடன் நேரடியாகப் பேசின. குருஜி, ஸ்வாமிஜி மற்றும் நான் மட்டுமே உரையாடுவது போல் உணர்ந்தேன். நான் கேட்பதற்கு முன்பே என் பல கேள்விகளுக்குப் பதில்கள் கிடைத்தன. அந்த வாரத்தில், நான் மேலும் பணிவுள்ளவனாகவும், என் குறைகளை அதிகம் உணர்ந்தவனாகவும், என் மீது அதிக கருணை கொண்டவனாகவும் மாறினேன்.

— எம்.டி., மகாராஷ்டிரா

‘பழக்கத்தின் சக்தி’ குறித்த நிறைவு சத்சங்கம், குருஜியின் போதனைகளை தினசரி கடைபிடிப்பதற்கு புதிய உறுதியைத் தூண்டியது.
சாதகர்கள் நிறைவு நாளில் தங்கள் புரிதல்களையும் நன்றியுணர்வையும் பகிர்ந்து கொண்டனர்.
சங்கம் குருஜியின் பாதங்களில் சமர்பிக்கும் புஷ்பாஞ்சலியுடன் நிறைவுற்றது — ஒரு ஆழ்ந்த ஆசீர்வாதத் தருணம்.
YSS சன்னியாசிகளிடமிருந்து பிரசாதம் பெறுவது, பேரானந்தத்துடனும், ஆசியுடனும் கூடிய நிறைவைக் குறித்தது.
ஒவ்வொரு சாதகரும் பிரசாதத்துடன், வீட்டில் சாதகப் பயிற்சியைத் தொடர்வதற்கான புதிய அகத் தூண்டுதலுடன் புறப்பட்டனர்.

லிச்சி மரத்தின் அடியில்: குருஜியின் தொலைநோக்குப் பார்வை

பரமஹம்ஸ யோகானந்தர் கூறுகிறார்: “சிறுவர்களுக்கான சரியான கல்வி முறையைப் பற்றிய குறிக்கோள் என்றுமே என் இதயத்திற்கு மிகவும் உகந்ததாகும். உடலையும் புத்தியையும் முன்னேறச் செய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்ட சாதாரண கல்வி முறையின் வறட்சியான பலனை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். நீதி மற்றும் ஆன்மீக நெறிமுறைகளை உணராமல் எவரும் ஆனந்தத்தை அடைய முடியாது; அந்த நெறிமுறைகள் பாடத்திட்டத்தில் இன்னும் சேர்க்கப்படாமலே இருந்தன. நான் சிறுவர்களை முழு நிறைவுள்ள மனிதனாக ஆக்கும் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவத் தீர்மானம் செய்து கொண்டேன்.” (ஒரு யோகியின் சுயசரிதம், அத்தியாயம் 27)

ராஞ்சி ஆசிரமத்தில் உள்ள இந்தப் புனித லிச்சி மரத்தடியில்தான், குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர், இளையோர்களுக்கான ஆன்மீக ஒழுக்கத்தையும், நடைமுறைக் கல்வியையும் ஒருங்கிணைக்கும் ஒரு நவீன குருகுலத்திற்கான தனது தொலைநோக்குபார்வையின் விதைகளை விதைத்தார்.

புதுப்பிக்கப்பட்ட சங்கல்பம்

... எனது முக்திக்குத் தேவையான அனைத்தும் YSS-ல் இருக்கிறது என்பதில் நான் இப்போது முழுமையாக உறுதியாக இருக்கிறேன்.... போதனைகளில் நான் குறை காண மாட்டேன், மாறாக எனது முயற்சிகளில்தான் குறை காண்பேன்.

— பி.கே., மகாராஷ்டிரா

இளம் சாதகர்கள் — அதாவது 18 முதல் 39 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் — சமநிலை ஆன்மீக வாழ்வை பின்பற்றவும் கடைப்பிடிக்கவும் விரும்புவோர், எதிர்கால சங்கங்கள், ஏகாந்த வாசங்கள் மற்றும் ஆன்லைன் ஃபெலோஷிப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக இளம் சாதகர்களின் வாட்ஸ்அப் சமூகத்தில் சேர்க்கப்பட விரும்புவோர், இந்த விருப்பப் படிவத்தை நிரப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இளம் சாதகர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள அடுத்த நிகழ்வுகள் அல்லது வாய்ப்புகள் நெருங்கும்போது, இளம் சாதகர்கள் ஃபெலோஷிப் குழுவினர் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

இதைப் பகிர