ஜன்மோத்ஸவ் வேண்டுகோள் — 2026

2 ஜனவரி, 2026

“உங்கள் எண்ணங்கள் அனுமதிக்கும் அளவுக்கு குரு உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்…. அது, இறைவனின் அம்சமான, அவரது தெய்வீக உணர்வுநிலையுடன் ஒத்திசைவதன் மூலம் கிடைக்கப் பெறும். தியானத்தில் அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எவரும் அவரது உதவியையும் அருளாசிகளையும் பெறுவார்கள்.”

— ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா, YSS/SRF இன் மூன்றாவது தலைவர்

ஜன்மோத்ஸவத்தன்று விசேஷமாக நன்கொடையளித்து புத்தாண்டைத் தொடங்குங்கள்

அன்பார்ந்த தெய்வீக ஆத்மனே,

நம் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் அவதார தினமாகிய புனித ஜன்மோத்ஸவ நன்னாளில் உங்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள். இந்த புனித நன்னாளில், நம் குருதேவரின் உன்னதமான வாழ்க்கை மற்றும் பணியை ஆழ்ந்த அன்போடும், நன்றியோடும் நினைவு கூர நாம் அனைவரும் ஒன்று கூடுகிறோம். அவருடைய தெய்வீகப் பேரொளி, அவருடைய சீடர்களாகிய நம்மையும், மனித குலம் முழுவதையும் தொடர்ந்து ஆசீர்வதித்து வருகிறது. பண்டைய கிரியா யோக ஞானத்தை வெளிப்படுத்தியதன் மூலம், குருதேவர் உண்மையான சாதகர்களை பரம்பொருளின் எல்லையற்ற பேரானந்தத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லக்கூடிய ஒரு தெளிவான, நேரடியான வழியைக் காட்டியுள்ளார்.

ராஞ்சியில் குருதேவரின் புனித பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஓர் அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு, ஜன்மோத்ஸவ் புனித பருவம், குருதேவரின் தெய்வீகப் பணிக்கு சேவை செய்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது, அவரது அன்பிற்குரிய ராஞ்சி ஆசிரமம் வரும் தலைமுறைகளுக்கு அமைதி, ஆறுதல் மற்றும் இறை ஐக்கியத்திற்கான சரணாலயமாக அவரது இருப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவதை உறுதி செய்ய உதவுகிறது.

சமீபத்தில், நம் YSS ராஞ்சி ஆசிரமத்தில் உள்ள விருந்தினர் வசதிகள் மேம்படுத்தப்பட்டதைப் பற்றியும், அரங்கத்தின் புனரமைப்புப் பணிகள் குறித்தும் நாங்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டோம். அதன் பிறகு ஆசிரமத்திற்கு வருகை தந்த பக்தர்கள், அந்த மேம்பாடுகளைத் தாங்கள் எவ்வளவு பாராட்டுகிறார்கள் என்பதையும், அவை தங்களின் ஆசிரம அனுபவத்தில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் தெரிவித்து எங்களுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளனர்.

மிகவும் தேவைப்படும் இந்த நற்பணிகளின் அடுத்த கட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு இப்போது உங்களை வேண்டுகிறோம், இதன் மூலம் எதிர்காலத் தலைமுறை பக்தர்கள் இன்னும் மேன்மையான மற்றும் ஆன்மாவை மேம்படுத்தும் ஒரு புனித யாத்திரையை அனுபவிக்க முடியும்:

மொத்த உத்தேச செலவு: ₹12 கோடி

குருதேவரின் அன்பிற்குரிய ராஞ்சி ஆசிரமத்தை அதன் புனித சூழலில் அடைக்கலம் தேடும் அனைவருக்கும் அமைதி மற்றும் ஆன்மீக மேம்பாட்டின் சரணாலயமாக பாதுகாக்க உங்களின் தாராளமான பங்களிப்பு எங்களுக்கு உதவும்.

குருஜியின் ஆசிரமங்களில் பணிபுரியும் சன்னியாசிகள் மற்றும் சேவகர்களாகிய நாங்கள், உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும், உங்கள் நல்வாழ்வுக்காக தினசரி பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவனும் குருதேவரும் உங்களுக்கு என்றும் அருள் புரியட்டும்.

தெய்வீகத் தோழமையில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

ராஞ்சி — வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு புனித சரணாலயம்

“எனது ஆன்ம-அனுபூதியின் சூட்சும அமிர்தத்தை, பெரும்பாலும் மவுண்ட் வாஷிங்டன் மற்றும் ராஞ்சியில் தெளித்துள்ளேன்…”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, YSS ராஞ்சி ஆசிரமம் ஒரு பேறுபெற்ற புகலிடமாக இருந்து வருகிறது. இங்கு பக்தர்கள், குருதேவரின் இருப்பால் புனிதப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில் பக்தியுடன் நடந்து, அதன் தோட்டங்களில் தியானம் செய்து, ஒவ்வொரு மூலையிலும் இறைவன் மற்றும் குருஜியின் அன்பான இருப்பை உணர்ந்துள்ளனர். குருஜி இளம் சிறுவர்களுக்கு வகுப்புகள் எடுத்த லிச்சி பீடம்; அவர் வசித்த அவரது தியான அறை; மற்றும் அமெரிக்கா செல்ல தெய்வீக தரிசனம் கண்ட ஸ்மிருதி மந்திர் போன்ற புனித இடங்கள் அவரது புனித அதிர்வுகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

எண்ணற்ற பக்தர்கள் ராஞ்சி ஆசிரமத்தை அக அமைதியின் சரணாலயமாகப் போற்றி வந்துள்ளனர்; அங்கே அவர்கள் அமைதி, குணமடைதல், புரிதல் மற்றும் இறைத் தொடர்பு ஆகியவற்றை அனுபவித்துள்ளனர். குருதேவரின் பணி தொடர்ந்து வளர்ந்து வருவதால், இன்றைய யாத்ரீகர்களுக்காக மட்டுமல்லாமல், வருங்கால சாதகர்களுக்காகவும் ஆசிரமத்தின் புனிதத்தன்மையையும் அழகையும் பாதுகாப்பது நமது புனித கடமையாகும்.

பாதைகள் மற்றும் வளாகச் சூழலை மேம்படுத்துதல்

ஆரம்பத்திலிருந்தே, ஆசிரமத்தின் சாலைகளும் பாதைகளும் பெரும்பாலும் சீரமைக்கப்படாமல், காலப்போக்கில் இயற்கையாகவே அமைந்திருந்தன. இது ஆசிரமத்தின் எளிமையைப் பிரதிபலித்தாலும், நீர் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் ஏற்படும் நீர் தேங்குதல், ஏற்றத்தாழ்வுள்ள நிலப்பரப்பு மற்றும் மண் சாலைகளிலிருந்து கிளம்பும் புழுதி ஆகியவை வருகையாளர்களுக்கும் — குறிப்பாக மூத்த பக்தர்களுக்கும் — கணிசமான சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன, மேலும் வாகனப் போக்குவரத்துக்கும் சவாலாக அமைந்துள்ளன.

மேலும், வளாகத்தின் நிலப்பரப்பு வடிவமைப்பிற்கு ஏற்ப சாலை அமைப்பைச் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம். தங்க வரும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலின் அமைதியைப் பாதுகாத்து, பாதுகாப்பு மற்றும் நீடித்துழைப்பை உறுதிசெய்யும் வகையில், இந்த நடைபாதைகளை கவனத்துடன் புதுப்பிப்பது எங்களின் அவசரக் கடமையாகிறது.

ஸ்மிருதி மந்திர் முன் உள்ள நடைபாதைக்கான வரைபடம்

நமது திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடுகள் பின்வருமாறு:

  • சேவை மற்றும் அவசரகால வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்வதற்காக 16 அடி அகலமுள்ள கான்கிரீட் சுற்றுச் சாலை அமைத்தல், அத்துடன் பக்தர்களுக்காகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட நடைபாதைகளை உருவாக்குதல்
  • ஸ்மிருதி மந்திர், சிவ மந்திர், சேவாலயா போன்ற புனிதப் பகுதிகளைச் சுற்றி கற்களால் கட்டப்பட்ட நடைபாதைகள், வசதியையும் பக்தியையும் உறுதி செய்கின்றன
  • விருந்தினர் இல்லப் பகுதிக்கு அருகில் உள்ள, ஸ்ரீ தயா மாதாஜி பக்தர்களை வரவேற்று சந்தித்த கற்பூர மர மேடை, சிவ மந்திர் மற்றும் ஸ்மிருதி மந்திர் ஆகிய முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளை அழகுபடுத்துதல்
  • சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட தோட்ட அமைப்பு மற்றும் தெளிவான வழிகாட்டிப் பலகைகள், பார்வையாளர்களுக்கு வழிகாட்டுவதற்கும் இயற்கைச் சூழலுடன் நல்லிணக்கத்தைப் பேணவும், உதவுகின்றன
  • மைதானம் மற்றும் மத்திய சமையலறைக்கு அருகாமையில், அழகியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட நுழைவு வாயில்கள் கட்டப்படும். இந்த புதிய வாயில்கள், ஒரு YSS ஆசிரமத்தின் அடையாளச் சின்னங்களாக எளிதில் அடையாளம் காணும் வகையில், குருஜி அவர்களே உருவாக்கிய வடிவமைப்பின்படி கட்டப்படும்
  • நிலைத்தன்மைக்கு ஏற்ப சூரியசக்தி ஒளியமைப்பு, மழைநீர் வடிகால் அமைப்பு, மையப்படுத்தப்பட்ட கழிவுநீர் அமைப்பு, அத்துடன் மின்சக்தி மற்றும் குழாய் அமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட அத்தியாவசியமான உட்கட்டமைப்பு மேம்பாடுகள்
ஆசிரமம் முழுவதும் வாகனப் போக்குவரத்திற்கான சுற்றுப்புற அணுகு சாலை மற்றும் பாதசாரிகள் நடைபாதைகளுடன் கூடிய சாலை வலையமைப்பின் வரைபடம்

குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளையோர் நிகழ்ச்சிகளுக்கான வசதிகள்

கடந்த பல வருடங்களாக, குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளம் சாதகர்கள் மத்தியில் YSS போதனைகளில் ஒரு சீரான மற்றும் உற்சாகமளிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ந்து வரும் வரவேற்பு, ஏற்கனவே நடைபெற்று வரும் குழந்தைகளுக்கான சத்சங்க செயல்பாடுகளுடன் கூடுதலாக, கடந்த ஆண்டு ராஞ்சி ஆசிரமத்தில் வாராந்திர பதின்ம வயதினருக்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் பலனளித்துள்ளது.

தற்போது, ​​இந்தத் திட்ட நிகழ்ச்சிகள் தற்காலிக வசதிகளில் நடத்தப்படுகின்றன. மேலும், அறைகள் பற்றாக்குறையால், பல வயதுக் குழுக்களை ஒரே வகுப்பில் இணைக்க வேண்டியுள்ளது, இது உகந்ததாக இல்லை.

சமீபத்தில் ஒரு 17 வயது இளைஞர் இவ்வாறு எழுதினார்:

இத்தகைய வளர்ந்து வரும் ஆர்வத்தையும் தாக்கத்தையும் ஆதரிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள நம் ஆசிரமங்கள், கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளில் ஆன்லைன் மற்றும் நேரில் நிகழ்ச்சிகள் உட்பட இளையோர் நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் ஒரு வலுவான இளையோர் சேவைகள் துறையை நாங்கள் நிறுவியுள்ளோம். வரும் காலங்களில், பங்கேற்பு பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நிகழ்ச்சிகளை வலுப்படுத்தவும், இளம் வயதினரின் ஆன்மீகத் தேவைகளைத் தகுந்த முறையில் பூர்த்தி செய்யவும் பிரத்யேக வசதிகள் அத்தியாவசியமானவை.

இந்தத் தேவையை பூர்த்தி செய்ய, ஸ்ரவணாலயத்திற்கு (புதுப்பிக்கப்பட்ட அரங்கம்) அருகிலுள்ள தற்போதைய கட்டமைப்பை (ப்ரின்ஸிபால் இன் பழைய குடியிருப்பு என்று குறிப்பிடப்படுகிறது) இடித்து, குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளையோர் செயல்பாடுகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் பின்வருவன அடங்கும்:

  • போதுமான சேமிப்பகத்துடன் கூடிய பல அறைகள்
  • ஆடியோ-வீடியோ வசதி கொண்ட பயிலும் இடங்கள்
  • இளையோர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களுக்கான பெரிய பல்நோக்கு அரங்கம்
  • பணியாளர்களுக்கான வரவேற்பறை மற்றும் அலுவலக இடங்கள்
உத்தேச இளையோர் சேவை கட்டடத்தின் வான்வழித் தோற்றம்

YSS பாடங்கள் அச்சிடுதல் மற்றும் பாதுகாப்பதற்கான ஒரு வசதியை உருவாக்குதல்

யோகதா சத்சங்கப் பாடங்களையும் பிற ஆன்மீக வெளியீடுகளையும் அச்சிட்டுப் பரப்புவது குருதேவரின் புனிதப் பணியின் ஒரு முக்கிய அங்கமாகும். ராஞ்சி ஆசிரமத்தில், தற்போது இரண்டு அச்சிடும் இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை பாடங்கள், செய்தி மடல்கள் மற்றும் வெளியீடுகளை ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் தயாரிக்கின்றன.

குருதேவரின் கிரியா யோக போதனைகளின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாதகர்கள் தங்கள் தாய்மொழியில் பாடங்களைக் கற்க உதவும் வகையில், பாடங்களை மேலும் பல இந்திய மொழிகளில் வழங்க YSS திட்டமிட்டுள்ளது. இந்த இயல்பான விரிவாக்கத்திற்கு, அதிக அச்சுப்பணிகளும், மேலும் முக்கியமாக, பாடங்களையும் துணை சாதனங்களையும் பாதுகாப்பாக வைப்பதற்கான அதிக திறன் தேவைப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட பாதுகாக்கும் அறைப் பகுதியின் தள வரைபடம் மற்றும் முப்பரிமாணத் தோற்றம் (கோப்புப் பிரிவுக்குப் பதிலாக அமைக்கப்பட உள்ளது)

இருப்பினும், தற்போது அச்சகத்தில் போதுமான சேமிப்பு இடம் இல்லை. இதனால், காகிதம் மற்றும் மை, அச்சுத்தகடுகள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் போன்ற அத்தியாவசிய அச்சிடும் மூலப்பொருட்கள், இனி போதுமானதாக இல்லாத தற்காலிக ஏற்பாடுகளில் வைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் இப்போது கடிதங்களை விட மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதால், கோப்புப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் பாடங்கள் மற்றும் அச்சகத்திற்கான பிரத்யேக சேமிப்புக் களஞ்சியமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், கோப்புப் பிரிவு கட்டடம் ஏறக்குறைய 70 ஆண்டுகள் பழமையானது மற்றும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அந்தக் கட்டடம் அஸ்திவார மட்டத்திலிருந்து முழுமையாகப் புனரமைக்கப்பட வேண்டும்.

யோகதா சத்சங்க சேவாஸ்ரமத்தில் — மருத்துவ சேவை மையம் வசதிகளை மேம்படுத்துதல்

1958 முதல், YSS ராஞ்சி ஆசிரமத்தில் உள்ள மருத்துவ சேவை மையமான யோகதா சத்சங்க சேவாஸ்ரமம், அன்புடனும் கருணையுடனும் ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்து வருகிறது. இந்த சேவாஸ்ரமத்தில் இலவச கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் ஒரு கண் மருத்துவமனையும், சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும் ஒரு பல்நோக்கு வெளிநோயாளிகள் பிரிவும் (OPD) அடங்கும். இந்த சேவையின் தரம் மற்றும் தன்னலமற்ற தன்மை காரணமாக, ராஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு சேவாஸ்ரமம் நம்பகமான மருத்துவ சேவையின் ஆதாரமாக மாறியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், கண் மருத்துவமனையில் ஒரு புதிய அறுவை சிகிச்சை அறை, கண்புரை அறுவை சிகிச்சைக்கான நவீன உபகரணங்கள், கட்டடத்தைப் புதுப்பித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ஒரு சாய்வுதளம் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய சீரமைப்புகளை மேற்கொண்டோம்.

ஒரு கண் நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும், அங்கு தங்கி பணி புரியும் ஒரு தன்னார்வல மருத்துவர்

இதே அக்கறையையும் தொலைநோக்குப் பார்வையையும் இப்போது வெளிநோயாளிகள் பிரிவு கட்டடத்திற்கும் விரிவுபடுத்த விரும்புகிறோம். தற்போதுள்ள கட்டடம் 60 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது மற்றும் காலப்போக்கில் வலுவிழந்துள்ளது. ஆசிரமத்திற்கு வெளியே உள்ள பொதுச் சாலைகளின் மட்டம் உயர்ந்திருப்பதால், வெளிநோயாளிகள் பிரிவின் தரைத்தளம் இப்போது சாலை மட்டத்திற்குக் கீழே உள்ளது. இதனால், கனமழையின் போது மீண்டும் மீண்டும் தண்ணீர் உள்ளே உட்புகுந்துவிடுகிறது.

சேவாஸ்ரமம் உள்ளூர் சமூகத்திற்குத் தொடர்ந்து திறம்படச் சேவை செய்வதை உறுதி செய்யும் பொருட்டு, வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம் முழுவதுமாகப் புனரமைக்கப்பட வேண்டும். புதிய கட்டடமானது, வெள்ளத்தைத் தடுப்பதற்கென உயர்த்தப்பட்ட பீடத்தையும், நோயாளிகளுக்குத் திறம்பட சேவை செய்வதற்கான மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் ஒரு புதிய பல் மருத்துவப் பிரிவிற்கான வசதியையும் கொண்டிருக்கும்.

சேவாஸ்ரமம் ஆற்றிய கருணைமிக்க சேவை, உள்ளூர் சமூகத்தினரிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் மிகுந்த நன்மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்த புதுப்பித்தல்கள், மனிதகுலத்தைத் தமது பேரான்மாவாகக் கருதி சேவையாற்றும் குருதேவரின் புனிதமான லட்சியத்தை பாதுகாக்க உதவும்.

நிதி நிலை கண்ணோட்டம் மற்றும் காலக்கெடு

  • மொத்த செலவு: ₹12 கோடி
  • எதிர்பார்க்கப்படும் நிறைவு தேதி: டிசம்பர் 2026

திட்டமிடப்பட்ட இந்த மேம்பாடுகள், குருதேவரின் தொலைநோக்குப் பார்வையின்படி, ராஞ்சியை ஓர் உலகத் தரம் வாய்ந்த ஆன்மீக யாத்திரை மையமாகப் பாதுகாப்பதுடன், தேவையுடையோருக்குக் கருணயுடன் சேவை செய்யும் அதன் நீண்டகால பாரம்பரியத்தையும் தக்கவைக்கும்.

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி

குருஜி YSS ஆசிரமங்களை, சாதகர்கள் ஆழ்ந்த தியானம் செய்து, ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் அமைதியை உணர்ந்து, இறைத் தொடர்பில் மேம்படக்கூடிய புனிதப் புகலிடங்களாக மனதில் கண்டார். உங்கள் காணிக்கைகள் – பிரார்த்தனை மூலமாகவோ, சேவா மூலமாகவோ, அல்லது நிதிப் பங்களிப்பு மூலமாகவோ – தற்போதைய மற்றும் எதிர்கால உண்மை நாடுபவர்களுக்காக ராஞ்சி ஆசிரமத்தின் புனித அனுபவத்தைப் பாதுகாக்கின்றன.

இதைப் பகிர