ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியுடனான ஒரு நேர்காணலில் இருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. இது ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா (அப்போதைய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் தலைவர்) மேனிஃபெஸ்டிங் டிவைன் கான்ஷியஸ்னஸ் இன் டெய்லி லைஃப் என்ற புதிய புத்தகத்தை வெளியிட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, இன்டக்ரல் யோகா இதழில், 2014 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளிவந்தது. ஆன்மீகப் பாதையில் வெற்றி பெறுவது என்றால் என்ன என்பதன் சாராம்சத்தை இந்தப் புத்தகம் எப்படி பதிவு செய்துள்ளது என்பதை மையப்படுத்திய நேர்காணல். 2017 ஆம் ஆண்டில் மிருணாளினி மாதாவின் மறைவுக்குப் பிறகு ஸ்வாமி சிதானந்த கிரி ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் இன் தலைவரானார்.
இந்த முழு நேர்காணலையும் யோகதா சத்சங்க இதழின் 2022 வெளியீட்டில் படிக்கலாம். (இந்த இதழின் சந்தாதாரர்கள் இந்த இதழையும், கடந்த கால வெளியீடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்கங்களையும் டிஜிட்டல் முறையில் யோகதா சத்சங்க ஆன்லைன் நூலகத்தின் மூலம் படிக்கலாம்.)
இன்டக்ரல் யோகா இதழ் (IYM): வெற்றியை எவ்வாறு வரையறுப்பீர்கள்?
ஸ்வாமி சிதானந்த கிரி (SC): ஸ்ரீ மிருணாளினி மாதாவின் புதிய நூலான மேனிஃபெஸ்டிங் டிவைன் கான்ஷியஸ்னஸ் இன் டெய்லி லைஃப் தலைப்பு ஒரு சிறந்த பொருள் விளக்கம் என்று நான் நினைக்கிறேன். வாழ்க்கையில் வெற்றி, மற்றும் நிச்சயமாக ஆன்மீக துறையில், என்பது நமது சொந்த தெய்வீக சாரத்தின் – ஆன்மத்தின் உள்ளார்ந்த குணங்களை வெளிப்படுத்துவதாகும்.
IYM: அந்த குணங்கள் என்ன?
SC: 24/7 இல் நாம் கடைப்பிடிக்க விரும்பும் அனைத்து அற்புதமான விஷயங்களும்: பேரின்பம், அன்பு, சமநிலை மனப்பான்மை, அமைதி, எப்போதும் நமது இருப்பின் அமைதி மையத்தில் இருக்கும் திறன். அந்த அமைதி மையத்திலிருந்து நமது அன்றாட வாழ்க்கையில் எழும் சவால்களுக்கு நம்மால் பதிலளிக்க முடியும். எந்த நிகழ்வுகள் நடந்தாலும், தெய்வீக உணர்வுநிலை, தெய்வீக மகிழ்ச்சி, சேவை மனப்பான்மை அல்லது தெய்வீக தன்னலமற்ற தன்மை ஆகிய அடிநீரோட்டத்துடன் அவற்றைச் சந்திக்க நாம் கற்றுக்கொள்ளலாம். பரமஹம்ஸ யோகானந்தர் கூறியது போல்: “தகரும் உலகுகளின் அழிவின் மத்தியில் நிலைகுலையாமல் இருக்க.”
IYM: நாம் எப்படி நிலைகுலையாமல் நிற்க முடியும்?
SC: தொடங்குவதற்கு, நாம் முதலில் தடைகளைப் பற்றி மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் – நம்முள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகில் உள்ள விஷயங்கள் – அந்த வகையான வாழ்க்கையை ஒரு உண்மையான சவாலாக ஆக்குகின்றன. இது சிரமமில்லாத ஒன்று அல்ல. ஆன்மீக வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றத்தின் ஆரம்பமே அது ஒரு போராட்டம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதாகும். வாழ்க்கையில் வெற்றி என்பது ஒரு வெள்ளித் தட்டில் நமக்குக் கொடுப்பதற்காக அல்ல. ஆன்மீக உணர்வுநிலை என்பது சிரமமின்றியோ அல்லது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுவதற்காகவோ அல்ல.
ஒரு வகையில், இது பகவத் கீதை முழுவதின் செய்தியாகும், இது யோகம் பற்றிய நூல்களில் மகத்தானது என்று நான் கருதுகிறேன், எனவே வாழ்க்கையில் உண்மையான வெற்றிக்கான மிகச் சிறந்த மறை நூல். கீதையின் செய்தி, போரிடும் இரண்டு குலங்களின் கதையாகச் சொல்லப்படுகிறது. பரமஹம்ஸ யோகானந்தர் அதன் ஆழமான குறியீட்டு அர்த்தத்தை விளக்கினார். கீதையை யோகக் கண்ணோட்டத்திலிருந்து விளக்கி, அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள பல்வேறு அம்சங்களுக்கிடையிலான போரைப் பற்றியது என்பதைக் காட்டினார். நம்மில் ஒரு பகுதி பொதுவாக அகந்தை, சுயநலம், கட்டுப்பாடற்ற மற்றும் இனிமையற்ற உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறது – நமது அநித்திய இயற்கையின் இருண்ட பக்கம். மறுபக்கம் நம் தெய்வீக ஆற்றலும் திறன்களும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளிருந்து, நமது தெய்வீக இயல்பின் உணர்வுநிலையில் வாழ நம்மை அழைக்கிறது. ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும், முடிவிலும் சுயபரிசோதனையுடன், சுய-பகுப்பாய்வு செய்து , அன்று நிகழ்ந்த அனைத்திற்கும் நமது செயல்கள், மனப்பான்மைகள் மற்றும் எதிர்வினைகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமே வெற்றி பெறக்கூடிய ஒரு தினசரி போர் இது.
எனவே, வாழ்க்கை ஒரு போர் என்று கருதுவது ஒரு கண்ணோட்டம். அங்கிருந்து எங்கே போவது? நம் வாழ்க்கையை எந்த தெய்வீக குணங்களை சுற்றி சுழல வைக்க முயற்சிக்கின்றோமோ அவற்றை நமது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மனப்பான்மைகளில் வளர்க்க முயற்சிப்பதன் மூலம் தொடங்குகிறோம். அதுதான் மிருணாளினி மாதாவின் புத்தகத்தின் பொருள்.
IYM: நாம் எப்படி அந்த குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும்?
SC: பரமஹம்ஸ யோகானந்தர் தினசரி தியானப் பயிற்சியின் அறுதியான அவசியத்தை எவ்வாறு வலியுறுத்தினார் என்பதைப் பற்றி அவர் கூறுகிறார். தியானம் என்பது யோகத்தைப் போலவே – பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். தியானம், அதன் உண்மையான, மாற்றும் சக்தியை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, சலனமற்று அமர்ந்து, அமைதியையும் இணக்கத்தையும் உணர்வதையும் விட மிகவும் மேலானது. தியானம் என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் அந்த உள்ளார்ந்த தெய்வீகத்தன்மையைத் தொடர்பு கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் மனம் மற்றும் ஆன்மாவின் ஒருமுகப்படுத்தும் சக்தியின் மிகுந்த ஒழுக்கத்துடனான பயன்பாடாகும்.
நமது மனித இயல்பின் மனம், இதயம், உணர்வுகள் மற்றும் மேற்பரப்பு உணர்ச்சிகள் ஆகியவை தொடர்ச்சியான எதிர்வினை, எழுச்சி, விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றில் இருக்கும் வரை, இந்த இடைவிடாத உரையாடல் நாம் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தெய்வீக உணர்வின் அமைதியான ஆழங்களை மறைக்கிறது மற்றும் தடுக்கிறது. தியானம் என்பது அமைதியற்ற முரண்பாடான உணர்ச்சிகளையும் தாண்டி நமது விழிப்புணர்வை ஆழமாக எடுத்துச் செல்வதற்கான ஒரு ஒழுக்கமான நடைமுறையாகும் – ஒளி, தெய்வீகத்தன்மை, அமைதி மற்றும் அனைத்தும் பூரணமாக இருக்கும் உயர் மெய்ப்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை இருக்கும் ஆழமான உணர்வுநிலைக்கு.
நமது மனமும், ஆற்றல்களும், புலன்கள் என்னும் உணர்தலுக்கான ஸ்தூல கருவிகள் மூலம் மட்டுமே இயங்கும் போது, இந்த ஜடவுலகமே உண்மையானது என்று நினைக்கும் சூழ்ச்சியில் சிக்க வைக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் இருக்கிறோம். மாயை நம்மை மிகத் தீவிரமான, பயத்தை உண்டாக்கும் உணர்ச்சிகளுக்குள் இழுத்துச் செல்கிறது. தியானம் – பிராணன், உயிர் சக்தி மற்றும் உணர்வுநிலையை வெளிப்புற நாடகத்தில் கவனம் செலுத்தும் வெளிப்புற கருவிகளிலிருந்து திரும்பப் பெறுவதன் மூலம் – நமக்குள் இருப்பது என்ன என்பதை படிப்படியாகக் கண்டறிய அனுமதிக்கிறது, இது ஏற்றத் தாழ்வுகளின் தற்காலிகக் காட்சியை விட மிகவும் உண்மையானது மற்றும் தீர்கமானது. கடந்து செல்லும் நிகழ்ச்சியை விட நம் அக வாழ்க்கை நமக்கு மிகவும் உண்மையானதாக மாறும். அந்த உணர்நிலையில் இருக்கும் திறன் தான், சரியாக பரமஹம்ஸ யோகானந்தர் “தகரும் உலகுகளின் அழிவின் மத்தியில் நிலைகுலையாமல் இருக்க” கற்றுக் கொள்வதைப் பற்றி பேசியதன் அர்த்தம்.
யோகதா சத்சங்க இதழின் 2022 வெளியீட்டில், ஸ்வாமி சிதானந்த கிரி உடனான முழு நேர்காணலையும் நீங்கள் காணலாம். யோகதா சத்சங்கா “உடல், மனம் மற்றும் ஆன்மாவை குணப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட” ஒரு இதழ், ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அச்சிடப்பட்ட வெளியீட்டைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், இதழின் சந்தாதாரர்கள் இதழின் டிஜிட்டல் பதிப்பைக் கொண்ட ஒரு ஆன்லைன் நூலகத்திற்கான அணுகலையும், கடந்த இதழ்களுடன் முன்பு வெளியிடப்பட்ட ஆடியோ உரைகளின் தொடர் ஓட்டங்களையும் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர், கடந்த கால மற்றும் தற்போதைய ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் தலைவர்கள் மற்றும் பிற விருப்பமான எழுத்தாளர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான பக்கங்களின் உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது.