“இறைவனின் ஒரு கண நேரக் காட்சியை” நமக்கு வழங்க விரும்புவதைப் பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

25 மார்ச், 2025

ஓர் அறிமுகம்:

அன்பார்ந்த உலக ஆசான், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் குரு-நிறுவனருமான பரமஹம்ஸ யோகானந்தர், தனது ஒரு யோகியின் சுயசரிதம் இல் தெய்வீக சாதனைக்கான நவீன எடுத்துக்காட்டுகளை வழங்கியுள்ளார். அதில் மகான்களைப் பற்றிய, குறிப்பாக ஆன்ம அனுபூதியை முழுமையாக வெளிப்படுத்திய அவரது முக்தி பெற்ற குருபரம்பரை குருமார்களை பற்றிய அவரது சித்தரிப்பு கோடிக்கணக்கான வாசகர்களை சிலிர்ப்பூட்டியுள்ளது. 

பெரும் மகான்களின் வாழ்க்கையில் ஏராளமாக வெளிப்படுத்தப்படுவதும் மற்றும் ஒவ்வொரு மனிதனிலும் உள்ளார்ந்திருப்பதுமான அமைதி, அன்பு, ஆனந்தம் ஆகியவற்றின் எல்லையற்ற வளங்களை, நாடுபவர்கள் உணர உதவுவதற்காகவே பரமஹம்ஸர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் உணர்ந்து எடுத்துக்காட்டியதை நாமே புரிந்துகொள்வதை ஊக்குவிக்க, ஆனந்தமய “இறைவனின் ஒரு கண நேரக் காட்சியை” நமக்கு வழங்குவதே அவரது விருப்பமாக இருந்தது.

YSS/SRF இன் மூன்றாவது தலைவரும் சங்கமாதாவுமான ஸ்ரீ தயா மாதா, பரமஹம்ஸரைப் பற்றி கூறியதாவது: “அவர், மனித இனத்தின் பாதைக்கு ஒளியூட்டுவதற்காக இப்பூமியில் பேருண்மையின் ஒளி அவதாரங்களாக வாழ்ந்த தெய்வீக ஆன்மாக்களது கூட்டுக் குழுவை சேர்ந்தவர்.” 

இந்தப் பதிவில், பரமஹம்ஸ யோகானந்தரின் வார்த்தைகளில் மற்றும் YSS/SRF தலைவரிடமிருந்து நுண்ணறிவுகளை, (கீழே இணைக்கப்பட்டுள்ளது), தெய்வீகத்தைப் பற்றிய புத்திகூர்மையுடனான அறிவை தனிப்பட்ட மற்றும் அனைத்தையும் திருப்திப்படுத்தும் அனுபவமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.  

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளிலிருந்து:

இந்த இயக்கத்தின்‌ பின்னணியிலுள்ள மகத்தான நோக்கம்‌, மக்களுக்கு அவர்களுடைய சொந்த ஆத்ம-ஞானத்தை அளிப்பதே. இறைவனை அறிதல்‌, அவர்களுடைய கடமையும்‌, தனி உரிமையும்‌ ஆகும்‌ என்பதை மக்கள்‌ உணரும்போது இவ்வுலகில்‌ ஒரு புதிய சகாப்தம்‌ தோன்றும்‌.

நான் உங்களுக்குச் சொற்பொழிவுகள் ஆற்ற அல்ல, ஆனால் என் அனுபவத் தோட்டத்திலிருந்து திரட்டிய அந்த உண்மைகளை அளிக்கவே இங்கு வருகின்றேன்…. நான் உங்களுக்கு அளிப்பதை, இறைவனுடனான உங்களுடைய சொந்த தனிப்பட்ட தொடர்பின் மூலம், நீங்களே உணர வேண்டுமென நான் விரும்புகின்றேன். அந்த புரிந்து கொள்ளும் ஞானத்திற்கு எதுவும் ஈடாக முடியாது.

இறைவனை நீங்கள்‌ ஒருபோதும்‌ அறியாத காரணத்தினால்‌, அவன்‌ இல்லாத குறை எவ்வளவு பெரியது என்பதை உணராமல்‌ இருக்கிறீர்கள்‌ என்பது உங்களுக்கு தெரியாது. அவனுடன்‌ ஒருமுறை நீங்கள்‌ தொடர்பு கொண்டுவிட்டால்‌, பூவுலகிலுள்ள எதுவும்‌ உங்களை அவனிடமிருந்து வேறு திசையில்‌ திருப்பிவிட முடியாது. எனது ஒரே விருப்பம்‌ உங்களுக்கு இறைவனின்‌ ஒரு கணநேரக்‌ காட்சியை அளிப்பதே. ஏனெனில்‌ அவனை பெற்றுவிட்டால்‌, அதைவிட மேலான பேறு வேறொன்றுமில்லை.

நான்‌ கண்டுள்ள ஓர்‌ அற்புதமான கனியைப்‌ பற்றி உங்களுக்குக்‌ கூறி, அதைப்பற்றி ஒரு வருடத்திற்கு தினமும்‌ உங்களுக்கு விரிவாக விவரித்து, ஆனால்‌ அதன்‌ ருசியை உங்களுக்கு என்றுமே தராது இருந்துவிட்டால்‌ நீங்கள்‌ திருப்தியடைய மாட்டீர்கள்‌. மெய்ப்‌ பொருளைப்‌ பற்றிக்‌ கேட்பதால்‌ ஆன்மாவின்‌ பசியைத்‌ தீர்க்க முடியாது…. இறைவனை பேரார்வத்துடன்‌ நீங்கள்‌ தேடுமளவிற்கு இறைவனுக்கான உங்கள்‌ தாகம்‌ மிகவும்‌ ஆழ்ந்து இருக்க வேண்டும்‌.

அவனை எப்படித் தேடுவது என்பதற்கு யோக தியான அறிவியலில் இந்தியா விடை தந்துள்ளது. அந்த தேசத்தின் ஊடாக பயணம் செய்தேன். ஓர் உண்மையான குருவின் காலடியில் அமர்ந்தேன். நான் இறைவன் இருக்கிறான் என்பதைப் பற்றி நம்பிக்கையூட்டப்பட்டது மட்டுமல்லாமல், அவனுடைய இருப்பினைப் பற்றிய என் சாட்சியத்தையும் தருகிறேன். நீங்கள் என்னுடைய வார்த்தைகளை பின்பற்றினால், உங்களுடைய சொந்த உணர்ந்தறிதலிலிருந்து நீங்கள் கூட ஒரு நாள் இறைவன் இருப்பதாகக் கூறுவீர்கள். நான் உண்மையைக் கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரிய வரும்.

தியானம் மற்றும் தெய்வீகத்துடன் உங்கள் உறவு மூலம் உங்கள் வாழ்க்கையின் மிக உயர்ந்த நோக்கம் மற்றும் அர்த்தத்தை கண்டறிவது குறித்து பரமஹம்ஸ யோகானந்தரிடமிருந்து அதிக ஞானத்தைப் பெற உங்களை அழைக்கிறோம். இது உங்கள் எல்லா முயற்சிகளையும் பெரு மகிழ்ச்சியால் நிரப்புகிறது.

“பரமஹம்ஸ யோகானந்தர் உலகிற்கு கொண்டு வந்த 6 ஆன்மீக புரட்சிகர கருத்துக்கள்” என்ற வலைப்பதிவு இடுகையில், ஸ்வாமி சிதானந்தாஜி பரமஹம்ஸ யோகானந்தர் உலகிற்கு கொண்டு வந்த, நவீன நாகரிகத்தின் போக்கையும் யோக விஞ்ஞானத்தை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துபவர்களின் வாழ்க்கையையும் மாற்றும் ஒரு ஆன்மீக புதையல் பற்றிய முக்கிய கருத்துக்களைப் எண்ணிப் பார்க்கிறார்.

இதைப் பகிர