உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் அவர்களால் 2025 மே 11 அன்று அடிக்கல் நடும் விழா நடத்தப்பட்டது
1893 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி நமது அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அவதரித்த உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள இடம் இப்போது ஒரு புனிதமான நினைவு ஆலயமாக உருவாக்கப்பட்டு வருகிறது என்ற நற்செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல ஆண்டுகளாக, தனியாருக்குச் சொந்தமான இந்த சொத்து மற்றும் ஆரம்பகால வீட்டை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) கையகப்படுத்தத் தீவிரமாக முயன்று வருகிறது. எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல காரணிகள் இந்த கனவு நிறைவேறுவதைத் தடுத்தன. உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின் கீழ், உத்திரப் பிரதேச சுற்றுலாத் துறையினால், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தடைகளைத் தாண்டி, சொத்தை வாங்க முடிந்தது.
YSS உடன் இணைந்து, ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலய அறை, ஓர் அருங்காட்சியகம் மற்றும் ஒரு தியான மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அழகிய நினைவு கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புனித தலத்திற்கு வருகை தரவும், மரியாதை செலுத்தவும், தியானம் செய்யவும் விரும்பும் உலகெங்கிலும் உள்ள நமது அன்பிற்குரிய குருதேவரின் பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்த ஆலயம் திறந்திருக்கும். இது இந்தியாவின் தெய்வீகப் பிரேமவதாரத்தின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் பணிக்கு தகுதியான ஒரு புனித யாத்திரைத் தலமாக இருக்கும்.
மே 11, 2025 ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகல், ஸ்ரீ யோகி ஆதித்யநாத், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்வாமி விஸ்வானந்த கிரி மற்றும் YSS நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஸ்வாமி ஈஸ்வரானந்த கிரி மற்றும் ஸ்வாமி சைதன்யானந்த கிரி ஆகியோருடன் புனித இடத்தில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் சுமார் 600 உள்ளூர் கோரக்பூர் பிரமுகர்கள், YSS பக்தர்கள் மற்றும் உலகத்திற்கான குருதேவரின் ஆன்மீக பங்களிப்பைப் போற்றுபவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்பகால வீடு பழுது பார்க்க முடியாத அளவுக்கு சிதிலமடைந்திருந்ததால் இடிக்கப்பட்டது. குருஜியின் புனித அதிர்வுகளால் நிரம்பிய ஆரம்ப காலம் முதலே இருக்கும் கட்டமைப்பிலிருந்து சில செங்கற்களை இணைத்து அதே இடத்தில் புதிய நினைவு ஆலயம் கட்டப்படும். கட்டுமானம் உடனடியாகத் தொடங்கும், சுமார் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புனித திட்டம் தொடர்பான தொடர்ச்சியான புதுப்பிப்புகளை நாங்கள் YSS வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வோம்.



















