உங்களைத்‌ தாங்கும் அந்த எல்லையற்ற சக்தி

பரமஹம்ஸ யோகானந்தர் வழங்கிய “தொடக்கமுயற்சி சக்தியைப்‌ பெருக்கிக்‌ கொள்ளுதல்” உரையின் ஒரு பகுதி. YSS ஆல் வெளியிடப்பட்ட பரமஹம்ஸரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் தொகுப்பின் முதல் பாகமான மனிதனின் நிரந்தரத் தேடல்-இல் இதை முழுமையாகப் படிக்கலாம்.

லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள ஃபில்ஹார்மோனிக் அரங்கத்தில் 1925 ஜனவரியில், யோக விஞ்ஞானம் குறித்த அவரது சொற்பொழிவைக் கேட்க வந்திருந்த பார்வையாளர்களுடன் எடுக்கப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தரின் நிழற்படம்.

நான்‌ ஓர்‌ ஆசிரியர்‌‌ ஆவதற்கு முதலில்‌ தயங்கினேன்—‌அதனுடன்‌ சம்பந்தப்பட்டவை என்னை அச்சறுத்தின. ஓர்‌ ஆசிரியர்‌ அதிர்ச்சிகளைத்‌ தாங்கிக்‌ கொள்பவராக இருக்க வேண்டும்‌; அவர்‌ கலக்கத்திற்கு ஆளாகும்‌ அந்த நிமிடமே, அவருடைய உபகாரத்தை நாடுவோருக்கு அவரால்‌ உதவி செய்ய முடியாது; ஓர்‌ உண்மையான ஆசிரியர்‌ அனைவரையும்‌ நேசிக்க வேண்டும்‌; அவர்‌ மனித இனத்‌தைப்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌, அத்துடன்‌ இறைவனை அறிய வேண்டும்‌.

ஆனால்‌ ஸ்ரீ யுக்தேஸ்வர்‌ இந்த வாழ்க்கையில்‌ எனது பங்கு, நான்‌ ஓர்‌ ஆசானாக இருக்க வேண்டும்‌ என்பதாகும்‌ என்று கூறியபோது, நான்‌ இறைவனின் எல்லையற்ற சக்தியிடம்‌ என்னைத்‌ தாங்கும்படி பிரார்த்தித்தேன்‌. நான்‌ சொற்பொழிவுகள்‌ ஆற்றத்‌ துவங்கியபோது, என்னுடைய சொற்பொழிவுக்குப்‌ பின்னால்‌ வற்றாத படைப்பாற்றலான மகா சக்தி உள்ளது என்ற எண்ணத்தைப்‌ பற்றிக்‌ கொண்டு, நூலறிவால்‌ அல்லாது, அக எழுச்சியின்‌ வாயிலாக உரையாற்றுவேன்‌ என்று நான்‌ என்‌ மனத்தில்‌ தீர்மானித்துக்‌ கொண்டேன்‌. நான்‌ அந்த மகா சக்தியை இதர வழிமுறைகளிலும்‌ கூட, தொழிலில்‌ மக்களுக்கு உதவி புரிவதற்கும்‌ மற்றும்‌ பல வேறுபட்ட வழிகளிலும்‌, பயன்படுத்தியுள்ளேன்‌.

நான்‌ அழியும்‌ மனித மனத்தை, அழிவற்ற பெருவாழ்வைப்‌ பற்றி சிந்திக்க பயன்படுத்தியுள்ளேன்‌. நான்‌, “தெய்வீகத்‌ தந்தையே, அதைச்‌ செய்யவும்‌,” எனக்‌ கூறவில்லை. ஆனால்‌, “தெய்வீகத்‌ தந்தையே, நான்‌ அதைச்‌ செய்ய விரும்புகிறேன்‌. நீ எனக்கு வழிகாட்ட வேண்டும்‌; நீ. என்னை ஊக்குவிக்க வேண்டும்‌; நீ என்னை வழிநடத்த வேண்டும்‌,” எனக்‌ கூறினேன்‌.

சிறு சிறு விஷயங்களை ஓர்‌ அசாதாரணமான வழியில்‌ செய்யுங்கள்‌; உங்களுடைய வழியில்‌ மிகச்‌ சிறந்த ஒருவராகத்‌ திகழுங்கள்‌. நீங்கள்‌ உங்களுடைய வாழ்க்கை சாதாரண முறையில்‌ கழிவதற்கு அனுமதிக்கக்கூடாது; வேறு எவரும்‌ செய்திராத ஏதேனும்‌ ஒன்றை, உலகைத்‌ திகைக்க வைக்கும்‌ செய்யுங்கள்‌. உங்களுக்குள்‌ இறைவனின்‌ சிருஷ்டி தத்துவம்‌ செயல்படுகிறது என்பதைக்‌ காண்பியுங்கள்‌.

கடந்த காலத்தைப்‌ பற்றிக்‌ கவலைப்பட வேண்டாம்‌. உங்களுடைய தவறுகள்‌, கடலைப்‌ போன்று அவ்வளவு ஆழமாக இருந்தாலும்‌, அவை ஆன்மாவையே விழுங்கிவிட முடியாது. கடந்த காலத்‌ தவறுகளின்‌ கட்டுப்படுத்தும்‌ எண்ணங்களால்‌ தடைபடாவண்ணம்‌ உங்கள்‌ பாதையில்‌ முன்னேற சஞ்சலமற்ற திட உறுதியைப்‌ பெற்றிருங்கள்‌.

வாழ்க்கை இருண்டிருக்கலாம்‌, இன்னல்கள்‌ வரலாம்‌, சந்தர்ப்பங்கள்‌ பயன்படுத்தப்படாமல்‌ நழுவிப்‌ போகலாம்‌, ஆனால்‌ உங்களுக்குள்‌ ஒருபோதும்‌ சொல்லிக் ‌ கொள்ளாதீர்கள்‌ : “என்‌ கதை முடிந்துவிட்டது. இறைவன் ‌ என்னைக்‌ கைவிட்டுவிட்டான்‌.” அம்மாதிரியான மனிதனுக்கு யார் தான்‌ எதுவும்‌ செய்ய இயலும்‌? உங்கள்‌ குடும்பம்‌ உங்களைக்‌ கைவிட நேரலாம்‌; நல்லதிர்ஷ்டம் உங்களைக்‌ கைவிடுவது போல்‌ தென்படலாம்‌; மனிதன்‌ மற்றும்‌. இயற்கையின்‌ அனைத்து சக்திகளும்‌ உங்களுக்கு எதிராக அணி வகுக்கலாம்‌; ஆனால்‌ உங்களுக்குள்‌ உள்ள தெய்வீகத்‌ தொடக்க முயற்சி குணத்தைக்‌ கொண்டு, உங்களுடைய சொந்த கடந்த கால தவறான செயல்பாடுகளினால்‌ உருவாக்கப்பட்ட விதியின்‌ ஒவ்வொரு ஆக்கிரமிப்பையும்‌ நீங்கள்‌ தோல்வியுறச்‌ செய்து, சுவர்க்கத்தினுள்‌ வெற்றிகரமாக நடைபோட முடியும்‌.

நீங்கள்‌ நூறுமுறை தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்‌, நீங்கள்‌ வெல்லப்‌ போகிறீர்கள்‌ என்பதில்‌ உறுதியுடன்‌ இருங்கள்‌. தோல்வி முடிவற்ற காலத்திற்கு நீடிக்கும்‌ என்பது இல்லை. தோல்வி உங்களுக்கு ஒரு தாற்காலிக சோதனை. இயல்பாகவே, இறைவன்‌ உங்களை வெல்ல முடியாதவராக ஆக்கவும்‌, உங்களுக்குள்‌ உள்ள எல்லாம்‌ வல்ல சக்தியை நீங்கள்‌ நடத்திக்‌ காட்டும்படியாகச்‌ செய்யவும்‌ விரும்புகிறான்‌. அதனால்‌ வாழ்க்கை மேடையில்‌ உங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும்‌ உன்னதமான பாகத்தை நீங்கள்‌ நிறைவேற்ற முடியும்‌.

புதிய ஆண்டில் என்ன சாதிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறீர்கள்?

மனிதனின் நிரந்தரத் தேடல் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் தொகுப்பின் மற்ற இரண்டு பாகங்களையும் நீங்கள் YSS ஆன்லைன் புக்ஸ்டோர் – இல் காணலாம்.

தியான விஞ்ஞானம் மற்றும் சமநிலையுடன் வாழும் கலை குறித்த பரமஹம்ஸரின் விரிவான வீட்டுக் கல்வி திட்டமான யோகதா சத்சங்க பாடங்கள், வாழ்க்கையை முழுமையாக மாற்றுவதற்கான ஒருவரின் சொந்த படைப்பு முயற்சியின் எல்லையற்ற ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான அவரது முழுமையான போதனைகள் மற்றும் உத்திகளை முன்வைக்கிறது.

இதைப் பகிர