எழுதியவர்: டாக்டர் பினய் ரஞ்சன் சென்
டாக்டர் சென், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் ஆவார். அவர் ஐக்கிய நாட்டு சபையின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்திற்குப் பொது மேலாளராகவும் இருந்தவர். 1990-ல், ஸ்ரீ தயா மாதா இயற்றிய நூலான ஃபைன்டிங் தி ஜாய் விதின் யு (அகத்தின் உள்ளே ஆனந்தத்தைக் கண்டறிதல் – ஆங்கிலத்தில்) என்ற நூலின் முகவுரையில் அவர் இதனை எழுதியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், தெய்வீக ஆன்மாவான பரமஹம்ஸ யோகானந்தரைச் சந்திக்கும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது; அவரது ஆன்மாவும் போதனைகளும் அவரது முதன்மை சீடரான, இப்போது நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீ தயா மாதா அவர்களால் மிக அருமையாக இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பரமஹம்ஸரைச் சந்தித்த அந்த அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக எனது நினைவில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மார்ச் 1952. நான் 1951-ன் இறுதிப்பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, பணி நிமித்தமாக பயணித்துப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது லாஸ் ஏஞ்சலீஸை அடைந்தவுடன், பரமஹம்ஸரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் மேலோங்கி நின்றது. ஏனெனில், ஆத்ம அனுபூதி பற்றிய அவரது போதனைகள் அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய ஆன்மீகத் தாக்கத்தை உருவாக்கி இருந்தது.
நான் பரமஹம்ஸரைப் பற்றியும், அவரது பணிகளைப் பற்றியும் நிறைய கேள்விப் பட்டிருந்த போதிலும், மௌண்ட் வாஷிங்டனில் உள்ள செல்ஃப்-ரியலைசேஷன் மையத்தில் நான் பார்த்த விஷயங்களுக்கு, உண்மையில், என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. அங்கு சென்று சேர்ந்த கணத்திலிருந்தே, நான் 3000 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்து, நாம் புனித சாத்திர நூல்களில் படிக்கும் பழமையான ஆசிரமத்திற்கு சென்று விட்ட உணர்வு ஏற்பட்டது. அங்கே மேன்மை தங்கிய அந்த ரிஷி,சன்னியாசி களுக்கே உரிய காவி தரித்த சீடர்களால் சூழப்பட்டு இருந்தார். நவீன யுகத்தின் ஆரவாரத் தாக்குதல்களுக்கு ஆளான சமுத்திரத்தில், அமைதியும் தெய்வீக அன்பும் நிரம்பிய ஒரு தனித் தீவாக அது காட்சியளித்தது.
பரமஹம்ஸர், என் மனைவியையும் என்னையும் வரவேற்பதற்காக வாயிலில் நின்றுகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் ஏற்பட்ட பாதிப்பு அளவிட முடியாதது. வேறெப்போதும் கண்டிராத வகையில், நான் மேம்படுத்தப்பட்டதை உணர்ந்தேன். அவரது முகத்தைத் தரிசித்த போது, பேரொளியில் என் கண்கள் கூசின. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆன்மீக ஒளி அவர் மீது பிரகாசித்தது. அவரது எல்லையற்ற மென்மை, கருணை மிகுந்த அன்பு ஆகியவை என் மனைவியையும் என்னையும் வெதுவெதுப்பான சூரிய ஒளியைப் போலச் சூழ்ந்து கொண்டன
அடுத்தடுத்த நாட்களில் தம்மால் ஒதுக்க முடிந்த ஒவ்வொரு கணத்தையும் அவர் எங்களுடன் கழித்தார். நாங்கள் இந்தியாவின் துயரங்களைப் பற்றியும், நமது தலைவர்கள் மக்களின் நிலையை மேம்படுத்த மேற்கொண்டு வரும் திட்டங்கள் பற்றியும் விவாதித்தோம். அவர் ஓர் ஆன்மீகவாதியாக இருந்த போதிலும், மிகவும் சாதாரணமான உலகியல் பிரச்சனைகளைப் பற்றிய புரிதலும், நுட்பமான பார்வையும் அவரிடம் இருந்ததைக் கண்டேன். இந்தியாவின் புராதன ஞானச் செல்வத்தின் சாராம்சத்தைச் சுமந்து சென்று, உலகெங்கும் பரப்பும் ஓர் உண்மையான இந்தியத் தூதரை அவரிடம் கண்டேன்.
பில்ட்மோர் விடுதியில் நடைபெற்ற விருந்தில் அவருடன் இருந்த இறுதிக் காட்சி, என் மனதில் நிரந்தரமாகப் பதிவாகியுள்ளது. அந்த நிகழ்ச்சிகள் வேறு இடங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. அது ஓர் உண்மையான மகாசமாதிக் காட்சி. ஓர் உன்னதமான ஆத்மாவால் மட்டுமே எவ்வாறு இறைவனில் ஐக்கியமாக முடியுமோ அது போலவே அவர் பிரிந்து சென்றார், என்று உடனே தெளிவாயிற்று. நாங்கள் யாரும் துக்கம் அனுஷ்டிக்க விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். அது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தெய்வீக நிகழ்வை நேரில் கண்ட மிக உயர்வான ஓர் அனுபவம்.
ஒரு தெய்வீக நிகழ்ச்சியை தரிசித்த அந்த நாள் முதலாக, எனது பணி என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது. தென் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய இடங்களில் பரமஹம்ஸரின் தெய்வீக ஒளியால் ஈர்க்கப்பட்டவர்கள், என்னை நாடி, அந்த உயர்ந்த மனிதரைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேச சொன்னார்கள் — அவரது வாழ்க்கையின் இறுதி நாட்கள் தொடர்பாக வெளிவந்த புகைப்படங்களில் நான் இருந்ததைக் கண்டதால். என்னைப் பார்க்க வந்த அனைவரிடமும் சிக்கல் மிகுந்த காலகட்டத்தில், தமது வாழ்க்கையைச் சரியான திசையில் செலுத்துவதற்கான ஒரு வழியைத் தேடும் அவசரமும் ஏக்கமும் இருந்ததை காணமுடிந்தது. குருதேவர் தொடங்கி வைத்த பணி, அவருடைய மகாசமாதிக்குப் பின் நசித்துப்போவதா, இல்லவேயில்லை, அது உலகெங்கிலும் மேலும் அதிகமான மக்களின் மீது ஒளி வீசிக் கொண்டு இருப்பதை நான் பார்க்கத் தொடங்கினேன்.
அவர் தோற்றுவித்த மரபு, வேறு எந்த இடத்தையும் விட, அவர் தம் புனித சீடரான தயா மாதாவிடம்தான் மிக அதிகமாகப் பிரகாசித்தது. தமது காலத்திற்குப் பிறகு, தம் சுவடுகளை அடியொற்றிச் செல்வதற்கு குருநாதர் தயாராக்கி இருந்தார். இவ்வுலகை விட்டு நீங்கும் முன், குருநாதர் ஸ்ரீ தயா மாதாவிடம் கூறினார், “நான் சென்றுவிட்டபின் அன்பால் மட்டுமே என்னிடத்தை நிரப்ப முடியும்.” என்னைப் போல, பரமஹம்ஸரைச் சந்திக்கும் பேறுபெற்ற எல்லோரும் குருநாதரிடம் கண்ட அதே தெய்வீக அன்பும் கருணையும் தயா மாதாவிடம் பிரதிபலிப்பதைக் காண்கிறார்கள். அதுவே, 40 ஆண்டுகளுக்கு முன்பாக, எஸ்.ஆர்.எஃப். மையத்திற்கு நான் முதன்முதலாகச் சென்ற போது என்னைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நூல் மூலமாக, அன்னையார் பதிவு செய்துள்ள சொற்களில், அவரது வாழ்க்கையில் குருநாதர் பாய்ச்சிய அன்பு மற்றும் ஞானக் கதிர்கள், விலைமதிப்பற்ற பரிசாக நமக்குக் கிடைக்கின்றன. அவை எனது வாழ்க்கையிலும் ஆழமாகப் பதிந்துள்ளன.
இந்த உலகம் புத்தாயிரத்தை (புதிய மில்லேன்னியம்) நோக்கி நகரும் தருவாயில், வரலாறு காணாத அளவிற்கு, இருளும் குழப்பமும் மிரட்டுகின்றன. ஒரு நாட்டிற்கு எதிராக மற்றொரு நாடு, ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதம், இயற்கைக்கு எதிராக மனிதன் என்ற பழைய வழிமுறைகள், உலகளாவிய அன்பு, புரிதல், மற்றவர் மீது அக்கறை ஆகியவை கொண்ட புதிய மெய்க்கருத்தில் கடந்து செல்லப்பட வேண்டும். இதுவே இந்திய மகான்களின் நிலைபேறான செய்தி — நமது சமகாலத்தவர்க்கும், எதிர்வரும் தலைமுறைகளுக்கும் பரமஹம்ஸ யோகானந்தர் கொணர்ந்த செய்தி. அவர் விட்டுச்சென்ற தீபம் தற்போது தயா மாதாவின் கரங்களில் உள்ளது. அது, தமது வாழ்க்கைக்கான திசையைத் தேடிக் கொண்டிருப்பவர்களின் பாதையில் ஒளிவீசி வழிகாட்டும் என்று நான் நம்புகிறேன்.