ஸ்ரீ தயா மாதா வழங்கிய “இறைவனுடன் ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்தல்”

9 பிப்ரவரி, 2024

லோட்டஸ்

ஃபைன்டிங் த ஜாய் விதின் யூ: பர்சனல் கவுன்சல் ஃபார் காட் சென்டர்ட் லிவிங். என்ற புத்தகத்தில் “டீபனிங் யுவர் லவ் ஃபார் காட்” என்ற உரையின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. ஸ்ரீ தயா மாதா பரமஹம்ஸ யோகானந்தரின் ஆரம்பகால மற்றும் நெருங்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார், மேலும் 1955 முதல் 2010 இல் அவர் மறையும் வரை அவரது சமூகத்தின் ஆன்மீக முதல்வராக பணியாற்றினார்.

இறைவனை நாட உலகைத் துறந்து ஒரு ஆசிரமத்தில் நுழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு மும்முரமாக இருந்தாலும் சரி, அவனுடன் அன்பான, தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள நேரத்தைக் காண முடியும்..

இந்த நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் உள்ள குருதேவரின் சமூக விவகாரங்களை கவனிக்கும் எனது பொறுப்புகளுடன் , உங்களில் மிகவும் மும்முரமானவரைப் போலவே நான் மும்முரமாக இருக்கிறேன். ஆனால் இறைவனுக்குத்தான் முதலிடம். அதில் குறுக்கிட எதையும் நான் அனுமதிப்பதில்லை. இறைவனுக்காக ஏங்குவதும், தினமும் தியானத்தில் அவனுக்காக நேரம் ஒதுக்கும் மன உறுதியும்தான் அவசியம்.

தியானம் என்பது உங்களுக்கு ஒரு வழக்கமான, சலிப்பூட்டும் செயலாக ஒருபோதும் மாறிவிடக் கூடாது. எனது பயணங்களில் நான் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்றிருக்கிறேன், மேலும் உலகம் முழுவதும் பக்தர்கள் சிதறிய கவனத்துடன் தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்வதைக் கண்டிருக்கிறேன்.

ஜெருசலேமில் இயேசு கிறிஸ்து நடமாடிய மற்றும் இறைவனுடன் உரையாடிய புனித ஸ்தலங்களுக்கு நான் சென்றதையும், பிரார்த்தனை நடத்தும் பாதிரியார் இயந்திரத்தனமாக பிரார்த்தனை செய்வதையும், அவர் யாரிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவனைக் காட்டிலும் அவரது வருகையாளர்களில் அதிக ஆர்வம் காட்டியதையும் நினைவுகூர்கிறேன். என் அக உணர்வு “இல்லை, இல்லை, இல்லை! நீங்கள் கிறிஸ்துவுடன் தொடர்பு கொள்ளத் தான் இங்கே இருக்கிறீர்கள்?” என்பதாக இருந்தது.

அதேபோல், இந்தியாவில் உள்ள கோயில்களில், பூஜாரிகள் இறைவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றவர்களை மும்முரமாக பார்த்துக் கொண்டே பூஜைகள் செய்வதையும் கண்டிருக்கிறேன், அவர்களுடைய பிரார்த்தனைகள் எவரிடம் கூறப்பட்டனவோ அவன் செவிமடுக்கவில்லை, ஏனென்றால் அந்த பக்தர்கள் அவனைப் பற்றி நினைக்கவில்லை!

நவீன சமயத்தின் ஆழமான குறைபாடு என்னவென்றால், அது வெளிப்புற நிகழ்வுகளில் மூழ்கி, யாரை மையமாக கொண்டு சுழல வேண்டுமோ அந்த ஒருவன் முற்றிலுமாக மறக்கப்படுவதுதான்.

நாம் தியானம் செய்ய அமரும்போது, இறைவனுடன் மட்டும் தான் நாம் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்று குருதேவர் கற்பித்தார். வேறு எந்தக் கவனச்சிதறலையும் நுழைய விடாமல் இறைவனுடன் ஐந்து நிமிடம் மட்டுமே பேசினால் கூட, அவனுடனான உங்கள் உறவு படிப்படியாக உண்மையானதாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.

ஒரு முனைப்பட்ட பக்தியை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வழி, இறைவனின் நாமத்தை அல்லது அவனுக்கான ஒரு குறு சிந்தனை அல்லது பிரார்த்தனையை மனதளவில் மீண்டும் மீண்டும் உச்சரிப்பதாகும். இதைத்தான் இந்தியா ஜப யோகம் என்கிறது, மேற்கத்திய நாடுகள் இதை “இறை இருப்பைப் பயிற்சி செய்வது” என்று அறிகின்றன.

இறைவனுக்கான ஏக்கத்தை, குருதேவரின் பிரபஞ்ச கீதங்கள் போன்று, இறைவனை நோக்கிய ஒரு பாடலின் வாயிலாக, வெளிப்படுத்துவதும் உதவியாக இருக்கும். இறைவனுக்காக எழுதப்படவில்லை என்றாலும் கூட, அவனை நோக்கிப் பாடத் தக்க, நேசத்தை வெளிப்படுத்தும் பல இனிமையான பாடல்கள் உள்ளன. குருதேவருக்கு மிகவும் பிடித்த ஒன்று “தி இந்தியன் லவ் கால்”. இப்படிப்பட்ட, உணர்வுகளையும், ஏக்கத்தையும் ஒரு மனித அன்பனுக்கு அல்ல, இறைவனுக்கு அர்ப்பணிப்பது எவ்வளவு சிலிர்ப்பூட்டுவதாய் இருக்கிறது.

மேலும், எப்போதும் இறை அன்பில் மூழ்கியிருந்த குருதேவரின் வாழ்க்கை போன்ற மகத்தான ஆன்மாக்களின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள்.

யாருடைய அன்பு உங்களுக்கு உத்வேகம் அளிக்கிறதோ, அந்த, நீங்கள் மிகவும் நேசிக்கும், ஒருவரைப் பற்றி நினைப்பது, பக்தியை எழுப்புவதற்கு ஒரு சிறந்த உதவியாகும். குருதேவர் தன் தாயிடம் கொண்டிருந்த அழகான, உன்னதமான, தூய்மையான அன்பை நினைத்துப் பார்த்தார், அவர் தம் தாயை மிகவும் மதித்தார். ஒரு நபரிடம் நீங்கள் உணரும் அன்பை நீங்கள் நினைவுகூரும்போது – உதாரணமாக உங்கள் தாய் – உங்கள் மனதையும் உணர்வையும் “ஓ, தெய்வீக அன்னையே, என் தாயின் உருவில் என்னிடம் வந்தவள் நீயே என்பதை நான் அறிவேன்.” என்று தெய்வீக அன்னையிடம் திருப்புங்கள்.

அது பெற்றோர், கணவன், மனைவி, குழந்தை அல்லது நண்பராக கூட இருக்கலாம். அந்த நபரின் இனிமையான குணத்தைப் பற்றி சிந்தியுங்கள், உங்கள் இதயத்தில் அன்பு பொங்கும் போது, உடனடியாக உங்கள் மனதை இறைவன் மீது வையுங்கள். அந்த தருணங்களில் நினையுங்கள்: “நீ அவருக்குள் அன்பை விதைத்தாலொழிய இந்த நபர் என்னை நேசிக்க முடியாது.” எல்லா அன்பும் இறைவனிடமிருந்தே வருகிறது. நீங்கள் இவ்வாறு சிந்திக்கும்போது, நீங்கள் நேசிப்பவர்களுக்குப் பின்னால் இருக்கும் பேரன்பின் மீது படிப்படியாக அன்பை வளர்க்கத் தொடங்குகிறீர்கள்.

ஒவ்வொரு நாளிலும், யாராவது உங்களுக்கு உதவ ஏதாவது செய்தால், அந்த கொடையில் இறைவனின் கரத்தை எப்போதும் பாருங்கள். உங்களைப் பற்றி எவரேனும் கூறக்கூடிய நல்வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் இறைவனின் குரலைக் கேளுங்கள். நல்ல அல்லது இனிமையான ஒன்று உங்கள் வாழ்க்கையை அருளினால், அது இறைவனிடமிருந்து வந்ததாக உணருங்கள்.

உங்கள் வாழ்க்கையின் அனைத்தையும் இறைவனுடன் தொடர்புபடுத்துங்கள். அந்த வகையில் சிந்தித்துப் பாருங்கள், திடீரென்று ஒரு நாள், “ஓ, அவனுடன் மட்டும்தான் நான் சம்பந்தப் பட்டிருக்கிறேன்” என்று காண்பீர்கள்.

அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் இறைவன் தான் பொதுக் காரணியாக இருக்கிறான். நம் எல்லா செயல்களுக்கும் பின்னால் உள்ள முதன்மையான இயக்குநர், நம்முடைய மிகப்பெரிய நலன் விரும்பி மற்றும் நன்மையாளர். அவனை நேசிக்கவும், பதிலுக்கு அவனுடைய அன்பைப் பெறவும் இதைவிட பெரிய ஊக்கம் வேறு என்ன இருக்க முடியும்?

லோட்டஸ்

இதைப் பகிர