குரு-சிஷ்ய உறவின் வாயிலாக மட்டுமே மனித ஆன்மா இறைவனை நோக்கித் தன் காலடிகளைத் திருப்பலாம், ஏனெனில் இறுதியான முக்தி மூன்று காரணிகளைச் சார்ந்தது: சாதகரின் முயற்சி, குருவின் உதவி, மற்றும் இறைவனின் கருணை…. குருவின் உதவி இன்றியமையாதது, ஏனெனில் பக்தர் ஐயமுறும்போதோ, அல்லது அவருடைய ஆன்மீக உறுதி பலவீனமடையும்போதோ, அவர் குருவிடம் தீவிரமாக பிரார்த்தனை செய்தால், இறைவனின் அந்த ஊர்தி அவரை ஆசிர்வதித்து அவருக்கு பாதையைக் காட்டும்.
— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
அன்பரே,
குரு பூர்ணிமா என்பது, சீடனை முழுமையான ஆன்ம விடுதலைக்கு வழிநடத்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய கருவியான, ஒருவரின் மதிப்பிற்குரிய சத்குருவுக்கு ஆழ்ந்த நன்றியையும், அன்பையும், விசுவாசத்தையும் செலுத்துவதற்கான ஒரு புனித நன்னாள் ஆகும். நமது அன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரை நாம் பெற்றதற்கும், அனைத்தையும் அரவணைக்கும், எப்போதும் ஊக்கமளிக்கும் இறை அன்பின் வடிவம் பரிபூரணமாக அவருள் இருப்பதற்கும் நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்.
வாழ்க்கையில் எந்தத் தடையையும் விட சக்தி வாய்ந்தது, குருவின் ஞானம் வழிநடத்தும் அறிவுறுத்தல்களையும், சாசுவத நட்பையும் ஏற்கும்திறன் கொண்டவர்களுக்கு அவர் அளிக்கும் தவறாத உதவியும், அருளாசியும் தான் என்று மகான்கள் நமக்கு உறுதியளித்துள்ளனர். இவ்வுலகில் நாம் அடிக்கடி சிரமங்களும் கவனச்சிதறல்களும் நிறைந்து பயணிக்கும்போது, குருதேவரை மீண்டும் மீண்டும் அழைக்க நினைவில் வைத்தால்-அன்புடனான சரணாகதியுடனும் பணிவுடனும் அவரது இருப்பிற்கு நமது இதயங்களையும் மனதையும் திறந்து வைத்தால்-நமக்குத் தேவையான தெய்வீக உதவியையும் நுண்ணறிவையும் சந்தேகத்திற்கு இடமின்றி நாம் பெறுவோம். அவருடைய நிரந்தர பராமரிப்பில் புகலடைவதால், நாம் எதிர்கொள்ளவும் வெல்லவும் முடியாத சவால் எதுவும் இல்லை.
குருதேவருக்குப் பிரியமானவரே, அவரது தெய்வீக உணர்வுநிலையுடன் உங்கள் இணக்கத்தை ஆழப்படுத்துவதற்கான அக உறுதியை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதே உங்களுக்கான எனது பிரார்த்தனை. அவருடைய புனித கிரியா யோக போதனைகளைப் பின்பற்றுவதில் நீங்கள் உங்களை முழுமையாக அர்பணிக்கும்போது, உங்கள் உணர்வுநிலை தூய்மையடைந்து மாற்றியமைக்கப்படுகிறது; மேலும் அவர் உங்களை பரம்பொருளடனான ஐக்கியத்திற்கு, உங்கள் சொந்த கைவல்யத்திற்கு நெருக்கமாக தொடர்ந்து ஈர்த்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஜெய் குரு!
இறைவன் மற்றும் குருதேவரின் அன்பிலும் தொடர்ச்சியான அருளாசிகளிலும்,
ஸ்வாமி சிதானந்த கிரி