“உலகிற்கு மேலும் அதிக தெய்வீகப் பேரொளியை கொணர்தல்” பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

21 டிசம்பர், 2023

ஓர் அறிமுகம்:

வருடத்தின் இந்த நேரத்தில், பல்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சார்ந்த பலர், இந்த உலகின் அத்தியாவசிய அங்கமாக இருக்கும், நம்மை உயர்த்தவும் பராமரிக்கவும் செய்கின்ற அந்த தெய்வீக ஒளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சடங்குகள் மற்றும் நினைவுகளில், ஒருமுகப்படுத்துதலுடனும் அமைதியுடனும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

இந்த பூமியில், அந்த சக்திவாய்ந்த இருப்பு வேறு எந்த வழியிலும் இல்லாத வகையில், கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்து போன்ற மகாத்மாக்களின் அவதாரங்களில் வெளிப்படுகிறது, அவர்கள் தெய்வீகஒளி மற்றும் ஆழ்ந்த உத்வேகத்தின் வடிவமாக நம்மிடம் வருகிறார்கள் — மேலும் இந்த யுகத்தில், தாங்கள் அடைந்த முக்தியை அடைவதற்கான வழிமுறைகளை நமக்குக் கொண்டு வந்துள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, நாம் பெரும் மகிழ்ச்சியைக் கண்டறியவும், உலகம் ஆன்மீக ரீதியில் உருவாவதற்கும், நாம் அவர்களைப் போல ஆக முடியும், மாற வேண்டும் என்பதை நினைவூட்ட மகான்கள் வருகை புரிகிறார்கள்!

சங்கமாதாவும் YSS/SRF-இன் நான்காவது தலைவருமான ஸ்ரீ மிருணாளினி மாதா, இறைவனின் குழந்தைகளாகிய நாமும் “முழு உலகிற்கும் இறை அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்பும் ஒளியின் தூதுவர்களாக” மாற முயற்சிக்க வேண்டும் என்று பரமஹம்ஸர் கூறுவார் என்று பகிர்ந்து கொண்டார். எல்லாவற்றையும் போலவே இதற்கும் நேரமும் பயிற்சியும் தேவை.

விடுமுறைக் காலத்தின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மத்தியில், உள்ளார்ந்திருக்கும் தெய்வீகப் பேரொளியுடன் மெய்யாகவே தொடர்பு கொள்வதற்கும், உலகிற்குத் தேவையான “ஒளியின் தூதர்களில்” ஒருவராக இருத்தல் என்றால் என்ன என்பதைப் பற்றி சிறிது நேரம் நிதானித்து சிந்தித்துப் பார்க்க உங்களை அழைக்கிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் படைப்புகளிலிருந்து:

ஒரு திரையரங்கத்தில்‌, புரொஜெக்டர்‌ திறப்பின்‌ வழியாக வெளிப்படும்‌ ஒளிக்கற்றையே அசையும்‌ படங்களுக்கு ஆதாரமாவதுபோல்‌, சாசுவதத்தின் அறையிலிருந்து வெளிப்படும்‌ தெய்வீக ஒளியாகிய பிரபஞ்ச பேரொளியே நம்‌ அனைவருக்கும்‌ ஆதாரமாகிறது.

ஒரு குகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருள் ஆட்சி செலுத்தலாம், ஆனால் ஒளியை உள்ளே கொணர்ந்தால் , பின்னர் இருளானது ஒருபோதும் அது அங்கு இல்லாதிருந்தது போல் மறைந்து விடுகின்றது…. ஆழ்ந்த தியானத்தில் உங்களுடைய ஆன்மீக கண்ணை திறப்பதன் மூலம் அதனுடைய அனைத்தையும் வெளிப்படுத்தும் தெய்வீக ஒளியினால் உங்களது உணர்வு நிலையை நிரப்பி நீங்கள் இருளை விரட்டிவிட முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சமயத்தில், கிறிஸ்து-அன்பு மற்றும் ஆனந்தத்தின் அதிர்வுகள் வழக்கத்தை விட வலுவாக விண்ணுலக மண்டலங்களிலிருந்து பூமிக்கு வெளிப்படுகின்றன. இயேசு அவதரித்த போது பூமியில் பிரகாசித்த எல்லையற்ற ஒளியால் வானவெளி நிரப்பப்பட்டது. பக்தி மற்றும் ஆழ்ந்த தியானத்தின் மூலம் ஒத்திசைந்து இருப்பவர்கள் கிறிஸ்து இயேசுவில் உள்ளார்ந்திருந்த எங்கும் நிறைந்த உணர்வுநிலையின் மாற்றும் அதிர்வுகளை வியக்கத்தக்க உணர்வுபூர்வ வழியில் உணர்கிறார்கள்.

இருள்‌ என்பது, ஒளி இன்மையே. மாயை தான்‌ இருள்‌. மெய்ம்மையே ஒளி. உங்களுடைய ஞானத்தின்‌ கண்கள்‌ மூடி இருப்பதால்‌, நீங்கள்‌ இருளை மட்டும்தான்‌ பார்க்கிறீர்கள்‌; எனவே அந்த மாயையில்‌ துன்புறுகிறீர்கள்‌. உங்களுடைய உணர்வுநிலையை மாற்றுங்கள்‌; உங்களுடைய கண்களைத்‌ திறவுங்கள்‌, விண்மீன்களில்‌ அந்த இறைச்‌ சுடரொளியைக்‌ காண்பீர்கள்‌. விண்வெளியில்‌ நீக்கமற நிறைந்துள்ள இறையொளிச்‌ சிரிப்பு மின்னுவதை நீங்கள்‌ காண்பீர்கள்‌. ஒவ்வொரு எண்ணத்தின்‌ பின்னரும்‌ அவனுடைய ஞானக்‌ கடலினை நீங்கள்‌ உணர்வீர்கள்‌.

[சங்கல்பம்: ] “உமது மேன்மை ஒளியுடன் நான் ஒன்றியிருக்கிறேன் என்பதை அறிவேன். துயரக் கடலில் அலைக்கழிக்கப்படுபவர்களுக்கு நான் ஒரு கலங்கரை விளக்காக இருப்பேனாக.”

இறைவனின் தெய்வீக சக்தி என்னூடே பாய்கிறது; என் பேச்சு, என் மூளை, என் உயிரணுக்கள், மற்றும் எனது உணர்வு நிலையின் ஒவ்வொரு பகுதியினூடே பாய்கின்றது. என் ஒவ்வொரு சிந்தனையும் அவனது தெய்வீக ஒளி கடந்து செல்லும் ஒரு வாய்க்கால். உங்கள் இதயங்களைத் திறந்து வைத்து உங்களின் ஊடாகவும் தெய்வீகப் பேரொளி கடந்து செல்கின்றது என்பதை உணருங்கள். நான் உணர்வதைப் போன்று நீங்களும் உணர்வீர்களாக; நான் தரிசிப்பதை போன்று நீங்களும் தரிசிப்பீர்களாக.

விழித்தெழுங்கள்! உங்கள் கண்களை திறவுங்கள்; இறைவனது—மகிமையை அனைத்து பொருட்களின் மீதும் பரவிக் கொண்டிருக்கும் பரந்த காட்சியான இறையொளியை நீங்கள் தரிசிப்பீர்கள். தெய்வீக யதார்த்தவாதிகளாக இருங்கள் என உங்களிடம் நான் கூறுகின்றேன், மேலும் அதனால் நீங்கள் அனைத்து கேள்விகளுக்கான பதிலை இறைவனிடத்தில் பெறுவீர்கள். தியானம் தான் ஒரே வழி.

வலைத்தளத்தில், படைப்பின் ஒவ்வொரு துகளிலும் மற்றும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறையும் இறைவனின் உலகளாவிய உணர்வுநிலையின் பேரொளியுடன் நம்மை இசைவித்திருத்தல் என்ற கிறிஸ்துமஸின் ஆழமான கொண்டாட்டம் குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் கூடுதல் ஞானக் குறிப்புகளுடனான ஒரு வலைப்பதிவு இடுகையைப் படிக்கலாம்.

இதைப் பகிர