“நிலக்கரி கூடை” — ஒரு இந்திய பாரம்பரியக் கதையை நினைவு கூரல்

09 நவம்பர், 2023

தனது மாணவர்களுக்கு பகவத் கீதையிலிருந்து கற்பித்த பின், முனிவர், அவர்கள் தங்கள் காலை வேலைகளைச் செய்வதை கவனித்தார்.

“பிரேமல், ஏன் இவ்வளவு சோகம்?” சமீபத்தில் ஆசிரமத்திற்கு வந்த ஒரு சிறுவனிடம் கேட்டார்.

“ஐயா, கீதையைப் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அதன் பிறகு எனக்கு அதிகம் நினைவில் இருப்பதில்லை. மற்ற சிறுவர்கள் புனித போதனைகளைப் பற்றி எளிதாகப் பேசுகிறார்கள், எனக்கு எதுவும் தெரியாது.” பிரேமல் விரக்தியுடன் தரையைப் பார்த்தான். “நான் இவ்விடத்திற்கு ஏற்றவனாக இல்லை என்று உணர்கிறேன்,” என்று அவன் முடித்தான்.

முனிவர் ஒரு கணம் யோசித்தார். பிறகு, “பிரேமல், நிலக்கரிக் கூடையைக் கொண்டு வா” என்றார். அந்தச் சிறுவன் சேவை செய்வதை விரும்பினான், மாணவர்கள் அடுப்புக்கு நிலக்கரியை எடுத்துச் செல்லும் கூடையுடன் ஆர்வத்துடன் திரும்பினான். கூடையின் உள்ளே அதன் தினசரி சுமையின் தூசியால் கறுப்பாக இருந்தது.

“இந்தக் கூடையில் ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்பி என்னிடம் கொண்டு வா” என்றார். சிறுவனின் குழப்பமான முகத்தைக் கண்டு, “நான் சொல்வதைச் செய்” என்று மேலும் கூறினார்.

சிறுவன் கூடையை ஆற்றில் ஆழ்த்தினான், ஆனால் அவன் திரும்பி வருவதற்குள் தண்ணீர் முழுவதும் வெளியே கசிந்தது. “மீண்டும் அதைச் செய்” என்று முனிவர் கட்டளையிட்டார். சிறுவன் ஐந்து முறை கூடையில் தண்ணீர் நிரப்பினான், ஒவ்வொரு முறையும் வேகமாக ஓடினாலும், முனிவரை அடையும் போது கூடை எப்போதும் காலியாகவே இருந்தது.

இறுதியாக அந்த சிறுவன், “ஆசானே, நீங்கள் எனக்கு ஒரு சாத்தியமற்ற பணியைக் கொடுத்திருக்கிறீர்கள். இந்த கூடையில் தண்ணீர் கொண்டு வர முயற்சிப்பது பயனற்றது.”

“இது பயனற்றது என்கிறாயா?” முனிவர் அவனை வினவினார். “கூடையின் உள்ளே பார்.”

சிறுவன் பார்த்தான். கூடை இப்போது வித்தியாசமாக இருப்பதைக் கண்டான். அது சுத்தமாக இருந்தது; தண்ணீர் கருப்பு தூசியின் அனைத்து தடயங்களையும் கழுவிவிட்டிருந்தது.

முனிவர் விளக்கினார், “பகவத் கீதையை நாம் படிக்கும் போது எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாமல் இருக்கலாம். ஆனால், பொறுமையுடனும், பயபக்தியுடனும் கேட்பது கூட, உன் இதயம் அழியும் மானுட மாயையிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் விடுவிக்கப்படும் வரை, படிப்படியாக உன் மனநிலையை மாற்றிவிடும்.”

முனிவர் சிறுவனை அன்புடன் அரவணைத்து, “இறைவன் அறிஞன் அல்ல, அன்பன். நீ அவனை மனதார நாடினால், அவன் எவ்வாறு முழுமையாக உன்னை மாற்றியுள்ளான் என்பதை ஒரு நாள் நீ காண்பாய்.”

இதைப் பகிர