பரமஹம்ஸர் தனது புத்தகங்கள் மற்றும் பாடங்களில், வெளிப்புற பௌதீக ஆதாரங்கள் (சரியான உணவு, சரியான சுவாசம், போதுமான சூரிய ஒளி) அத்துடன் உள் ஆதாரங்கள் (ஆன்மா மற்றும் பரமாத்விடமிருந்து பாயும் தெய்வீக உயிர் சக்திகள் மற்றும் உணர்வு நிலை) ஆகிய இரண்டையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு நம் உடலிலும் மனதிலும் மகத்தான உயிர்சக்தியை பராமரிக்க கற்றுக்கொள்ளலாம் என்பதைக் காட்டுகிறார்.
பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் தொகுப்பின் இரண்டாவது பாகமாகிய, தெய்வீகக் காதல் என்ற நூலின் ஒரு பகுதியில் “சோர்வின்றி வேலை செய்வது எப்படி” என்ற அவர் தலைப்பின் கீழ் இந்தக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசுகிறார்.
உணவு என்பது சக்தி வினியோகத்தின் ஓர் இரண்டாம் தரமான ஆதாரம் ஆகும். உடலுக்குள் பாயும் மிகப்பெரிய சக்தி ஓட்டமானது, உடலினைச் சுற்றிலும் இருக்கின்ற மற்றும் பிரபஞ்சத்தில் சர்வ வியாபகமாக விளங்குகின்ற அறிவுத்திறன் கொண்டபிரபஞ்ச ஆற்றலிலிருந்து வருகின்றது.…
(திட) உணவை சக்தியாக மாற்றுவதற்கு உடலுக்கு மணிக்கணக்காகின்றது, ஆனால் உங்களது இச்சா சக்தியைத் தூண்டுகிற எதுவும் சக்தியை உடனடியாக உற்பத்தி செய்துவிடும்.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா கற்பிக்கின்ற சக்தியூட்டும் உடற்பயிற்சிகளின் முறையானது, இச்சா சக்தியைப் பயன்படுத்தி, பிரபஞ்ச ஆதாரத்திலிருந்து சக்தியை ஈர்த்து, பின் அந்த சக்தியை உடலில் உள்ள நூறாயிரம் கோடி உயிரணுக்களுக்கும் இச்சா சக்தியின் மூலம் பகிர்ந்தளிக்கின்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.
சக்தியானது பயனற்ற செயல்கள், கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிவேகங்கள், முறையற்ற வாழும் பழக்கங்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக வீணடிக்கப்படுகின்றது. நீங்கள் அமைதியாக இருக்கும்பொழுது, சிறிதளவு ஆற்றலையே பயன்படுத்துகிறீர்கள், ஆனால் நீங்கள் கோபமாகவோ அல்லது வெறுப்பு நிறைந்தவராகவோ அல்லது வேறு வகையான உணர்ச்சிவயப்பட்டவராகவோ இருக்கும்பொழுது, நீங்கள் ஆற்றலின் பெரும்பாகத்தைப் பயன்படுத்துகிறீர்கள். ஒரு நுட்பமான இயந்திரத்தை இயக்குகையில் முறையான கவனம் தேவைப்படுகின்றது; உடல்-இயந்திரத்தைப் பயன்படுத்துகையில் அதே முக்கியத்துவம் செலுத்தப்பட வேண்டும்….
எனவே, உயிர் சக்தியின் இரகசியம், நீங்கள் பெற்றிருக்கும் சக்தியைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதும், இச்சா சக்தியின் மூலம் உடலினுள் புதிய சக்தியைக் கொண்டு வருவதுமாகும். எப்படி?
முதலில் நீங்கள் விருப்பத்துடன் செயலாற்ற வேண்டும். ஒரு விஷயம் செய்வதற்குப் பயனுடையதாயின், அது விருப்பத்தோடு செய்யப்பட வேண்டும். நீங்கள் விருப்பத்துடன் வேலை செய்யும் பொழுது, நீங்கள் அதிக சக்தியைப் பெறுகிறீர்கள், ஏனெனில் நீங்கள் மூளையில் உள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து மட்டும் சக்தியை ஈர்ப்பதில்லை, ஆனால் பிரபஞ்சக்தியின் அதிக ஓட்டத்தை உடலினுள் ஈர்க்கின்றீர்கள்….
நமது செயல்களுக்கான பெரும்பாலான மின்னோட்டத்தை உடல் மின்கலத்தின் பெளதீகரீதியான வினியோகத்திலிருந்து — உணவு, பிராணவாயு மற்றும் சூரிய ஒளியிலிருந்து வடிக்கப்பட்ட சக்தியிலிருந்து–நாம் ஈர்க்கின்றோம். இச்சா சக்தியின் உணர்வுபூர்வமான உபயோகத்தின் வாயிலாகக் கண்ணுக்குப் புலப்படாத பிரபஞ்ச ஆதாரத்திலிருந்து நாம் போதுமான சக்தியை ஈர்ப்பதில்லை.
மனத்திட்பமும் சக்தியும் ஒன்றிணைந்து செல்கின்றன
உணர்வுடன் பயன்படுத்தப்படுகின்ற இச்சா சக்திக்கும், கற்பனைத் திறனுக்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. கற்பனை என்பது ஒருவர் வெளிப்படுத்த விரும்புகிற ஏதோவொன்றின் கருத்துருவம்.
நீங்கள் அதிக உயிர் சக்தியை உணர்ந்து கொண்டிருப்பதாக இரவும் பகலும் நீங்கள் கற்பனை செய்வதன் மூலம் சிறிதளவு வலிமையைப் பெறுவீர்கள், ஏனெனில் கற்பனைத் திறனுக்கு ஒரு சிறிய அளவு இச்சா சக்தியாவது தேவைப்படுகின்றது. மாறாக, ஒருவர் உயிர் வீரியத்தை இச்சா சக்தியுடன் தீர்மானிக்கும் பொழுது, உடனடியாக அங்கு உண்மையிலேயே சக்தி இருக்கின்றது.
நீங்கள் கோபமடைந்து ஒருவரை கடுமையாக அடிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்; உணர்ச்சி வேகத்தினால் தூண்டப்பட்ட இச்சா சக்தி, அந்த செயலுக்கான சக்தியை ஈர்க்கின்றது; ஆனால் அதன்பிறகு உடனடியாக சக்தி துண்டிக்கப்பட்டு, உங்களது உயிர் வீரியம் மிகவும் குறைந்துவிடுகின்றது.
ஆனால் ஓர் ஆக்கப்பூர்வமான வழியில் நீங்கள் இடைவிடாது உங்களது உடலினுள் சக்தியை ஈர்ப்பதற்கு தீர்மானித்து, யோகதா ஸத்ஸங்க சக்தியூட்டும் உடற்பயிற்சிகளின்-உணர்வுடன்கூடிய உயிர்ச் சக்தி கட்டுப்பாடு-கோட்பாட்டைப் பயன்படுத்தினால், இச்சா சக்தியின் உதவியுடன், பிரபஞ்ச மூலத்திலிருந்து அளவற்ற சக்தியை நீங்கள் ஈர்க்கமுடியும்.
உடல் என்பது வெறும் உயிரணுக்களின் ஒரு தொகுதியாக இருப்பதால், அது சக்தி இழக்கும் பொழுது, முழு உடலையும் இவ்வாறு நீங்கள் இச்சா சக்தியுடன் சக்தியூட்டினால், அந்த உயிரணுக்கள் உடனடியாகயும், இடைவிடாமலும் மறுசெறிவூட்டப்படுகின்றன. இச்சா சக்தி என்பது தெய்வீக மூலத்திலிருந்து உடலினுள் அதிக சக்தியை செல்லவிடுகின்ற ஸ்விட்ச் ஆகும்.
இச்சா சக்தி இவ்வாறு இளமையையும், உயிர்த்துடிப்பையும் பேணுவதில் ஓர் ஆற்றல்வாய்ந்த காரணியாக விளங்குகின்றது. நீங்கள் முதியவரென உங்களையே நம்பச் செய்து கொண்டால், இச்சா சக்தி செயலிழந்ததாகி, நீங்கள் நிச்சயமாக முதுமையடைந்தவராக ஆகிவிடுகின்றீர்கள்.
நீங்கள் சோர்வுற்று இருப்பதாக ஒருபோதும் கூறாதீர்கள்; அது இச்சா சக்தியை செயலிழக்கச் செய்கிறது, பின் நீங்கள் சோர்வுற்றவர் ஆகிறீர்கள். “எனது உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது,” எனக் கூறுங்கள். உடலானது, உங்களது ஆன்மாவிற்கு தனது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாது, ஆன்மா உடலை ஆளவேண்டும், ஏனெனில் ஆன்மாவானது உடலால் உண்டாக்கப்பட்டதும் இல்லை, உடலினைச் சார்ந்ததாகவும் இல்லை. ஆன்மாவின் இச்சா சக்தியிலேயே அனைத்து சக்தியும் அடங்கியுள்ளது.
இறைவன் சித்தம் கொண்டான், அங்கே ஓளி உண்டாகியது — பிரபஞ்ச படைப்பு சக்தியானது விண்ணுலகங்களாகவும், நமது உடல்களாகவும் மற்றும் அனைத்து வடிவங்களாகவும் உறைந்தது. இச்சா சக்தியே ஒளி, ஏனெனில் ஒளியே இறைவனது இச்சா சக்தியின் முதல் வெளிப்பாடாக இருந்தது. மேலும் இந்த ஒளி அல்லது மின் சக்தியானது, உயிர் வடிவங்களை படைக்கக்கூடிய ஒரு திருப்திகரமான அடிப்படைக் கூறாக இருந்ததை அவன் கண்டான்.
விஞ்ஞானிகள் சடப்பொருள் ஒளியாக இருக்கிறதா அல்லது ஒளி சடப்பொருளாக இருக்கிறதா என ஆராய்கின்றனர். ஒளி முதலில் தோன்றி, சடப்பொருளின் இன்றியமையாத கட்டமைப்பாக உள்ளது.
எனவே சக்தியும், இச்சா சக்தியும் ஒன்றுசேர்ந்து செல்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். இது மிகவும் எளிமையான ஒரு சூத்திரம். சக்தியானது உலகியல் ஆதாரங்களிலிருந்து மட்டுமே வருகிறது என்ற கருத்துக்கு நாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம். அதனால் இச்சா சக்திக்கு உடனடியாகப் பதிலளிக்கின்ற பிரபஞ்ச ஆதாரத்திலும் அதனைப் பெற்று செயலாற்றுவதிலும், நம்பிக்கைக்கொள்ள நாம் தவறிவிடுகிறோம்.
வரம்பற்ற பிரபஞ்ச மூலத்திலிருந்து நேரடியாக சக்தியை ஈர்த்துக்கொள்வதற்கு உங்களது இச்சா சக்தியை நீங்கள் பயன்படுத்துகின்ற யோகதா ஸத்ஸங்கத்தின் வழிமுறையை கற்றுக்கொண்டால், இனி எப்பொழும் சோர்வினால் நீங்கள் துன்புறமாட்டீர்கள்.
பரமஹம்ஸ யோகானந்தரின் YSS சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் கிரியா யோகப் பாதையின் ஒரு பகுதியாக கற்பிக்கப்படும் முழுமையான தியான விஞ்ஞானத்தை கற்றுக்கொள்ள, பரமஹம்ஸரின் -விரிவான வீட்டுக் கல்வி திட்டமான யோகதா சத்சங்க- பாடங்களைப் படிக்கவும் விண்ணப்பிக்கவும் உங்களை அழைக்கிறோம். இது உடல், மனம் மற்றும் ஆன்மாவின் உயிர்வீரியம் மற்றும் அதிகபட்ச நல்வாழ்வை உருவாக்குவதற்கான அவரது ஆழமான “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
“கிரியா யோகத்தின் இந்த எளிய மற்றும் குறையில்லாத பயிற்சிகள், படிப்படியாகவும், முறையாகவும் அதிகரிக்கப்படும்போது,” அவர் ஒரு யோகியின் சுய சரிதம்—இல் எழுதுகிறார், “மனிதனின் உடல் சூட்சுமமாக நாளுக்கு நாள் மாறுகிறது. இறுதியில் பரமாத்மாவின் முதல் ஸ்தூல செயல் வெளிப்பாடான பேரண்ட சக்தியின் வரையற்ற ஆற்றலை வெளிப்படுத்தும் தகுதி உடையதாகிறது.”