“உண்மையான பக்தி என்றால் என்ன?” என்ற கேள்விக்கு பகவான் கிருஷ்ணன் பதிலளிக்கிறான்

9 பிப்ரவரி, 2024

லோட்டஸ்

YSS/SRF-இன் உத்வேகம் அளிக்கும் வாராந்திர ஆன்லைன் உரைகள் தொடரின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட “ஹௌ டிவோஷன் ரிவீல்ஸ் த இன்விஸிபில் காட்” என்ற சொற்பொழிவில் SRF சன்னியாசி ஸ்வாமி கமலானந்த கிரி அவர்கள் கூறிய ஒரு கதை பின்வருமாறு. முழு உரையையும் இங்கே காணலாம்.

ஒரு நாள் பகவான் கிருஷ்ணன் தனது சீடர்கள் சிலருடன் ஒரு நதிக்கரையில் அமர்ந்து இயற்கையின் அமைதியை அனுபவித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து சீடர்களில் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: “கிருஷ்ண பெருமானே, உண்மையான பக்தி என்றால் என்ன என்பதை எங்களுக்கு விளக்க முடியுமா? ஒரு உண்மையான பக்தன் உண்மையில் எப்படி பக்தியை வளர்த்துக் கொள்கிறான்?”

ஆன்மீகக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள தனது சீடர்களுக்கு உதவுவதில் கிருஷ்ணன் எப்போதும் ஆர்வம் காட்டினார், எனவே அவர் சீடரிடம் கூறினார்: “நீ ஏன் ஆற்றுக்குச் சென்று, ஆற்றங்கரையிலிருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்து என்னிடம் கொண்டு வரக்கூடாது?” சீடன் கீழ்ப்படிந்து ஒரு சிறிய கூழாங்கல்லைக் கொண்டு வந்து கிருஷ்ணனிடம் கொடுத்தான்.

“இந்தக் கூழாங்கல் வெளியில் எப்படி ஈரமாக இருக்கிறது பார்” என்றான் கிருஷ்ணன். “இப்போது இந்தக் கூழாங்கல்லை இரண்டாக உடையுங்கள்.” சீடன் ஒரு பெரிய கல்லை எடுத்து கூழாங்கல்லை இரண்டாக உடைத்தான்.

கிருஷ்ணன் கூறினான்: “கூழாங்கல் வெளியில் ஈரமாக இருந்தாலும், உள்ளே எப்படி முற்றிலும் உலர்ந்திருக்கிறது என்று பாருங்கள். இது இறை பக்தியையும் அன்பையும் மேம்போக்காக, அதுவும் கூட அவர்கள் ஆன்மீக சூழலில், சிறந்த சூழ்நிலையில் இருக்கும் வரை மட்டுமே கொண்டிருக்கும் பக்தர்களைப் போன்றது, அகமானது இந்த உணர்வுகள் ஏதுமின்றி எப்போதும் உலர்ந்தேயிருக்கும். மேலும் அந்த ஆன்மீக சூழலில் இருந்து அவர்கள் அகற்றப்படும் அக்கணத்தில், அவர்களது பக்தி காணாமல் போய் விடுகிறது.”

சீடர்கள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு கிருஷ்ணன் எழுந்து ஆற்றங்கரைக்குச் சென்று தனது பட்டுச் சால்வையின் ஓரத்தை தண்ணீரில் நனைத்தான்.

அவன் அதை சீடர்களிடம் திரும்ப கொண்டு வந்து சொன்னான்: “இதன் நூல்கள் நீரை சொட்டும் அளவுக்கு எப்படி முழுவதுமாக நனைந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள்? பெரும்பாலான பக்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் பக்தியில் நிரம்பி, இறை அன்பு சொட்ட இருக்கிறார்கள். ஆனால் நான் தண்ணீரிலிருந்து என் சால்வையை எடுக்கும் அந்த தருணத்திலேயே காற்று அதை உலர்த்தி விடும், சிறிது நேரத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியே இருக்காது.

“அதேபோல், இந்த பக்தர்கள் தெய்வீக செயல்பாடுகளால் சூழப்பட்டு, ஆன்மீக சகவாசத்தில் இருந்து, தியானம், பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபடும்போது, அவர்கள் பக்தியில் நிரம்பி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் உலகியல் வாழ்வுக்கு திரும்ப அனுப்பப்பட்ட தருணத்தில், அவர்களின் பக்தி மறைந்து விடுகிறது.”

சீடர்கள் தங்கள் குரு அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை ஊகிக்க முயன்றனர். சிறிது நேரம் கழித்து, கிருஷ்ணன் ஒரு சர்க்கரைக் கட்டியை சீடர்களில் ஒருவரிடம் கொடுத்து, “போய் இதை தண்ணீரில் போட்டு விடு” என்று கூறினான், சீடர் அப்படியே செய்தார்.

ஒரு நிமிடம் கழித்து, கிருஷ்ணன், “போய் எடுத்து வா” என்றான். சீடர் சென்று பார்த்தார் ஆனால் சர்க்கரை தண்ணீரில் கரைந்திருந்தது, எங்கும் காணப்படவில்லை. கிருஷ்ணன் சொன்னான்: “ஒரு உண்மையான பக்தன் அப்படித்தான் இருப்பான். அவன் அல்லது அவள் தங்கள் அகந்தையை இறைவனிடம் கரைத்து விடுகிறார்கள். இனி பிரிவு என்பது இல்லை. அவர்கள் ஒன்றே ஆகிவிடுகின்றனர்.”

லோட்டஸ்

இதைப் பகிர