பரமஹம்ஸ யோகானந்தரின் “சங்கல்பங்கள் மூலமாக உங்கள் ஆழ் மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குதல்”

9 மே, 2024

பரமஹம்ஸ யோகானந்தர், 1940 இல் கலிபோர்னியா, என்சினிடாஸ்-இல் ஆற்றிய “ட்ரெய்னிங் த கான்ஷியஸ் அண்ட் சப்கான்ஷியஸ் மைண்ட் ஃபார் சக்ஸஸ்” என்ற உரையின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. யோகதா சத்சங்க இதழின் ஜூலை-செப்டம்பர் மற்றும் அக்டோபர் – டிசம்பர் 2015 வெளியீடுகளில் இரண்டு பகுதிகளாக முழு உரை வெளியிடப்பட்டது, மேலும் யோகதா சத்சங்க ஆன்லைன் நூலகத்தில் முழுஉரையையும் வாசிக்கலாம் – இது இதழின் சந்தாதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு விரிவான ஞான வளமாகும்.

இந்த வலுவூட்டும் மற்றும் ஊக்கமளிக்கும் தலைப்பில் வழங்கப்பட்ட முழுமையான விளக்கத்திலும், மற்றும் அவரது யோகதா சத்சங்க பாடங்களிலும் பரமஹம்ஸர், உணர்வு மற்றும் ஆழ் உணர்வு மனங்களை ஒருவர் எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பது மட்டுமல்லாமல், உள்ளுணர்வின் மூலம் உண்மையை நேரடியாக உணரும் ஆன்மாவின் அனைத்தையும் அறியும் சக்தியான உயர் உணர்வு மனதை, வெற்றிக்காக எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை பற்றியும் மிக ஆழமாக விவாதிக்கிறார்.

ஆழ் மனதிற்கு வலிமையையும் சரியான சிந்தனையையும் ஊட்ட, சங்கல்பப் பயிற்சியின் மூலம் உங்கள் மனதிற்கு நேர்மறை எண்ணங்களையும் மேம்பாடுகளையும் அறிவுறுத்துங்கள். அரைத் தூக்க நிலை இதற்கு உகந்தது. தூங்குவதற்கு சற்று முன்பும் பின்பும் உள்ள காலகட்டம் தான் அதிகம் ஏற்கும் நிலையில் இருக்கும்; அதனால்தான் சிலர் “தூக்கக் கற்றல்” அல்லது தூக்கத்தின் போது ஆழ்மனப் பயிற்சி என்பதை பரிந்துரைக்கின்றனர்.

ஒரு பெண்மணி தன் கணவனின் புகை பிடிக்கும் பழக்கத்தை போக்க நினைத்தாள். ஒவ்வொரு இரவும் அவனது படுக்கை அருகில் நின்று, “நாளுக்கு நாள், எல்லா வகையிலும், நீங்கள் புகைப்பழக்கத்தை விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்,” என்று குரல் கொடுப்பாள். ஆனால் அவளது கணவன் இன்னும் தூங்கியிருக்கமாட்டார். தன்னைக் குணப்படுத்த மேற்கொண்ட தன் மனைவியின் முயற்சிகளை முடிந்த வரையில் அவர் சகித்துக்கொண்டார், அதற்கு மேல், “ஒழியட்டும், நான் சிகிச்சை குணம் பெற விரும்பவில்லை!” என்று கதறினார். எனவே நீங்கள் ஒருவருக்கு ஒரு நல்ல பழக்கத்தை பரிந்துரைக்கும் போது, அவர் ஏற்றுக் கொள்கிறாரா அல்லது நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

கருத்து என்னவென்றால்: நீங்கள் உறுதிப்படுத்துகையில் முரண்பாடான எண்ணங்கள் உங்கள் ஆழ் மனதில் எழும்ப அனுமதிக்கக் கூடாது. நீங்கள் எதை சங்கல்பித்துக் கொண்டாலும், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் மறைந்து போகும் வரை மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்துவதைத் தொடர வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த சங்கல்பத்தில் உங்கள் உணர்வுநிலை தோயும் வரை அதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் நோய்வாய்ப்பட்டு குணமடைய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். “பரிபூரண ஆரோக்கியம் என் உடல் அணுக்கள் அனைத்திலும் ஊடுருவியுள்ளது,” என்று நீங்கள் சங்கல்பித்துக் கொள்ளலாம். அதே சமயம், உங்கள் ஆழ் மனதில், “நீங்கள் முடிந்துவிட்டீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியாது!” என்ற ஒர் உணர்வோட்டம் சொல்கிறது. உங்கள் ஆழ் மனம் ஊக்கம் கெடுக்க முயற்சித்தாலும், நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டால், இறுதியில் எதிர்மறையாக எண்ணும் ஆழ்மன பழக்கத்தை விரட்டி, நல்ல ஆரோக்கியத்திற்கான புதிய சிந்தனை முறையை தொடங்குவீர்கள். அப்போது நீங்கள் குணமடைய முடியும், ஏனென்றால் சக்திவாய்ந்த ஆழ் மனம், உடலைப் பராமரிக்கும் மற்றும் சரிசெய்யும் அனைத்து உயிரியக்க செயல்முறைகளையும் கட்டுப்படுத்துகிறது.

ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்வதற்கு முன், நீங்கள் விரும்பும் எதையும் அடைவதை மிகவும் ஆழமாக உறுதிப்படுத்துங்கள். நீங்கள் இறைவனை விரும்பினால், ஒவ்வொரு இரவும் “நானும் என் தந்தையும் ஒன்றே,” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இறைவனுக்காக பிரார்த்தனை செய்தால், மற்ற எல்லாவற்றிற்காகவும் பிரார்த்தித்து விட்டீர்கள் என்பதாகும். உங்கள் தேவையை இறைவன் அறிவான். காதை இழுத்தால் தலையும் உடன் வரும். இறைவனைக் கண்டறிவதில், எல்லா நியாயமான ஆசைகளும் முழுமையாக நிறைவேறுவதைக் காண்பீர்கள்.

உங்கள் ஆழ்உணர்வில் சந்தேகிக்கும் மனம் சொல்லக்கூடும், “ஓ, தியானத்தால் என்ன பயன்? நான் தியானம் செய்தேன், ஆனால் இறைவன் என்னிடம் வரவில்லை!” இது தான் நான் போராட வேண்டிய மிக மோசமான சிந்தனை தடை. ஆனால் நான் தியானத்தில் விடாமுயற்சியுடன் இருந்ததாலும், தோல்வியைப் பற்றிய அந்த எண்ணம் மறையும் வரை என் ஆழ்மனதை தொடர்ந்து உணர்வுபூர்வ மனஉறுதி மற்றும் சங்கல்பம் செய்தல் ஆகிவற்றுடன் எதிர்த்து நின்றதாலும், இறைவன் சமாதி-ஆனந்தத்தின் மகிமையில் தன்னை எனக்கு வெளிப்படுத்தினான்.

இதைப் பகிர