இலக்குகளை அடைய தொடக்க முயற்சியின் சக்தியைப் பயன்படுத்துவது பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

16 ஜனவரி, 2024

ஒரு அறிமுகம்:

வாக்குறுதிகளால் நிறைந்த புதிய ஆண்டை நோக்கி, அதன் புதிய சக்தியையும், நம்பிக்கை உணர்வையும் ஏற்கும் திறனோடு கூட நீங்கள் பயணிக்கும்போது, உங்களின் அனைத்து தகுதியான ஆன்மீக மற்றும் பொருள்சார் இலக்குகளை நோக்கி சீராக முன்னேறுவதற்கான நுட்பம் குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் விவேகமிக்க கண்ணோட்டத்தை உங்களுக்குக் வழங்க விழைகிறோம்.

“தொடக்கமுயற்சி சக்தியைப்‌ பெருக்கிக்‌ கொள்ளுதல்‌” (மனிதனின் நிரந்தரத் தேடல் புத்தகத்தில் உள்ளது) என்ற கட்டுரையில் அவர் எழுதுகிறார்: இவ்வுலகின்‌ விரிந்து பரந்த அழகான காட்சியையும்‌, தமது வாழ்நாள்‌ காலத்தின்‌ ஊடாக அசுர-வேக கதியில்‌ முந்திக்‌ கொண்டிருக்கும்‌ மனிதக்‌ கூட்டங்களையும்‌ பார்க்கும்‌ ஒருவர்‌, இவையெல்லாம்‌ எதைப்‌ பற்றியது என ஆச்சரியப்படாமல்‌ இருக்க முடியாது. நாம்‌ எங்கே போய்க்‌ கொண்டிருக்கின்றோம்‌? இதன்‌ உள்நோக்கம்‌ என்ன? நமது இலக்கை அடைவதற்கான மிகச்சிறந்த மற்றும்‌ மிக நிச்சயமான வழி யாது?

தொடக்க முயற்சி, மனிதனாக இருப்பதற்கான மாபெரும் பண்புகளில் ஒன்றாகும் என்று பரமஹம்ஸர் அந்தக் கட்டுரையில் கூறுகிறார். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் உள்ள எல்லையற்ற ஆற்றலைப் பற்றிய ஆழமான புரிதலுடன் அவர் தனது வாசகர்களிடம் கேட்கிறார்: “நீங்கள்‌ இந்தத்‌ தெய்வீகக்‌ கொடையைக்‌ கொண்டு உங்கள்‌ வாழ்க்கையில்‌ என்ன சாதித்திருக்கிறீர்கள்‌? எத்தனை பேர்‌ தங்களுடைய சிருஷ்டிக்கும்‌ ஆற்றலைப்‌ பயன்படுத்த உண்மையிலேயே முயல்கின்றனர்‌?”

நீங்கள் உங்கள் தியானங்களை ஆழப்படுத்தி, கனவுகளை வெளிப்படுத்த முயற்சிக்கும்போது, முக்கியமான ஆன்ம குணமான தொடக்கமுயற்சியை செயல்படுத்தி, புதிய ஆண்டில் தெய்வீக ஊக்கத்தையும் உதவியையும் உண்மையிலேயே உணர 2024-இன் இந்த முதல் செய்திமடலைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

பரமஹம்ஸர் தொலைநோக்காக உணர்ந்ததைப் போல, தொடக்க முயற்சி உள்ள நபராக மாறுவது உங்கள் சக்திக்கு உட்பட்டது என்று நம்புங்கள்: “… ஓர்‌ எரிநட்சத்திரத்தைப்‌ போன்று பிரகாசமாவது ‌—பரம்பொருளின்‌ மாபெரும்‌ கண்டு பிடிக்கும்‌ ஆற்றலைக்‌ கொண்டு, ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்றை சிருஷ்டிப்பது‌, சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவது‌.”

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் கட்டுரைகளிலிருந்து:

இந்தக்‌ கேள்வியை உங்களிடமே கேட்டுக்‌ கொள்ளுங்கள்‌: “எவருமே செய்யாத ஒன்றைச்‌ செய்வதற்கு நான்‌ எப்பொழுதாவது முயன்று இருக்கிறேனா?” அதுதான்‌ தொடக்க முயற்சியை செயல்படுத்துவதற்கான ஆரம்ப நிலை.

தொடக்க முயற்சி என்பது உருவாக்கும்‌ சக்தியாகும்‌……அது விஷயங்களைப்‌ புது வழிகளில்‌ செய்ய முயல்வதும்‌, புது விஷயங்களை உருவாக்க முயல்வதும்‌ ஆகும்‌. தொடக்க முயற்சி என்பது உங்களுடைய பெரும்‌ சிருஷ்டி கர்த்தாவிடமிருந்து நேரடியாகப்‌ பெறப்பெற்ற அந்த சிருஷ்டிக்கும்‌ ஆற்றலே ஆகும்‌.

எப்பொழுதாவது நீங்கள்‌ அற்புதமான ஒன்றை உருவாக்க விரும்பினால்‌, அமைதியாக அமர்ந்து உங்களுக்குள்‌ உள்ள அந்த எல்லையற்ற, கண்டுபிடிக்கும்‌ திறன்‌ வாய்ந்த ஆக்கப்பூர்வ மகா சக்தியுடன்‌ நீங்கள்‌ தொடர்பு கொள்ளும்வரை தியானத்தில்‌ ஆழ்ந்து மூழ்குங்கள்‌. புதியதாக ஏதாவதொன்றை முயலுங்கள்‌, ஆனால்‌ நீங்கள்‌ செய்யும்‌ எதன்‌ பின்னாலும்‌ அந்த உயர்ந்த சிருஷ்டிக்கும்‌ மகா தத்துவம்‌ உள்ளது என்பதில்‌ எப்பொழுதும்‌ நிச்சயமாக இருங்கள்‌; மேலும்‌ அந்த சிருஷ்டிக்கும்‌ மகா தத்துவம்‌ அதை நிறைவேற்ற உங்களுக்கு உதவும்‌.

உங்களை பிரபஞ்ச சக்தியுடன்‌ இசைவித்துக்‌ கொள்ளுங்கள்‌; நீங்கள்‌ ஒரு தொழிற்‌ சாலையில்‌ வேலை செய்து கொண்டிருந்தாலும்‌ சரி, அல்லது வணிகவியல் மனிதர்களுடன்‌ கலந்து இருந்தாலும்‌ சரி, எப்பொழுதும்‌ வலியுறுத்திச்‌ சொல்லுங்கள்‌: “எனக்குள்‌ எல்லையற்ற பெரும்‌ படைப்புத்திறனுள்ள மகாசக்தி உள்ளது….. என்‌ ஆன்மாவின்‌ சக்தி வாய்ந்த பெரும்‌ ஆதாரமாகிய பரம்பொருளின்‌ ஆற்றல்‌ நான்‌. நான்‌ தொழில்‌ உலகிலும்‌, எண்ண உலகத்திலும்‌, அறிவு உலகிலும்‌‌ புதிய வெளிப்பாடுகளை உருவாக்குவேன்‌. நானும்‌, என்‌ தெய்வீகத்‌ தந்தையும்‌ ஒன்றேயாவோம்‌. படைப்புத்திறனுள்ள என்‌ தெய்வீகத்‌ தந்தையைப்‌ போலவே, என்னால்‌ கூட, நான்‌ விரும்பும்‌ எதையும்‌ படைக்க முடியும்‌.”

உயர்ந்தவர்களாக ஆவதற்கு; தொடக்க முயற்சியின்‌ இந்த அசாதாரண சக்தியை அடைவதற்கு ஒரு வழி இருக்கிறது. விவேகத்தின்‌ மூலமும்‌, சரியான பயிற்சியின்‌ மூலமும்‌, [யோகதா சத்சங்க]‌ ஸெல்‌ஃப்‌-ரியலைசேஷன் போதனைகளைப் பயிற்சி செய்வதன்‌ மூலமும்‌, நீங்கள்‌ அந்தத்‌ தொடக்க முயற்சி சக்தியை விருத்தி செய்து, அதை முழு உபயோகத்திற்குக்‌ கொணரலாம்‌.

எனது குரு ஸ்ரீ யுக்தேஸ்வர்‌ வழக்கமாக கூறுவது; “இதை நினைவில்‌ வைத்துக்‌ கொள்ளுங்கள்‌: நீங்கள்‌ உங்களுக்குள்‌ உண்மையிலேயே அந்தத்‌ தெய்வீக நம்பிக்கையைப்‌ பெற்றிருந்தால்‌ மற்றும்‌ நீங்கள்‌ விரும்பும்‌ ஒன்று பிரபஞ்சத்திலேயே இல்லை என்றால்‌, அது உங்களுக்காக சிருஷ்டிக்கப்படும்‌.” எனக்கு அகவலிமையில்‌, என்னுடைய மனஉறுதியின்‌ ஆன்மீகச்‌ சக்தியில்‌ வெல்ல முடியாத அந்த நம்பிக்கை இருந்தது. மேலும்‌ நான்‌ விரும்பிய பொருளுக்காக புதிய சந்தர்ப்பங்கள்‌ உருவாக்கப்பட்டன என்பதை நான்‌ எப்பொழுதும்‌ கண்டேன்‌.

உங்கள் இச்சா சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். நீங்கள் தீர்மானம் செய்து கொண்டு ஒரு சுடரொளி போல முன்னோக்கிச் சென்றால், உங்கள் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையும் அழிக்கப்படும்.

இவ்வகையான இச்சா சக்தியை—நல்லதை நிறைவேற்றுவதற்காக, தேவைப்படின்‌ சமுத்திரத்தையே வற்றிப்‌ போகச்‌ செய்யும்‌ இச்சா சக்தியை நீங்கள்‌ வளர்க்க வேண்டும்‌. மிகப்‌ பெரிய இச்சா சக்தி, தியானம் புரியப்‌ பயன்படுத்தப்பட வேண்டும்‌. இறைவன்‌ நமது தெய்வீக இச்சா சக்தியை நாம்‌ கண்டுபிடித்து, அதை அவனைக்‌ காண பயன்படுத்த வேண்டும்‌ என விழைகிறான்‌. இறைவனை-தேடும்‌ இந்த வலிமை வாய்ந்த இச்சா சக்தியை விருத்தி செய்யுங்கள்‌. ஆழ்ந்த அறிவு மிகுந்த சொற்கள்‌ உங்களுக்கு முக்தி அளிக்காது; மாறாக தியானத்தின்‌ மூலமான உங்கள்‌ சொந்த முயற்சிகள்‌ அதை அளிக்கும்‌.

YSS வலைப்பதிவில், இந்த பிறவியில் அவர் ஞானம் கற்பிக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று அவரது குரு கூறியபோது நீங்கள் அவர் தெய்வீக தொடக்க முயற்சி சக்தியை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதைப் பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு கதையை படிக்கலாம். இந்த நேரத்தில் அல்லது வேறு எந்த நேரத்திலும் உங்கள் சொந்த நோக்கங்களில் வெற்றிபெற நீங்கள் எந்த மனப்பான்யுடன் இருக்க வேண்டும் என்பது பற்றிய, இந்த இடுகையில் உள்ள அவரது ஆலோசனையைப் போலவே, பரமஹம்ஸரின் தனிப்பட்ட வரலாறு உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது.

இதைப் பகிர