ஆன்ம-எழுச்சியூட்டப்பட்ட சங்கல்பங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றக் கூடும் என்பது குறித்து பரமஹம்ஸ யோகானந்தர்

17 மே, 2024

ஓர் அறிமுகம்:

சங்கல்பங்கள் என்றால் என்ன? நேர்மறை மனநிலையில் தன்னை மையப்படுத்துவதற்கும் நல்வாழ்வின் ஆரோக்கிய உணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஒரு கருவியாக சங்கல்பங்கள் எவ்வளவு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் போற்றப்படுகின்றன என்பதை பார்க்கும்போது, இது ஒரு வேடிக்கையான கேள்வியாகத் தோன்றலாம்.

ஆனால் 1924 ஆம் ஆண்டில் தனது விரிவுரைகள் மற்றும் வகுப்புகளில் சங்கல்பங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பரமஹம்ஸ யோகானந்தர் சங்கல்பங்கள் குறித்த அத்தகைய ஆழந்த ஞானத்தை வழங்குவதால், அவ்வப்போது இவ்வாறு கேட்பது அறிவுறுத்தலாக இருக்கும்: “சங்கல்பங்கள் என்றால் உண்மையில் என்ன? எது அவற்றிற்கு சக்தி அளிக்கிறது? உடல், மனம் மற்றும் ஆன்மாவில் எனது உயர் ஆன்மத்தையும் முழுமையையும் உணர்ந்தறிய எனக்கு அவை எவ்வளவு தூரம் உதவ முடியும்?” மிக முக்கியமாக, “அவற்றை நான் எப்படி எனது ஆன்மீக பயிற்சியில் இணைக்க முடியும்?”

பரமஹம்ஸர் கூறினார்: வழக்கமான பிரார்த்தனை முறையை விட சங்கல்பங்கள் உயர்ந்தவை. அவை ஆன்மாவிடம் ஏற்கனவே உள்ளதையும்; மறதியின் காரணமாக தற்காலிகமாக இழந்திருப்பதையும் அதற்கு நினைவூட்டுகின்றன. சங்கல்பங்கள் சர்வ சக்தி வாய்ந்த உண்மையின் வாக்கியங்கள் மற்றும் யாசிக்கும் பிராத்தனையிலிருந்து மிகவும் வேறுபட்டவை. இரவலர்கள் தாம் விரும்புவதை தெய்வத் தந்தையிடமிருந்து அரிதாகவே பெறுகிறார்கள். ஆனால் இறைத் தொடர்பு வாயிலாக தன்னைத்தானே சீர்திருத்திக் கொண்டிருப்பவர் ‘இறைவனின் குமாரனாக’ ஒரு புதிய விழிப்புணர்வில் செயல்படுகிறார்; சங்கல்பங்களின் மூலம் தான் நாடும் எதையும் பெற அவரால் படைப்பு அதிர்வின் பிரபஞ்ச விதிகளை பயன்படுத்த முடியும்.

நாம் ஒவ்வொருவரும் — நாம் எவ்வளவு தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாலும் அல்லது அப்படி இருப்பதாக புரிந்துகொண்டாலும் — உண்மையில் “இறைவனுடன் பிரிக்க முடியாத ஒற்றுமையைக் கொண்டுள்ளோம்.” என்ற உண்மையிலிருந்து தான் சங்கல்பங்களுக்குப் பின்னால் உள்ள சக்தி வருகிறது என்று பரமஹம்ஸர் கூறினார்.

சங்கல்பங்கள் மூலம் நாம் படிப்படியாக உயர் உணர்வுநிலையுடன் — ஆன்மாவின் உள்ளுணர்வால் எழுப்பப்படும், பேரானந்தமய உணர்வுநிலை — தொடர்பு கொள்ளும்போது, மேலும் அந்த தெய்வீக விழிப்புணர்வு மற்றும் உத்தரவாதத்தை நம் வாழ்க்கையில் வெளிப்படுத்தும்போது, நாம் அந்த ஒற்றுமையை மேலும் மேலும் உணர முடியும். இதை செய்வதற்கு, இந்த மாத செய்திமடலின் ஊக்கத்துடன், பரமஹம்ஸரின் ஞானத்தை நீங்கள் பயிற்சி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் இதற்கு, கீழே காணப்படும் பரமஹம்ஸரின் ஞான வளத்தையும் மற்றும் நம் “சங்கல்பங்கள்” பக்கத்தில் உள்ளவற்றையும் நீங்கள் பயிற்சி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் படைப்புகளிலிருந்து:

இறைவனின் முழு நிறைவான எண்ணங்கள் பேரண்டத்தை படைத்து அதை சமநிலையிலும் சீரானதாகவும் வைத்திருப்பது போல, அவனது குழந்தைகளின் சரியான எண்ணங்கள், சரியாக சொல்லப்படும் வார்த்தைகளிலோ அல்லது சங்கல்பத்திலோ வெளிப்படும் போது, பேரண்டத்திலும் அவற்றை சொல்லும் தனிநபரிலும் ஒத்திசைவான, சீரான, நுட்பமான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. பின்னர் இந்த படைப்பு அதிர்வுகள், எல்லா சூழ்நிலைகளையும் ஒத்திசைவித்து விரும்பும் விளைவை வெளிப்படுத்தத் தேவையான சக்திகளைச் செயல்படுத்துகின்றன.

நேர்மை, திட நம்பிக்கை, விசுவாசம் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றால் நிரம்பிய வார்த்தைகள், மிகப் பெரிய அளவில் வெடிக்கக்கூடிய அதிர்வு வெடிகுண்டுகள் போன்றவை. அவை வெடிக்கும்போது இன்னல்களாகிய பாறைகளை சிதறடித்து விரும்பிய மாற்றங்களை உருவாக்குகின்றன.

அதனால்தான் விழிப்புணர்வு மனத்தின் அனைத்து சங்கல்பங்களும் அடிமன உணர்வுநிலையை ஊடுருவிச் செல்லும் அளவிற்கு ஆழ்ந்து செல்ல வேண்டும். இது விழிப்புணர்வு மனத்தில் தானாகவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு வலுவான உணர்வுபூர்வமான சங்கல்பங்கள், மனத்திலும் உடலிலும் அடிமன உணர்வுநிலை என்ற ஊடகத்தின் வாயிலாகச் செயல்படுகின்றன. இன்னும் வலிமையான சங்கல்பங்கள் அடிமன உணர்வுநிலை மட்டுமல்லாமல், அற்புத சக்திகளின் மாயக் களஞ்சியமான உயர் உணர்வுநிலை மனத்தையும் அடைன்றன.

எந்த ஒரு வார்த்தையும், தெளிவான உணர்தலுடனும், ஆழ்ந்த கவனத்துடனும் கூறப்படின் நடைமுறையில் பலிக்கத்தக்கதாகிறது…. ஒலியின் எல்லையற்ற சக்திகள், அனைத்து அணு ஆற்றல்களுக்கும் பின்னால் உள்ள பிரபஞ்ச அதிர்வுறும் சக்தியான ஓம் என்ற படைப்பாற்றல் வார்த்தையிலிருந்து பெறப்படுகின்றன. தியானம் மற்றும் உயர் உணர்வுநிலை உணர்வில் அந்த உன்னத ஓம் அதிர்வுடன் மனம் ஒன்றிணையும்போது இந்த தத்துவத்தின் முழு சக்தியையும் பயன்படுத்த முடியும்.

நேர்மையான சொற்கள் அல்லது சங்கல்பங்களை புரிதலுடனும், உணர்ச்சியுடனும், விருப்பத்துடனும், மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் போது அவை, சர்வ வியாபகப் பிரபஞ்ச அதிர்வு சக்தியை, உங்கள் இன்னல்களை நீக்க உதவத் தூண்டும் என்பது உறுதி. ஐயங்கள் எல்லாவற்றையும் துறந்து, அந்த மகா சக்தியிடம் எல்லையற்ற நம்பிக்கையுடன் முறையிடுங்கள்; இல்லையெனில் உங்கள் கவனம் எனும் அம்பு அதன் இலக்கிலிருந்து திசை திருப்பப்படும்.

எண்ணங்கள் திறம்பட செயல்படுவதற்கு அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு சரியாக பயன்படுத்த வேண்டும். எண்ணங்கள் முதலில் மனிதனின் மனதில் ஒரு பக்குவப்படாத அல்லது உள் வாங்கப்படாத வடிவத்தில் நுழைகின்றன; ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் அவற்றின் பொருள் கிரகிக்கப்பட வேண்டும். ஆன்மத் திட நம்பிக்கை இல்லாத ஒரு எண்ணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. அதனால் தான் இறைவனுடனான மனித ஒற்றுமை பிரிக்க இயலாது என்ற உண்மையின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் சங்கல்பங்களை பயன்படுத்துபவர்கள் அற்பமான பலன்களையே பெற்று, எண்ணங்களுக்கு குணமாக்கும் சக்தி இல்லை என முறையிடுகின்றனர்.

உரத்த குரலில், பின் மென் குரலில் மற்றும் இறுதியில் மனத்தளவில் சங்கல்பத்தைக் கூறுங்கள்: “தெய்வத் தந்தையே, நீயும் நானும் ஒன்றே.” நீங்கள் அவனுடன் ஒன்றென உணரும் வரை-உணர்வுபூர்வமான மனத்தின் ஓர் அறிவுணர்வாகவோ அல்லது அடிமனத்தின் கற்பனையாகவோ மட்டுமே அல்லாது, ஆனால் ஓர் உயர் உணர்வுநிலையின் திட நம்பிக்கையாக உணரும்வரை-சங்கல்பத்தை மீண்டும் மீண்டும் கூறுங்கள். சங்கல்பத்தின் வார்த்தைகளை உள்ளுணர்வு ஞானம் எனும் அறிவுத்தீயில் உருக வையுங்கள். பின் அந்த சுடர்விட்டெரியும் ஆத்மார்த்தமான சங்கல்பங்களை உங்கள் அமைதியான, நிதானமான, உறுதியான நம்பிக்கை எனும் அச்சில் ஊற்றுங்கள். அங்கு உங்கள் பக்குவமற்ற வார்த்தைகள் பேரண்டத் தெய்வத்தின் திருவடிகளில் இடுவதற்கான ஓர் ஒளிரும் பொன் மாலை அர்ப்பணிப்பாக மாறும்.

1940 இல் கலிபோர்னியா, என்சினிடாஸில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியான பரமஹம்ஸ யோகானந்தரின் “சங்கல்பங்கள் மூலமாக உங்கள் ஆழ் மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குதல்” என்பதை YSS வலைப்பதிவில் நீங்கள் படிக்கலாம். சந்தேகம் மற்றும் சிரமங்களை சமாளிக்க உங்களுக்கு உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக சங்கல்பங்கள் எவ்வாறு இருக்க முடியும் என்பதைப் பற்றிய அதிக ஞானத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள். இறுதியில் இறைப் பேரின்பத்தை உணருங்கள்.

இதைப் பகிர