சமீபத்திய YSS/SRF சன்னியாசத்திற்கான சபதங்கள் ஏற்றல்-ஒரு பண்டைய பாரம்பரியத்தை பின்பற்றுதல்

9 மே, 2024

ஜூலை 1915இல், பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவில் செராம்பூர் நகரில் அவரது குரு ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரிடமிருந்து சன்னியாசத்திற்கான சபதங்களை ஏற்று, இந்தியாவின் பண்டைய ‘ஸ்வாமி’ சன்னியாசப் பரம்பரையில் தீட்சை பெற்றார். இந்நிகழ்ச்சி இருபத்திரெண்டு வயதே ஆன முகுந்தலால் கோஷின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை குறிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் — அப்பொழுது அவர் ஸ்வாமி யோகானந்த கிரி ஆகியிருந்தார் — அது அவர் ஏற்படுத்திய சன்னியாசப் பரம்பரையின் காரணத்தினால் மட்டுமல்ல, 20ம் நூற்றாண்டிலும் மற்றும் அதற்கு அப்பாலும் உலக ஆன்மீக எழுச்சியில் அவர் ஏற்படுத்த இருக்கும் தாக்கத்திற்கு முன்னறிவிப்பு செய்வதாகவும் அமைந்தது.

பரமஹம்ஸ யோகானந்தர் இணைந்த பண்டைய ஸ்வாமி பரம்பரை இன்று உலகெங்கிலும் உள்ள நாடுகளைச் சேர்ந்த சன்னியாசிகளைக் கொண்ட யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாச சமூகத்தில் செழித்து வளர்கிறது. இந்தச் சன்னியாசப் பரம்பரை YSS/SRF வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டு, அனைத்து நாடுகளுக்கிடையே யோகத்தைப் பரவலாகப் பரப்புவதற்கும் உதவுகிறது.

சமீபத்திய சன்னியாசத்திற்கான சபதம் ஏற்பு நிகழ்ச்சிகள்

மார்ச் 21, 2024 வியாழக்கிழமை, லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள செல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் சர்வதேச தலைமையகத்தில் உள்ள பிரதான தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு சன்னியாசிகள் மற்றும் பதினொன்று ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் சன்னியாசிகள், YSS/SRF தலைவரும் ஆன்மீகத் முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களிடமிருந்து சன்னியாசத்தின் இறுதி சபதங்கள் ஏற்று தீட்சை பெற்றனர்.

பரமஹம்ஸர் தனது ஒரு யோகியின் சுயசரிதம்-இல் (“நான் ஸ்வாமி பரம்பரையில் சன்னியாசி ஆகிறேன்” என்ற அத்தியாயத்தில்) விளக்கியுள்ளபடி, ஒரு சன்னியாசி சன்னியாசத்திற்கான இறுதி சபதங்களை எடுக்கும்போது (பல வருட துறவற பயிற்சி மற்றும் சுய-ஒழுக்கத்திற்குப் பிறகு), ஒரு குறிப்பிட்ட தெய்வீக குணத்தின் மூலம் இறை ஐக்கியத்தை அல்லது எல்லையற்ற பேரின்பத்தை அடைவதற்கான விருப்பத்தைக் குறிக்கும் ஒரு புதிய பெயர் அவருக்கு வழங்கப்படுகிறது.

மார்ச் 21 அன்று, சபத நிகழ்ச்சி நிறைவடைந்த சிறிது நேரத்தில் எடுக்கப்பட்ட, புதிய சன்னியாசிகள் படம் கீழே உள்ளது.

நின்று கொண்டிருப்பவர்கள், இடமிருந்து: ஸ்வாமிகள் அஸிமானந்தா, கணேஷானந்தா, மற்றும் போதானந்தா; YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்தா கிரி; ஸ்வாமிகள் சஞ்சயானந்தா, சாந்திமோய், புண்யானந்தா. அமர்ந்திருப்பவர்கள், இடமிருந்து: ஸ்வாமி சங்கரானந்தா; சரணானந்தா, யோகேஸானந்தா, சாக்யானந்தா, வித்யானந்தா, மைத்ரிமோய், மற்றும் நிர்மலானந்தா.

சன்னியாசிகளின் புதிய பெயர்களின் அர்த்தங்கள்

ஸ்வாமி அஸிமானந்தா: எல்லையற்றவனுடன் ஒன்றுதல் மூலம் ஆனந்தம்; ஸ்வாமி கணேஷானந்தா: “தடைகளை நீக்குபவர்”, ஞானம் மற்றும் வெற்றியின் அதிபதி மீதான பக்தியின் மூலம் ஆனந்தம்; ஸ்வாமி போதானந்தா: இறைவனின் விழிப்புணர்வின் மூலம் பேரின்பம்; ஸ்வாமி சஞ்சயானந்தா: தெய்வீக உள்முகநோக்கு நுண்ணறிவின் மூலம் தன்னை வெல்வதால் பெறும் ஆனந்தம்; ஸ்வாமி சாந்திமோய்: சாந்தி, தெய்வீக அமைதியால் நிரப்பப்பட்ட ஒருவர் (அல்லது இருக்க விரும்புபவர்); ஸ்வாமி புண்யானந்தா: புண்ணியச் செயல்களால் ஆனந்தம்; ஸ்வாமி சங்கரானந்தா: அருளார்ந்த இறைவன் மூலம் ஆனந்தம்; ஸ்வாமி சரணானந்தா: இறைவனில் அடைக்கலம் அல்லது புகலிடம் புகுவதன் மூலம் ஆனந்தம்; ஸ்வாமி யோகேஸானந்தா: யோகத் தேர்ச்சி மூலம் ஆனந்தம்; ஸ்வாமி சாக்யானந்தா: ஒருவரின் நெருங்கிய நண்பனாக இறைவனை நேசிப்பதன் மூலம் ஆனந்தம்; ஸ்வாமி வித்யானந்தா: தெய்வீக ஞானம் மற்றும் இறை அறிதல் மூலம் ஆனந்தம்; ஸ்வாமி மைத்ரிமோய்: அன்புடன் கூடிய அருளால் நிறைந்தவர்; ஸ்வாமி நிர்மலானந்தா: களங்கமற்ற தன்மையின் மூலம் ஆனந்தம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் பணியை முன்னெடுத்துச் செல்லுதல்

அன்றாட கிரியா யோக தியான பயிற்சிக்குக் கூடுதலாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள் பரமஹம்ஸரின் பணிகளை பல்வேறு திறன்களில் சேவையாற்றுவதன் மூலம் மேலும் முன்னெடுத்து செல்கின்றனர் – இதில், இந்தியாவில் பல் வேறு பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் பொது சொற்பொழிவு சுற்றுப்பயணங்கள் மற்றும் வகுப்புகள் நடத்துவது; சாதனா சங்கங்களில் உரையாற்றுவது; விரிவாக்க நிகழ்வுகளில் பொதுமக்களிடம் கொண்டு செல்வது; அலுவலகப் பணியாற்றுவது; சொஸைடி-இன் ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் ஏகாந்தவாச மையங்களை நிர்வகித்தல்; YSS புத்தகங்கள் மற்றும் பதிவுகளின் வெளியீடு மற்றும் விநியோகத்தை மேற்பார்வை செய்தல்; மற்றும் ஆன்மீக விஷயங்களில் சாதகர்களுக்கு ஆலோசனை வழங்குதல் ஆகியவை அடங்கும்.

நம் வலைத்தளத்தின் “சன்னியாச பரம்பரை” பிரிவில், பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் சன்னியாச பயணத்தின் வெவ்வேறு படிகளைப் பற்றி நீங்கள் மேலும் அறியலாம்.

இதைப் பகிர